Breaking News
Loading...
Thursday, January 14, 2016

நவநரசிம்மர்

Thursday, January 14, 2016

1.பார்கவ நரசிம்மர்:-

கீழ் அஹோபிலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இது உள்ளது. பார்கவ தீர்த்தம் அருகில், குன்றில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பார்கவ ராமர் வழிபட்டதால் பார்கவ நரசிம்மர் என்று பெயர் வந்தது.
2. யோகானந்த நரசிம்ம சுவாமி:-
கீழ் அஹோபிலத்திற்கு தென் கிழக்குத் திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது. கிரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்தபின் பக்தர் பிரகலாதனுக்கு சுவாமி அனுக்கிரகம் செய்ததோடு, யோக முறைகள் பலவற்றையும் இங்கே போதித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.
3. சத்ரவட நரசிம்மர்:-
இது கீழ் அஹோபிலத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் முட்புதர்கள் சூழ்ந்த ஓரிடத்தில் உள்ளது. இங்கு சுவாமி ஓர் ஆலமரத்தின் கீழ் சேவை சாதிப்பதால் இந்தப் பெயர். வட வருசம் ஆலமரத்தின் பெயராகும்.
4. அஹோபில நரசிம்மர்:-
மேல் அஹோபிலத்தில், கீழ் அஹோபிலத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. மற்ற எல்லாக் கோவில்களை விடப் பழமையானதும், முதன்மையானதுமான சன்னதி இது. உக்ர நரசிம்மராக இங்கே சுவாமி காட்சி தருகிறார். இந்த சிலாரூபம் தானாக ஏற்பட்ட `சுயம்பு விக்கிரகம்' என்று உறுதியாகக் கூறப்படுகிறது.
5. குரோட(வராஹ) நரசிம்மர்:-
அஹோபில நரசிம்மர் கோவிலிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. சுவாமியின் முகம் வராஹர் என்னும் குரோட வடிவத்தில் இருப்பதால் இந்தத் திருநாமம். லட்சுமிதேவி சம்பன்னராக இவர் சேவை சாதிக்கிறார்.
6. கரஞ்ச நரசிம்மர்:-
மேல் அஹோபிலத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கரஞ்ச (புங்கை மரம்) தருவினடியில் இந்த நரசிம்மர் எழுந்தருளியிருப்பதால் கரஞ்ச நரசிம்மர் என்று இவரது திருநாமம்.
7. மாலோல நரசிம்மர்:-
மேல் அஹோபிலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாலோல நரசிம்மர் மிகப் பிரசித்தி பெற்றவர். திருவுடன் (லட்சுமியுடன்) நேர்த்தியாக சாந்த ஸ்வரூபமாக காட்சி தருவதால் `ஸ்ரீமாலோல' நரசிம்மர் எனப் பெயர் பெற்றார். இந்த மூர்த்தியின் உற்சவ விக்கிரகம் முதல் ஆதிவன் சடகோப யதீந்திர மகா தேசிகன் சுவாமிக்கு நேரிடையாக நரசிம்மரால் அனுகிரகிக்கப்பட்டதால் மேற்படி அஹோபில மடத்தின் ஜீயர் சுவாமிகள் யாத்திரையாக எங்கு எழுந்தருளினாலும், ஸ்ரீமாலோல நரசிம்மருடன் சென்று வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
8. ஜவாலா நரசிம்ம சுவாமி:-
அசலசாயா மேரு என்ற உயரமான மலையில், மேல் அஹோபிலத்தில் இருந்து இன்னும் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புராணப்படி இங்கு தான் நரசிம்ம சுவாமி கிரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
9. பாவன நரசிம்மர்:-
ஜவாலா நரசிம்மர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது பாவன நரசிம்மர் தலம். பாவன ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த வழிபாட்டு இடம் மேல் அஹோபிலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

1 comments:

  1. வியக்க வைக்கும் பயனுள்ள தகவல்களை திரட்டித் தருகின்றீர்கள் நண்பரே அருமை
    தமிழ் மணம் 1

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer