Breaking News
Loading...
Tuesday, January 5, 2016

323 பந்துகளில் 1,009 ரன்கள்:வரலாற்றுச் சாதனை!

Tuesday, January 05, 2016
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 1000 ரன்களைக் கடந்து இமாலய சாதனை நிகழ்த்திய பிரணவ் தனவாதே. | படம்: சிறப்பு ஏற்பாடு.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ரன்களான 1009 ரன்களை 323 பந்துகளில் பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட்டில் விளாசி சாதனை படைத்துள்ளார் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே.

இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. 

10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர் ஆவார். இவர் பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிரான போட்டியில் 323 பந்துகளில் 1009 ரன்களைக் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளார், மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மொத்தம் 395 நிமிடங்கள் கிரீசில் இருந்த பிரணவ் 1009 ரன்களில் 129 பவுண்டரிகள்டையும், 59 சிக்சர்களையும் விளாசியுள்ளார். ஸ்கோர் 1465 ரன்களை எட்டியபோது காந்தி மேனிலைப்பள்ளி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்த ஸ்கோரும் ஒரு உலக சாதனை. 1926-ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக விக்டோரியா 1,107 ரன்களை எடுத்ததே முந்தைய அதிக ஸ்கோருக்கான சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை பிரணவின் இமாலய இன்னிங்ஸினால் முறியடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது எந்த வகையான கிரிக்கெட்டிலும் பிரணவ்வின் இந்த 1009 ரன்களே வரலாற்று சாதனையாகும். முன்னதாக பிரிட்டனில் ஏ.இ.ஜே.கொலின்ஸ் என்ற வீரர் தனிப்பட்ட முறையில் எடுத்த 628 ரன்களே மிகப்பெரிய சாதனையாக இதுவரை இருந்து வந்துள்ளது. 

கடந்த மாலை 652 நாட் அவுட் என்று இருந்த பிரணவ், இன்று அனைத்து கால, அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அதிகபட்ச தனிப்பட்ட மிகப்பெரிய ஸ்கோரை அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த இன்னிங்ஸ் மூலம் 2013-ம் ஆண்டு பிரிதிவி ஷா என்ற மும்பை ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் மாணவர் எடுத்திருந்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 546 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார் பிரணவ். 

பிரணவ்வின் இந்த இமாலய சாதனையில் நெகிழ்ச்சியடைந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் இவரது முன்னேற்றத்துக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளது. 


பிரணவ் தனவாதேயின் சிறப்பு என்னவெனில் இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென், தோனியை தனது லட்சிய ஆளுமையாக இவர் குறிப்பிட்டுள்ளார். “நான் எப்பவுமே பெரிய ஷாட்களை ஆடுவதில் விருப்பமுள்ளவன். நான் சாதனை நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதாவது முதல் பந்திலிருந்தே அடித்து ஆடுவது என்பதே எனது இயல்பான ஆட்டம்” என்கிறார் இந்த இளம் சாதனை நாயகன். 

சச்சின் டெண்டுல்கர் இந்த வளரும் அதிரடி நாயகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Thanks to http://tamil.thehindu.com/sports/

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer