தினைப் பாயசம்
தேவையானவை: தினை - 250 கிராம், பனை வெல்லம் - 200 கிராம், பால் - 250 மி.லி., முந்திரிப் பருப்பு - 15, ஏலக்காய் - 5, உலர்ந்த திராட்சை - 15, நெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.
பலன்கள்: இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.
சோளப் பணியாரம்
தேவையானவை: சோளம் - ஒரு கோப்பை, உளுந்து - கால் கோப்பை, வெந்தயம் - சிறிதளவு, சின்ன வெங்காயம் - ஒரு கையளவு, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, கல் உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம்.
மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.
மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.
பலன்கள்: உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. 'என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.
குறிப்பு: ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப்பவர்கள் மட்டும், சோளம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!