Breaking News
Loading...
Friday, December 25, 2015

வள்ளுவன் வாக்கு!

Friday, December 25, 2015
கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மனிதர்கள், தன்னுடைய குற்றம் குறைகளைத் தாமே நீக்கிக் கொள்ளுவார்கள்;

 நீக்கிக் கொள்ள வேண்டும்.

அறிவில்லாத மனிதர்களுக்கு, குறைகளே நிறைகளாகத் தோன்றும். குற்றமே குணமாகத் தோன்றும்.

ஆக, தன் குற்றம் களையவும், பிறர் குற்றம் களையவும் கல்வியும், அறிவும் அவசியம்.

பாத்திரத்தின் அழுக்கால் அதில் வாங்கிய பாலும் கெட்டு விடுவதைப் போல , மண்டைக் கனம் , கோபம் , எப்போது பார்த்தாலும் எரிந்து விழும் தன்மை, சிறுமையான குணங்கள், இவ்ற்றால் தனி மனித வாழ்வும் பாழாகி விடும்.

 இதனை வள்ளுவர் 

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து 

என்று பாடுகிறார்.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

இவறல் என்பது கஞ்சத்தனம். 

மாண்பிறந்த மானம் என்பது உச்ச பட்ச அகங்காரம்தான். மனிதனுக்கு 

மான உணர்ச்சி வேண்டும். அதுவே அளவுக்கு மீறிய, தர்மத்திற்கு 

அடங்காத உணர்ச்சியாக இருந்தால் குற்றம்தானே? அது கூடாது 

என்கிறார் வள்ளுவர். மாணா உவகை என்பது, அதிகமான குடிபோதை.

 ஒருவன் சற்று உயர்ந்த பதவிக்கு வந்தால் மாவீரனே, சூரனே என்று 

கொம்பு சீவி விடுவது மாதிரி, 

குற்றங்களையே குணமாகச் சித்திரிக்கும் இதுபோன்ற ஆட்கள் சுற்றிலும் இருந்தால், எந்தப் பெரிய மனிதனும் தன்னுடைய குறைகளை, தானே திருத்த வழியில்லாமல்தான் போகும்.

இன்னும் சிலபேருக்கு தன்னிடம் உள்ள குறையை உணர முடிந்தாலும், திருந்த முடிவதில்லை.

 குற்றம் குறை இல்லாத மனிதன் யார்? நாமென்ன கடவுளா? இப்படியெல்லாம் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளுவார்கள் சிலபேர்.

வள்ளுவர் அடுத்த குறளில் சொல்லுகிறார்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழி நாணுவார்

பழிபாபங்களுக்கு அஞ்சுகிறவர்கள், தங்களிடம் தினையளவே குற்றமிருந்தாலும், அதைப் பனையளவாகக் கருதி அதை நீக்கத் துடிப்பார்கள்.

பொற்கைப் பாண்டியன் தான் செய்த சிறு பிழைக்காக தன் கையை வெட்டி, தனக்கே தண்டனை கொடுத்துக் கொண்டான்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை

குற்றம் வராது காப்பதே குறிக்கோளாகக் கொண்டு ஒருவன் வாழவேண்டும்.

 காரணம் தன் குற்றங்களே தனக்கு அழிவைத் தரும் பகைவனாகும்.
வெளியே இருக்கும் பகைவனை விடவும் உள்ளே இருக்கும் பகைவனுக்குத் தான் ஒருவன் அஞ்சவேண்டும்.

 தன்னுடைய குற்றங்களே வெளியே பகைவனை உண்டாக்கிவிடும்.

அலட்சியமாய் ஒரு பார்வை எவர்மீது நீ வீசினாலும், அதன் பலன் திரும்பிவரும்.

ஆக, தன்னிடம் சிறு பிழையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

வந்துவிட்டால்? வள்ளுவர் சொல்லுகிறார்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் வருவதற்கு முன்னே அது வராமல் காத்துக் கொள்ள வேண்டும். 

வந்துவிட்டால், நெருப்புக்கு முன்னால் வைத்த வைக்கோல் போல அவன் வாழ்க்கையும் வெந்து சாம்பலாகிவிடும்.

குற்றம் வருவதற்கு முன்பே ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிவுதான் என்பதற்கு எத்தனை மனிதர்களின் அனுபவங்கள் இங்கே இருக்கின்ற?

ஒரு சிறு சறுக்கல்; யானைக்கு மரணம். ஓரடி தவறாக வைத்து, தடதட வென்று சரிந்து போனவர்கள் எத்தனை பேர்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தன்னிடம் குற்றம் உள்ளபோது, அடுத்தவர்களின் குற்றத்தைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியாது போவது இன்னும் ஓர் அவலம்.

அதையும் வள்ளுவர் சொல்லுகிறார்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

தன்னுடைய குற்றங்களை முதலில் நீக்கிவிட்டு, பிறகு அடுத்தவர்களுடைய குற்றத்தை நீக்கினால் மன்னவனுக்கு ஒரு குற்றமும் வராது.

தன்னுடைய குற்றத்தை நீக்கிக் கொள்ளாத போது, பிறருக்கு நீதி சொல்லுவது நகைச் சுவையைத்தான் உண்டாக்கும்.

பிறர்குற்றம் நீக்கும் முன்னே தன் குற்றம் நீக்கு. முதலில் உன் முதுகைப் பார் என்பது கிராமத்துப் பழமொழி.

அடுத்தவனைக் குற்றம் சொல்ல சுட்டு விரலை நீ நீட்டும் போது, மற்ற விரல்கள் உன்னைச் சுட்டுகின்றன என்கிறது ஒரு பாட்டு.

செல்வம் இருக்கும் போதே அதை வைத்துச் செய்ய வேண்டிய நற் செயல்களைச் செய்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவன் செல்வம் அவனுக்கு உயர்வு தராமல் வீணாக அழிந்துவிடும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவது ஒன்றன்று.

பொருள் பற்று கொள்ளும் உள்ளம் கஞ்சத்தனமான உள்ளம் எனப்படும். 

இது ஒரு குற்றம்தான். ஆனால் குற்றங்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கதல்ல. இதுவே ஒரு பெருங்குற்றம்.

வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

எப்போதும் தன்னை வியந்து பேசுவதும், நன்மை தராத செயல்களைச் செய்ய நினைப்பதும் கூடாது.

எப்போதும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுவது, உருப்படியில்லாத திட்டங்களைத் தீட்டிவிட்டு, அதையும் ஆகா ஓகோ எனப்புகழ்வது இக்காலத்தில் காணப்படும் காட்சி.

தன்னை வியப்பதும், தன் செயல்களைத் தானே புகழ்வதும் அகங்கார மமகார வகையிலடங்கும். இக்குற்றங்கள்  ஆகாது.

காதல் காதல றியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

விரும்பத்தகாதவற்றில் விருப்பம் உண்டாகாதவாறு ஏன் அதைப் பற்றி அறியாமலே கூட தன்னைக் காத்து உய்த்துக் கொண்டால் பகைவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் பயனற்றுப் போகும்.

மது, மாது, சூது ஆகியவற்றில் அறியாமை இருப்பினும் பரவாயில்லை. அது நமக்கு உய்வே தரும்.

பகைவரின் சூழ்ச்சி இந்த மூன்றை வைத்தே பெரும்பாலும் நிகழும். 

காமம் என்னும் குற்றம் நீங்கினால் மனிதமூளை தெளிவாக இருக்கும். மதி தெளிந்தவன் முன் எந்தச் சூழ்ச்சி எடுபடும்? 

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer