Breaking News
Loading...
Thursday, January 7, 2016

அலோபதி x மாற்றுமருத்துவம் ஒரு அலசல் - 2

Thursday, January 07, 2016
தமிழ் மற்றும் தெலுங்குப் பகுதிகளில் பல்லாண்டுக் காலமாக வழங்கிவந்த நாட்டு மருத்துவத்திற்குச் சித்த மருத்துவம் என்ற பெயர் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கக்கூடும். 

ஆலய, ஆதீன, மத அமைப்புகளை எதிர்த்தவர்களும் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை வென்று அழியா உடலோடு விளங்க சுய பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களும் சித்தர்கள் என்று தென்னாட்டில் வழங்கப்படுகிறார்கள். 

பிணி, மூப்பு, சாக்காடு இவை உடலை அண்டாதிருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளோடு அதற்கான மூலிகைகளையும் சித்தர்கள் ஆய்ந்தறிந்து வைத்திருந்தனர். 

மூலிகைகள் காலத்தால் அழியக் கூடியவை என்பதால் அழியாத கனிம, உலோகப் பொருள்களைப் பதப்படுத்தி உட்கொண்டு உடலுக்கு உரமூட்டும் முறைகளைச் சித்தர்கள் கையாண்டனர். 

கோட்பாடுகளும் சிகிச்சை விதிகளும் ஆயுர்வேத முறைக்கும் சித்த மருத்துவத்திற்கும் பொதுவானதென்றாலும் கனிம உலோகச் சரக்குகளைப் பண்படுத்தி மருந்தாக்கும் உத்தி சித்த மருத்துவத்தின் தனிச் சிறப்பாக இருந்தது.

நடைமுறையில் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் குருகுல வழியில் பரவின. 

நாட்டுவைத்தியமென்று வழங்கிவந்ததில் பொதுமக்கள் ஆயுர்வேதத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் பெரிய வித்தியாசம் பார்க்க வில்லை எனத் தெரிகிறது.

சித்த மருத்துவத்தின் நோய் பற்றிய கோட்பாடுகள், உடற்கூறு பற்றிய அணுகுமுறை, மற்றும் நோயைக் கண்டறியும் திறன்கள் யாவும் நோயாளியை மையமாகக்கொண்டு அமைந்துள்ளன. 

சுய அறிவைப் போற்றும் சித்தர்கள் தத்துவம், நோயுற்றவரும் நோயறிபவராகும் வாய்ப்பை அளிக்கிறது. 

எனவே அலோபதிபோல நோயாளி தன் நோயை உணரும் குணத்திற்கும் மருத்துவர் அறியும் குறிகளுக்கும் இடைவெளி சித்த மருத்துவத்தில் ஏற்படாது.

 தனது சுய அனுபவத்தால் மட்டுமே சித்திகளை அடைய முடியும்,

 ஏட்டில் படித்தறிந்தோ பிறர் சொல்லிக்கொடுத்தோ பாரம் பரியச் சடங்களுக்கு உட்பட்டோ மெய்ஞானம் வருவதில்லை என்பது சித்தர்களின் தத்துவச் சிறப்பு. 

சித்தர்களின் தத்துவப் பாடல்கள் யாவும் ஆண் மையக் கண்ணோட்டம் கொண்டவை. ஆண்கள் சித்தியடைவதைத் தடுக்கும் போகப் பொருள்களாகவே பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.

உணர்வும் அறிவும்

இந்திய ஆன்மிக வரலாற்றிலேயே எங்கும் காணாத அளவில் உடம்பு பற்றிய கவனம் சித்த தத்துவத்தில் தெரிகிறது.

 உடலற்ற ஆன்மாவின் விடுதலை அவர்களது குறிக்கோளாக இருக்கவில்லை. பிணி, மூப்பு, சாக்காடு இவற்றிலிருந்து இந்த உடம்பைப் பாதுகாத்து அதை அழியாப் பொருளாக்குவது எப்படி என்பதே சித்தர்களின் ஞானத்தேடல்களின் முக்கிய இலக்கு.

சித்தர்கள் ஐந்து வகையான உடம்புகள் அல்லது கோசங்கள் பற்றிப் பேசியுள்ளார்கள். 

எந்தப் பொருளால் ஊட்டம் பெறுகிறதோ அதைப் பொறுத்து உடம்பின் நியதிகள் அமைகின்றன. 

உணவால் ஆனது இந்த ஸ்தூல உடம்பு. 

மூச்சுக் காற்றால் ஆன வளியின் பாதை உறுப்புகளான வளி உடம்பு. காற்று சென்று திரும்பும் உடற்துவாரங்கள், 

அது போகும் குழாய்கள் மற்றும் அது இயக்கும் தொழில் உறுப்புகள்/கர்மேந்திரியங்களின் நியதிகளுக்கு உட்பட்டது.

வர்ம சிகிச்சை, நுட வைத்தியம், நாடி சாஸ்திரம் மற்றும் பிராணாயாம முறைகள் யாவும் வளி உடம்பின் செயல்பாட்டின் அடிப்படையில் உருவாயின. 

மூச்சுக்காற்றின் நியதிகளை உயிரற்ற சடலத்தில் படிக்க முடியாது;

 உயிருள்ள மனிதன் தான் சித்த மருத்துவத்தின் அளவு கோல். 

அதனால்தான் சவத்தை அறுத்து உள் உறுப்புகளைக் காணுதல் சித்த மருத்துவத்திற்குப் பிரதானமல்ல. 

அடுத்தது, நினைவுகளாலும் சிந்தனைகளாலும் ஊட்டம் பெறும் மன உடம்பு. இதைக் கடந்து அறிவுடம்பு மற்றும் இவை யாவும் இயைந்த இன்ப உடம்பு என்று ஐந்து வகை உடம்புகளைச் சித்தர்கள் வரையறுத்தனர். 

இவற்றுக்குள்ள தொடர்பு, இப்படிமங்களை ஒருங்கிணைக்கும் வழிகள் ஆகியவை சித்தர்களின் மெய்ஞானத் தேடல்களாக இருந்தன. என்றாலும் இம்மருத்துவம் முதல் மூன்று உடம்புகளை மட்டுமே தீண்ட இயலும்.

பஞ்சபூதக்கொள்கையும் நோய் பற்றிய கோட்பாடுகளும்

ஆயுர்வேத, சித்த மருத்துவம் இரண்டிற்கும் அடிப்படையான கோட்பாடு பஞ்சபூதக்கொள்கை. 

உலகிலுள்ள பொருள்கள் அதாவது பதார்த்தங்கள் யாவும் ஐந்து பூதங்களாலானவை.

 மண், அனல், புனல், வளி, வெளி ஆகியவற்றின் கூட்டுச்சேர்க்கையால் பருப்பொருள்களும் கண்ணுக்குப் புலப்படாத - ஆனால் செயல்பாடுகளையுடைய - மனம் போன்ற சூட்சுமப் பொருள்களும் ஆக்கப்பட்டுள்ளன. 

ஆக உடலும் மனமும் இயைந்த மனிதனும் இந்தச் சரீரத்தின் வெளியே உள்ள இயற்கையும் ஒரே மாதிரியான பொருள்களாலானவை.

பஞ்சபூதங்களாலான உலகை மனிதன் தன் ஐம்புலன்களால் அறிகிறான். 

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் முறையே ஊறு (ஸ்பரிசம்), சுவை (ரசம்), ஒளி (ரூபம்), நாற்றம் (கந்தம்), ஓசை (சப்தம்) ஆகிய பொருள்களைக் கிரகிக்க முடிகிறது. 

ஆனால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் வெறும் உறுப்புகள்தாம்; 

அவற்றால் தம்மைக்கூடத் தாமாக அறிய முடியாது. 

பொறிகளுடன் உள்ளுறையும் அந்தக்கரணமாகிய மனம் பொருந்தினால்தான் உணர்வும் நினைவும் ஏற்படும்.

மனிதனுக்கு அந்தக்கரணங்கள் நான்கு - மனம், புத்தி, அகங்காரம், சித்தம். 

அதாவது சூட்சுமமாகிய மனம் அதன் செயலைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்படும். 

மனம் நினைக்கும்,

 புத்தி ஒப்பிட்டு விசாரிக்கும், 

அகங்காரம் முனைப்பைத் தரும், 

சித்தம் செயலை முடிக்கும். 

இவற்றை இணைப்பது அறிவு. 

வலி வேதனை ஆகியவற்றை உறுப்புகள் உணர முடியாது. 

ஏனென்றால் அவை அசித்து, அந்தக்கரணங்களின் ஈடுபாட்டால் உறுப்புகளால் ஏற்படும் வாதையை உணர முடிகிறது. 

ஆக நோயுற்ற ஒவ்வொருவனும் ஓரளவுக்கு நோயறிபவனாக இருக்க முடியும். 

சாமானியர்கள்கூட உறுப்புகளின் இயக்கங்களான மூச்சுவிடுதல், செரிமானம், வெளியேற்றம், வலி போன்ற செயல்பாடுகளை நுட்பமாகக் கவனித்துவருவதால் ஓரளவு உணர முடியும். 

பல்வேறு உணவுகள், பழக்கவழக்கங்கள், கால மாறுபாடுகள் ஏற்படுத்தும் உடல் மாறுதல்களைத் தெரிந்துகொள்வதும் சாத்தியமாகும்; இதற்குப் பழக்கம் தேவை. 

அந்தக்கரணங்களைக் கட்டுப்பாட்டாலும் பழக்கத்தாலும் கூர்மையாக வைத்துக்கொள்ளுதல் யாவருக்கும் சாத்தியமே. 

இத்தகைய கோட்பாடு நோயாளிக்கும் மருத்துவனுக்கும் அறிதலில் சமமான தொடக்க நிலையைக் கொடுக்கிறது.

உயிரை சரீரம், பொறிகள், மனம், அறிவு இவை யாவும் இணைந்திருக்கும் நிலையாகச் சித்தர்கள் கண்டதாலும் உடம்பைப் பல படிமங்களைக் கொண்டதாகக் கருதியதாலும் நோயை வெறும் பிண்டத்தாலான உறுப்புகளின் கோளாறாக அவர்கள் காணவில்லை.

 நோய்க்கூறு பற்றிய திரிதோஷக் கொள்கையின்படி தன் ஸ்தூல உடலில் உள்ள ஏழு தாதுக்கள் - அதாவது ரசம், ரத்தம், மாமிசம், எலும்பு, கொழுப்பு, மூளை (bone marrow) மற்றும் சுக்கிலம் ஆகியவை - தம் நியதியின் குறியீட்டிலிருந்து தோஷத்தால் வேறுபட்டிருப்பதை ஒருவன் நோய் என்று உணருவதாகச் சொல்கிறது. 

தோஷம் என்பது உணவு, சூழல் போன்ற பருப்பொருள்களின் குறை, மிகையால் மட்டுமன்றிக் கவலை, பயம் போன்ற உணர்ச்சிகளின் வீச்சாலும் ஏற்படுகிறது. பின்னர் தாதுக்களைப் பாதிக்கிறது. 

ஆக நோயை வரையறுப்பதிலேயே அதை முதலில் தனதுடலில் உணருபவனாகிய நோயாளியின் மனமும் அனுபவமும் இடம்பெறுகின்றன.

சித்த மருத்துவத் தத்துவக் கொள்கைகளும் நோய் பற்றிய கோட்பாடுகளும் நோயுறுபவனின் நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதைப் பார்த்தோம்.

 இனி இது நோயாளிக்கும் மருத்துவனுக்கும் உள்ள உறவிலும், சிகிச்சையிலும் எப்படி வெளிப்படுகிறது எனப் பார்க்கலாம்.

நோயறிதல்: மருத்துவன் நிலை

அடிப்படைக் கொள்கைகளில் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் ஒன்றாயினும் சித்தர் மெய்ஞானத் தத்துவங்களின் பாதிப்பைச் சிகிச்சை முறைகளிலும் நோய் நாடலிலும் நிறையவே காணலாம். 

நோயின் தன்மையைக் கண்டறிய நாடி பார்ப்பதைப் பல மருத்துவ முறைகள் - ஆரம்ப கால அலோபதி, சீன மருத்துவம், யுனானி முதலானவை - வெவ்வேறு அளவில் பயன்படுத்தியுள்ளன. 

சித்த மருத்துவத்தில் நாடி பார்த்தல் மிக முக்கியமானது. 

கிராமப்புறங்களிலுள்ள விஷக்கடி வைத்தியர்கள் நாடி பிடித்து நோயாளி பாம்புக்கடியால் மயங்கியுள்ளாரா பயத்தினாலா என்றும் உயிர்பிழைப்பாரா மாட்டாரா என்றும் சொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். 

அதாவது ஸ்தூல உடலின் நிலையை மட்டுமன்றி வளி உடம்பு மற்றும் மனவுடம்பு ஆகியவற்றின் தன்மையையும் காட்டக் கூடியதாகச் சித்தர்கள் நாடிபார்த்தலை வளர்த்து வைத்திருந்தனர்.

நோயாளியின் நாடியைப் பரிசோதிப்பதில் மூன்று நிலைகளை வைத்தியன் அடைய வேண்டும் என்று தமிழ்நாட்டில் சித்த வைத்தியர்களிடையே ஆய்வுகள் செய்த மானுடவியலாளர் வாலண்டைன் டெனியல் கூறுகிறார். 

ஏழு தாதுக்களால் ஆன இந்த ஸ்தூல உடலிலுள்ள தோஷங்களின் பிறழ்வுகளை அறிதல் 
முதலாவதாகிய ஸ்தூல நிலை. 

அடுத்தது உள்நிலை; இதில் நோயாளியின் கைகளைப் பிடித்திருக்கும் வைத்தியன் தனது நாடியின் நிலை பற்றிய உணர்வை அடைய வேண்டும்.

மூன்றாவது சமநிலை; இதில் வைத்தியன் தனது நாடியின் நடை மற்றும் எடை இரண்டையும் நோயாளியின் நாடியோடு இணைக்க வேண்டும். இந்நிலையில்தான் நோயாளியின் தோஷ நிலைப்பாட்டை வைத்தியன் அறிந்துகொண்டதாகச் சொல்ல முடியும்.

 நோயாளியுடன் நாடியைப் பகிர்ந்துகொள்ளுவது சில கணங்களே ஆனாலும், இதற்குப் பிறகுதான் வைத்தியன் தான் கற்ற சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

நோயாளியின் அனுபவத்திற்கும் வைத்தியனின் அறிவுக்குமுள்ள இடைவெளியை ஈடுசெய்வதில் சித்த மருத்துவ நாடிப் பரிசோதனை எப்படி அமைந்துள்ளது என்று பார்த்தோம். 

இந்த அளவு நாடியை அறியப் பல ஆண்டுகள் கடுமையான பயிற்சி தேவை.

 தவிர வைத்தியன் ஓரளவு அப்பியாசம் செய்தவண்ணம் இருக்க வேண்டும்;

 வாய்மை போன்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 ஒவ்வொரு வைத்தியனும் இப்படி இருந்தாகச் சொல்ல முடியாது. 

எல்லா மருத்துவ முறைகளிலும் உண்மையானவர்களும் போலியானவர்களும் இருக்கிறார்கள்.

 சித்த மருத்துவப் படிப்பிலும் நாடிப் பரிசோதனை விடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் மருத்துவ நூல்களில் பாதிக்கப்பட்ட திரிதோஷங்களின் அடிப்படையில் நோய்கள் சீராகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன.

 நோய்களின் விவரங்கள் நோயாளியின் அனுபவத்திலிருப்பதுபோல வருணிக்கப்பட்டுள்ளது. 

சான்றாக, வாதம், பித்தம், கபம் ஆகிய காரணிகளின் கீழ் வயிற்று வலி, வயிற்றுப் பொறுமல், வயிற்று எரிச்சல், வயிற்று இசிவு என்று வாதையின் தன்மையை விளக்கும் பாடல்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

 பலவித வலிகள் அவற்றின் காரணமான தோஷங்கள், அவற்றுக்குரிய சிகிச்சை முறைகள் என்று நூல்கள் அமைந்துள்ளன. 

நோயாளியின் உடலில் நோய் வெளிப்படும் போது அவருக்கு அது ஏற்படுத்தும் உபாதைகளை முறைப்படி பாகுபடுத்தும் கட்டமைப்பை நூல்களில் காணலாம். 

பால வாகடத் திரட்டு என்னும் குழந்தை நோய் குறித்த நூலில் ஸ்லேத்தும மாந்தம் என்னும் நோய்க்குக் ‘குழந்தை கையில் நிற்காது தரையில் பிரண்டழும்’ என்பது ஓர் அறிகுறியாகக் கூறப்பட்டுள்ளது. நோய்க்குறிகளில் குழந்தை அழும் தன்மை - அதாவது சாமானியமாகத் தாய்மார்கள் கவனிக்கக்கூடிய அறிகுறி - சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர மருத்துவ நூல்கள் செய்யுள் வடிவத்தில் இருந்தாலும், நோயின் தன்மையை விவரிக்கும் சொற்றொடர்கள் மக்கள் பயன்படுத்தும் வழக்குகளோடு ஒத்திருக்கின்றன. 

வைத்தியம் பயில்பவர் இந்தச் செய்யுள்களை மனப்பாடம் செய்ய வேண்டும். 

96 கண் நோய்களென்றால் செய்யுளில் உள்ள அவற்றின் முக்கிய அறிகுறிகளை மனனம்செய்வது பயிற்சியின் முதல் கட்டம்.

 பின்னர் நோயாளியைப் பார்த்து அவற்றை நடைமுறையில் கண்டறிய வேண்டும். 

ஏட்டில் படித்தலுக்கும் அசலில் பார்த்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை நோயாளியின் கண்ணோட்டத்தில் நோய்களை வகுத்ததால் குறைக்க முடிகிறது.

சான்றாக உலகமெங்கும் பரவலாகப் பெண்களுக்கு - அதிலும் உடலுழைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு - தொடர்ச்சியாக ஏற்படும் இடுப்பு வலி என்பது வாதை மிகுதியாயினும் அதன் குறியீடுகளைத் தொழில்நுட்பக்கருவிகள் காட்டாததால் அது உளவியல் நோயாகக் கருதப்பட்டு வலிநிவாரணிகள் கொடுக்கப்படுவதைப் பெண்ணிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதனால் கோளாறு இன்னதென்று தெரியாமல் வலிநிவாரணிகளைக் கொடுப்பதால் தூக்க மாத்திரைகள், வலிநிவாரணிகளின் விற்பனை மேலை நாடுகளில் பலமடங்கு பெருகியுள்ளது.

இந்திய மருத்துவ முறைகளில் வலி என்பது வாத, பித்த, கப வலி என்று அதன் தன்மையைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டு அதற்குத் தகுந்த மருந்துப் பொருளிலான ஒத்தடம், பத்து, எண்ணெய் அபியங்கம், ஆவியில் வைக்கும் ஸ்வேதனம் போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன.

 ஒத்தடம், பத்து ஆகியவை வெட்டுக்காயம், இரத்தக்கட்டு, ஜன்னி போன்ற ஆபத்தான நிலைகளுக்கும் தினசரி ஏற்படும் வலிகளுக்கும் பொருந்தும். 

இதனால் சித்த முறையில் எல்லாவற்றையும் குணப்படுத்த முடியும், 

அலோபதி தீய விளைவுகளை மட்டுமே கொடுக்கும் என்று இங்குக் கூறவில்லை. 

நமது கூற்று என்னவென்றால் நோயாளி மட்டுமே உணரக்கூடிய வலி என்னும் அனுபவத்தை மருத்துவ முறைகள் கையாள்வது எப்படி என அலசி மருத்துவம் பற்றிய சமநோக்கு பெற வேண்டும் என்பதாகும்.

இதுவரை நோயாளியின் அனுபவம் சித்த மருத்துவக் கோட்பாடுகளில் நோய்க்கூறு முதன்மையாகக் கருதப்படுகிறது என்று பார்த்தோம். 

தமதுடலின் உள்நிகழ்வுகளை ஐம் புலன்களையும் அந்தக்கரணங்களையும் கொண்டு அறிய முடியுமென்று கண்ட சித்தர்கள் நோயாளியையும் அறிதலையுடையவராகக் கருதினார்கள் என்று பார்த்தோம். 

நோயாளியின் கூறும் அறிகுறிகள் பாகுபடுத்தப்பட்டுத் திரும்பத் திரும்ப நிகழ்வனவற்றை மருத்துவ நூல்கள் முறைப்படுத்தியிருப்பதையும் இதுவரை சொன்னோம்.

 நோயாளியை மையமாகக்கொண்டதால் இதில் நிபுணத்துவம் இல்லை என்று பொருள் அல்ல. நோயாளியின் அனுபவம் நோயைக் கண்டறிவதில் முக்கியத்துவம் பெறுகிறது. 

ஆனால் இதையடைய நாடிப் பரிசோதனையில் தேர்ச்சி பெறுவதும் இதனடிப்படையில் சிகிச்சைகளை முடிவுசெய்து குணப்படுத்துவதும் நிபுணத்துவம் சார்ந்தவை. என்றாலும் மருத்துவ நிபுணர் சமுதாயத்திற்கும் மனித தர்மத்துக்கும் அப்பாற்பட்டவரல்லர் என்பது முடிவிலும் நோயாளி தனக்குக் குணமாகிவிட்டது என்று நம்பினால் தான் வைத்தியனுக்குப் பணம் கிடைக்கும் என்ற நிலையிலிருந்து விளங்கும். 

தொடக்கம் மட்டுமன்றி, முடிவும் நோயாளியை மையமாகக் கொண்டுள்ளது இம்முறை.

முடிவு யார் கையில்?


0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer