ஐவகை உணவு முறையை நடைமுறையில் உண்பன, தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன என்பர்.
உண்பன என்பதற்கு அரிசிச்சாதம், புழுங்கல், பொங்கல் போன்றன உதாரணங்கள்.
சமைத்த காய்கறி கூட்டுகள் வரிசையில் பொரியல், அவியல், துவட்டல், துவையல் ஆகியனவும்
கொறிப்பன வரிசையில் வற்றல் வடாம் போன்றனவும் அடங்கும்.
பச்சடி, கிச்சடி போன்றன நக்குவன வரிசையில் வரும்.
பருகுவன என்பதில் பானகம், பாயகம், கஞ்சி, கூழ் ஆகியன அடங்கும்.
சிற்றுண்டிப் பண்டங் களை (அப்பம், இட்லி ) தின்பன வரிசையில் அடக்கலாம்.
குறிப்பு :- இட்டளி என்ற பலகாரம் தமிழகத்தின் உணவாகவே வெளி உலகில் அறியப்படுவது,
இடு முதல் நிறையடியாகப் பிறந்த சொல் இது. இடல் என்ற தொழில் பெயர் பின்னர் இகர விகுதி பெற்று இட்டளி ஆனது. இது இட்லி எனவும் படும்.
உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு.
நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்படுகின்றன.
ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவருகின்றன.
தினை அல்வா
தேவையானவை: தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, சுக்குத்தூள் - 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம், நெய் - 100 கிராம்.
செய்முறை: தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
பலன்கள்: புரதச் சத்து, மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த சிறுதானியம் இது. இதனுடன் இனிப்புப் பொருள் சேர்ப்பதால், அதில் உள்ள நுண் சத்துக்கள் அதிகமாகும். வைட்டமின்கள் நிறைந்த உணவு.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!