இந்தியாவின் மருத்துவ முறைகளில் பல சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன.
நவீனச் சிகிச்சைகள் மலிந்துவிட்ட இக்காலகட்டத்திலும் சித்த ஆயூர்வேத , யுனானி மற்றும் ஹோமியோபதி சிகிச்சை முறைகளும் புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன.
நவீன சிகிச்சை முறையான அலோபதி வைத்தியமுறை ஓங்கி வளர்ந்து வருவது
பழமையின் மீதான வெறும் பிடிப்பாலல்ல; அவற்றிலுள்ள சிகிச்சை முறைகளின் சிறப்பாலும் வைத்தியத்தில் நோயாளிக்கும் முக்கியப் பங்கு வழங்கப்படுவதாலும்தான்.
ஆசிய மருத்துவ முறைகள் பற்றிக் கடந்த முப்பதாண்டுகளாக மானுடவியல், சமூகவியல் ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன.
மேலைநாடுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் மாற்று மருத்துவ முறைகளை நாடுவதால் சமீபத்தில் ஆய்வுகள் பெருகியுள்ளன. அலோபதி முறையின் செயல்பாடுகளைப் பற்றியும் மருத்துவர்கள் நோயாளிகள் பற்றிய முடிவுகளை எதனடிப்படையில் எடுக்கிறார்கள், மருத்துவமனைகளில் மனித உறவுகள் எப்படியிருக்கின்றன என்றெல்லாம் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
சமூகவியல் கண்ணோட்டத்தில், மருத்துவம் சார்ந்த அறிவியலைப் - குறிப்பாகப் பாரம்பரிய மருத்துவ முறைகளை- பற்றிக் கடந்த 20 வருடங்களாகத் தமிழ்நாட்டில் நான் செய்துவரும் ஆராய்ச்சி, சித்த மருத்துவர்களுடனான பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கட்டுரையை அமைத்திருக்கிறேன்.
மருத்துவத் துறையின் அடிப்படை நிலையில் நோயை அனுபவிப்பவன் ஒருவன், அதைக் குணப்படுத்தும் அறிவு படைத்தவனோ இன்னொருவன், அதாவது மருத்துவன்.
நோயுற்றவனுக்கு நோயின் அனுபவமிருக்கும்,
மருத்துவனுக்கோ நோயின் அனுபவமிராது.
ஆனால் அதைப் பற்றிய அறிவு இருக்கும்.
நோயாளிக்குத் தன் உடலிலுள்ள நோய் பற்றிய அறிவு இருக்கவோ மருத்துவனால் நோயின் தன்மையை முழுவதுமாக உணரவோ முடியுமா?
இவ்வாறு நோயின் அனுபவமும் அதைப் பற்றிய அறிவும் பிரிந்திருத்தல் மருத்துவத்தில் இயல்பு நிலை.
இதை வெவ்வேறு மருத்துவ முறைகள் எப்படி அணுகுகின்றன?
இதை எதிர்கொள்வதிலுள்ள சிக்கல்கள் எவை?
இவை மருத்துவனுக்கும் நோயாளிக்குமுள்ள உறவை எப்படிப் பாதிக்கின்றன?
இத்தகைய கேள்விகள் மருத்துவ முறைகளை ஒப்பிட்டுப் பார்க்க வழிவகுக்கின்றன.
சாதாரணமாக மானுடவியலில் அறிவியலையும் மந்திர மாயத்தையும் எதிர்நிலைகளாகக் காட்டி முன்னதை நவீன மேலைக் கலாச்சாரத்துடனும் பின்னதை மீதமுள்ள எல்லாக் கலாச்சாரங்களுடனும் தொடர்புபடுத்திப் பார்ப்பது வழக்கமாகயிருந்தது.
ஆனால் இது போன்ற பாகுபாடுகள் உடற்கூறு பற்றி ஒற்றை நிலைப்பாடு தான் இருக்க முடியும் என்ற மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என இப்போது விளங்க ஆரம்பித்துவிட்டது.
உறுப்புகளால் ஆன உடம்பு, உலகை நமக்குக் காட்டும் ஐம்பொறிகள், இவற்றைச் சேர்க்கும் மனம் இவை யாவும் ஒருங்கிணைந்த உயிர் பற்றி அறிவியல் பூர்வமான கோட்பாடுகள் பல இருக்க முடியும் என்ற புரிதலை விரிவாக்க நாம் புதிய அணுகுமுறைகளையும் பாகுபாடுகளையும் உருவாக்க வேண்டியுள்ளது.
மேலே சொன்ன கேள்விகளைப் புரிந்துகொள்ள நிபுணரைப் பிரதானமாகக் கொண்டவை, நோயாளியைப் பிரதானமாகக்கொண்டவை என மருத்துவ முறைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது என் கருத்து.
அலோபதி போன்ற மருத்துவ முறையில் நிபுணர் படித்தறிந்த அறிகுறிகளின் வாயிலாகவே நோய் அறியப்படுகிறது.
நோயாளியின் வாதையுள் ( நோயின் தன்மை அல்லது நோய் ) தொழில்நுட்பக்கருவிகளால் நிர்ணயிக்கக்கூடிய அறிகுறிகள் மட்டுமே நோயின் தன்மையைக் கண்டறிய எடுத்துக்கொள்ளப்படும்.
நோயாளியால் உணரப்படும் நோயின் குணம் நோய் முதல் நாடலில் முக்கியத்துவம் பெறாது.
உதாரணத்திற்கு, ஒரு நபர் தனக்குள் எந்த மாற்றத்தை உணராவிட்டாலும் இரத்தக்கொதிப்பு இருப்பதாகக் கருவி சொன்னால் அவர் மாத்திரை சாப்பிட்டாக வேண்டும்.
மாறாக, உடலில் வலி மிக அதிகமாகவும் தொடர்ச்சியாகவுமிருப்பினும் கருவிகள் கணக்கெடுக்க முடியாது போனால் அதை நோயாளியின் கற்பனை அல்லது மனநோய் என்று நிபுணர் கருதுவார்.
ஆக அலோபதி முறையில் நோய் பற்றிய நோயாளியின் அனுபவத்திற்கும் மருத்துவரின் அறிவுக்கும் இடைவெளி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆங்கிலத்தில் நோயாளிக்கு ஏற்படுவதை சிம்ப்டம் (symptom) என்றும் மருத்துவர் எடுக்கும் குறிப்பை சைன்ஸ் (signs) என்றும் சொல்வார்கள்.
ஆரம்ப கால அலோபதியில் நோயாளியிடமிருந்து எடுக்கப்படும் மருத்துவக் குறிப்புகள் நோயாளியின் வருணனையை ஒட்டி இருந்தன (symptoms),
தொழில்நுட்பக் கருவிகள் பெருகப் பெருக அவற்றால் அளக்கக்கூடிய குறிகளே நோயின் அறிகுறிகள் என்றாகிவிட்டன.
நோயுற்ற உறுப்பையும் அதன் செயல்களையும் துல்லியமாக அளப்பதுதான் நோய் முதல் நாடல் என்று இப்போது ஏற்கப்பட்டுள்ளது.
இம்முறையில் நோயாளியின் நோய் பற்றிய அனுபவமும் வருணனையும் முக்கியமல்ல, அல்லது இரண்டாம் பட்சம்.
உயிரற்ற சடலத்தினுள் காணும் உறுப்புகளின் கட்டமைப்பு பற்றிய அறிவைக் கொண்டு உயிருள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தல் அலோபதி முறையின் சித்தாந்தம்.
உயிரற்ற உடல் அறிவுக்கு வழி வகுத்தாலும்,
உயிருள்ள நோயாளியையும் சுய உணர்வற்ற சடலத்தைப் போன்ற பொருளாகக் கருத வேண்டிய நிர்ப்பந்தம் இம்முறையில் உள்ளது எனத் தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
இன்று காமாலை, பக்கவாதம் ஆகியன நோய்களாக அறியப்படுவதில்லை.
உள் உறுப்புகளின் கட்டமைப்பின் அளவுகளாகவே அறியப்படுகின்றன.
உள் உறுப்புகளின் ரசாயனக் கூறுகள் வெவ்வேறு மனிதர்களில் வெவ்வேறான நோய்க் குணங்களைக் காட்டும்.
ஆனால் அந்த மனித வேறுபாடு அலோபதி நிபுணர்களுக்குத் தற்செயலானது.
கருவி காட்டும் குறியே முதன்மையானது.
இன்னும் சொல்லப் போனால் நோயாளி உணரும் நோய்க் குணத்திலிருந்து வேறுபட்டிருப்பதே அலோபதி மருத்துவத்தின் சிறப்பம்சம்.
மனிதனுடைய அனுபவத்தையும் கணிப்பையும் கருவிகள் அளவீடுகளாக்கி விடுவதால் அசல் நோயாளியே தேவையில்லை.
பரிசோதனை முடிவுகள் கொண்ட நோயாளியின் ஆவணம் போதுமானது.
அதாவது கருவிகள் ஒரு ‘நிழல்’ நோயாளியை ‘கேஸ் தாள்’களில் உருவாக்குகின்றன.
பரிசோதனைக் கூடம் முதல் மருத்துவர் அறை, மருத்துவக் கருத்தரங்குகள்வரையில் இந்த ‘நிழல்’ நோயாளிதான் அறியப்படுகிறார்.
கருவிகள் உருவாக்கும் அளவீடுகளின் அடிப்படையில்தான் பல வேதியியல் மருந்துகளின் பலன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இப்படிப் பரிசோதிக்கப்பட்ட பின் தரப்படும் மருந்து ஒத்துவராமல் பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக அசல் நோயாளிகள் சிலர் சொன்னால், அதை நிபுணர்கள் முக்கியமாகக் கருதமாட்டார்கள்.
பரிசோதனைக்கூடத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ரசாயன மருந்துப் பொருட்கள் நிரூபணமாகின்றன.
இவ்வாறு நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் நிஜ உலகில் பலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். மற்ற சில மருத்துவ முறைகளைப் போல் அலோபதிக்குத் தனி மனிதனின் ஒருங்கிணைந்த தேக/மன வாகு பற்றிய கருத்தாக்கம் இல்லை;
அது உறுப்புகளின் கூட்டுச் சேர்க்கையாக உடம்பு முழுவதையும் பார்க்கிறது.
ஒன்றேபோல் காணப்படும் உள் உறுப்புகளின் அடிப்படையில் அது பரிசோதனைக்கூடத்தின் முடிவுகளை உலகிலுள்ள அனைவருக்கும் உகந்ததாக அறிவித்துவிடுகிறது.
சோதனைக்கூடத்தில் கண்ட சில மருந்துகள் அசல் வாழ்க்கையிலும் சிறப்பாக வேலைசெய்கின்றன.
ஆனால் பரிசோதிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பல அசல் நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இத்தீய விளைவுகளை அலோபதி மருத்துவம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை ஏதோ தனிப்பட்ட பிரச்சினையாகத் தள்ளிவிடும்.
இவான் இல்லிச் என்னும் தத்துவச் சிந்தனையாளர் இதை ‘iatrogenesis’ எனக் குறிப்பிடுகிறார். அதாவது, மருந்து, சிகிச்சை, மருத்துவரால் அசல் நோயாளிக்கு விளையும் சேதம் பற்றிப் பெரும்பாலும் மருத்துவத் துறையினர் பேசுவதில்லை.
நவீனச் சிகிச்சையில் உலகில் மிகவும் முன்னேறிய அமெரிக்காவில் சமூகப் பிரக்ஞையுள்ள மருத்துவர்கள் இது பற்றிய தமது ஆராய்ச்சிகளை, ‘மருத்துவச் சிகிச்சையால் மரணம்’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்கள்.
அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு 22 லட்சம் பேர்.
தேவையற்ற அறுவைச் சிகிச்சைகளுக்கு ஆளானவர்கள் ஆண்டுக்கு 75 லட்சம் பேர்.
மிக வேடிக்கையான தகவல் என்னவென்றால், மருத்துவச் சிகிச்சையால் இறந்தவர்களின் எண்ணிக்கை புற்று நோய், இருதய நோய் ஆகியவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.
அதிர்ச்சியாக இருக்கிறதா?
மருத்துவ நிபுணரையும் நிர்வாக அமைப்பையும் கேள்விகேட்கப் போதுமான தகவல்களும் பலமும் இல்லாத, நோயாளிகள் நிரம்பி வழியும் ஏழ்மை மிகுந்த நமது மருத்துவமனைகளில் இதுபோல் கணக்கெடுப்பில்லை;
இருந்தால் அது இதைவிட அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதனால் அலோபதியே தவறானது என்றோ அம்மருத்துவர்கள் திறமை குறைந்தவர்கள் என்றோ அர்த்தமல்ல.
நிபுணத்துவம் சார்ந்த அறிவியலுக்கு வலிமைகளைப் போலக் குறைபாடுகளும் உள்ளன என்பதுதான் கருத்து.
மேலும் இது பொதுநலச் சிந்தனையுடைய மருத்துவர்களில் ஒரு சாராரால்தான் வெளிக்கொண்டுவரப்பட்டது.
அலோபதி முறையில் நோயாளியின் அனுபவத்திற்குச் சிகிச்சையில் பெரிய பங்கில்லை என்பதுதான் முக்கியமானது.
அதனால்தான் சிகிச்சை நிவாரணம் அளிக்காவிட்டாலும் நோயாளி மருத்துவருக்குக் கட்டணம் தர வேண்டியுள்ளது.
ஏனெனில் கட்டணம் நிபுணரின் அறிவுக்கும் நேரத்திற்கும் கொடுக்கப்படுகிறது. அது நோய் குணமாவதைப் பொறுத்ததல்ல.
மனித அனுபவத்தைவிடக் கருவிகள் காட்டும் அளவுகளையே முக்கியமாகக் கருதும் நிபுணர்கள் சார்ந்த அலோபதி மருத்துவ முறையின் நிலைமை இது.
பிற மருத்துவ முறைகளில் நோயாளி உணரும் நோய்க் குணமும் மருத்துவர் அறியும் குறிகளும் எவ்வாறு அணுகப்படுகின்றன? அதிலும் குறிப்பாகச் சித்த மருத்துவ முறையில் நோயாளியின் நிலை என்ன?
நன்றாக அலசி உள்ளீர்கள்
ReplyDeleteசிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
நன்றி அய்யா!
Delete