
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் . இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தையொட்டி தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. நவக்கிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். சிவ ம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும் சிறப்பு மிக்க தினம் இது .
சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.
சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளாக திகழ்வதால் முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். மேலும், ஆன்மீக ஜோதி வள்ளலார், அருட்பெருஞ்சோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான். தீப தரிசனம், ஜோதி தரிசனம் என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று.
"தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால் ஏடு தொடக்கம், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்ளப்பெறுகின்றன.
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். பூச நட்சத்தரத்தின் பிரதான தேவதை குரு பகவான். ஆகவே, தைப்பூசத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும்.






0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!