Breaking News
Loading...
Thursday, January 7, 2016

அலோபதி x மாற்றுமருத்துவம் ஒரு அலசல் -3

Thursday, January 07, 2016
முதலில் நடைமுறையில் வைத்தியம் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். 

நோயாளி தன்னிடம் வந்ததும் அவரைப் பரிசோதித்துவிட்டு நோயைக் குணப்படுத்த முடியுமா முடியாதா என்பதை வைத்தியர் முதலில் சொல்ல வேண்டும். 

முழுவதும் குணமடையக்கூடியவை, 

ஓரளவு குணமாகக்கூடியவை, 

குணப்படுத்தவே முடியாதவை, 

வாதையை மட்டும் நீக்கக்கூடியவை 

என்று நூல்களிலும் பிற மருத்துவ நூல்கள் யாவிலும் நோய்கள் பாகுபடுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

நோயை இவ்வளவு நாட்களில் குணப்படுத்த முடியுமென்று வைத்தியன் சொல்லி அதன்படி செய்யாவிட்டாலோ நோயாளிக்குப் பூரண குணம் கிட்டவில்லை எனத் தோன்றினாலோ அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமலிருக்க நோயாளிக்கு உரிமையுண்டு. 

பெரும்பாலும் திருப்தியில்லை என்று சொல்லிப் பேசிய பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களும் உண்டு.

இந்நூற்றாண்டின் தொடக்கம்வரை கிராமங்களில் வைத்தியருக்கு மானியமாக நிலமோ தானியமோ வழங்கப்பட்டு வந்தது.

 எனவே தனியாக வைத்தியருக்கு என்று பணம் கொடுப்பதில்லை, 

மருந்துக்குத்தான் காசு. 

அதுவும் விஷக்கடி, நாய்க்கடி போன்ற அபாயமான நிலைகளுக்குக் காசு வாங்கக் கூடாது என்ற நியதி உள்ளது.

 ஒருமுறை விரியன் கடிபட்டு உயிருக்குப் போராடிய இளைஞனுக்காகக் கிராம விஷக்கடி வைத்தியரை பஸ் நிலையத்திலிருந்து கூட்டிவந்தார்கள். 

மருந்து கொடுத்துப் பிறகு மந்திரித்து முப்பது நிமிடத்தில் இளைஞனை எழுந்து உட்காரவைத்தார். 

இரண்டு ரூபாய் காணிக்கையைச் செலுத்திவிட்டுச் சென்றார்கள் (இதற்கு மருத்துவமனையில் 1500-2000 ரூபாய் செலவாகும்). 

வைத்தியரிடம் பேசியபோது, “மருந்துதான் முக்கியம். 

94 விஷங்களுக்கும் மருந்து தனித் தனியாகச் செய்து கண்ணாடி பாட்டிலில் வச்சிருக்கம். பாம்பைக் கண்டு சொன்னதாலயும் கடிவாயில வீக்கம் இருந்ததாலயும் விரியனுக்குள்ள மருந்தை கொடுத்தது. மந்தரம் ஒரு மனசாந்திக்குத்தான். இது எங்களுக்குக் கர்மதொழில்; காசு வாங்கமாட்டோம். உயிருக்கு ஆபத்துன்னு வர்றவன்கிட்டக் காசு கேக்கலாமா?” என்றார்.

மானியமெல்லாம் போய்விட்ட பிறகும் உள்ளூர்காரர்கள் இன்றும் பணம் கொடுக்கச் சுணங்குகிறார்கள் . 

அசலூரிலிருந்து வருபவர்கள்தாம் ஏதாவது கொடுக்க வேண்டும். 

சாமர்த்தியக்காரர்கள் சிலர் வெளியூரிலிருந்து வந்தாலும் உள்ளூர்காரரை உடன் அழைத்துவருவார்கள். 

அசீரணம், முள்குத்து, காமாலை போன்ற ஓரிரு சாதாரண நோய்களுக்கு மருந்து தருபவர்கள் பெரும்பாலும் பகுதிநேர நாட்டு வைத்தியர்கள்தாம்; 

இவர்களது பிழைப்பு வைத்தியத்தை நம்பி இராது. 

விவசாயம் அல்லது வேறு தொழில் இருக்கும் ஏனென்றால் இந்த வைத்தியம் ஊர் சொத்து போல, சம்பாத்தியத்திற்கல்ல. 

பாண்டித்தியம் பெற்ற முழுநேர வைத்தியர்கள்கூட கன்சல்டேசன் பீஸ் வாங்க முடியாது. 

மருந்துக்கு என்று சொல்லித்தான் வாங்க முடியும். 

அதிலும் விலை நிச்சயமில்லை, பேரமிருக்கும். 

ஆக வைத்தியன் - நோயாளி உறவில் பின்னவரின் கை ஓங்கியிருக்கும்.

நவீன மருத்துவமனைகளில் வந்தவுடன் நோயாளியிடம் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பின்னர் வைத்தியம் செய்யும் அலோபதி, கல்லூரியில் பட்டம் பெற்ற சித்த ஆயுர்வேத மருத்துவர்கள், ஆண்மைக் குறைவுக்கு லேகியம் தரும் சித்த மருத்துவர்கள் ஆகியோரைக் கண்டு இந்தப் பரம்பரை வைத்தியர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். 

நோயாளியைக் குணப்படுத்தாமல் கட்டணம் பெறுவது இவர்கள் பின்பற்றிய கொள்கைகளுக்குப் புறம்பானது.

 ஏனென்றால் மருத்துவம் சமூக நிறுவனம்போல் பார்க்கப்பட்டது.

 இப்பார்வை நோயாளிக்குப் பாதுகாப்பு அளித்தாலும் வைத்தியனின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதற்குக் காரணமாக இருந்தது. 

உரிய அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைப்பது அரிதாக இருந்தது.

 கிராமத்தில் அவர்களது அதிகாரம் அவர்கள் கடைப்பிடித்த நெறிகளாலும் வெளியூர் நோயாளிகளின் எண்ணிக்கையாலும் குடும்பப் பெயராலும் அமைந்தது. 

சில சமயங்களில் குலத்தாலும் வந்தது.

 எப்படியாயினும், நோயாளி சார்ந்த மருத்துவத்தில் நிபுணர்களுக்குள் உறவு பெரிதாக இருக்கவில்லை எனத் தோன்றுகிறது; 

அதனால்தான் நோயாளி கை ஓங்க முடிந்தது.

நிபுணர்களுக்கிடையே உறவுகள் வலுப்பெறுவது நிபுணத்துவம் சார்ந்த மருத்துவத்தில்தான் சாத்தியம்.

 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் அலோபதி மருத்துவர்கள் சங்கங்கள் அமைத்து அரசாங்க அங்கீகாரம் பெற்றபோது எந்த உருப்படியான சிகிச்சையோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. 

அவர்கள் கடைப்பிடித்துவந்த கிரேக்க - ரோமானிய மருத்துவ முறையில் எதற்கெடுத்தாலும் இரத்தத்தை விடுதல் அல்லது எனிமா கொடுத்தல் என்று மொத்தம் 10 சிகிச்சை முறைகள்கூட இல்லை. 

ஆனால் சங்கங்களின் வலிமையால் அவர்கள் கட்டணத்தை நிர்ணயித்து அரசாங்க ஆதரவையும் பெற்றனர்.

 இதனால் தான் அலோபதி மருத்துவத்தின் அதிகாரம் அதன் மருத்துவத் திறனால் அல்லாமல் அதன் அரசியல் வலிமையால் ஏற்படுகிறது என்று சமூக வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள்.

இந்திய மருத்துவ முறைகளில் தாவர, மாமிச, உலோக, கனிமப் பொருள்கள் கொண்ட உள்மருந்துகள் ஐம்பதினாயிரம் உள்ளன என்று சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. 

வைத்தியத் திறன்கள் தனிப்பட்ட வைத்தியர்களின் ஊக்கத்தால் வளர்ந்தன; 

ஊராலும் அரசர்களாலும் சிலர் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம்.

 ஊர் விசுவாத்தால் நாட்டு வைத்தியர்கள் தமக்குள் நிபுணர்களாகப் பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. 

நகரங்களில் வாழ்ந்த வைத்தியர்கள் நிலைமை சற்றுப் பலமானதாக இருந்தது; 

எந்நிலையிலும் பணம் கொடுப்பதில் நோயாளியின் கை ஓங்கியிருந்தது.

சிகிச்சையில் நோய் குணமாவதும் ஆகாமலிருப்பதும் எந்த மருத்துவ முறையிலும் நடப்பதுதான். 

ஆனால் நோயாளியை அறிபவராகக் கருதி அவருக்கு உரிமைகளை எல்லா முறைகளும் வழங்குவதில்லை. 

மேற்கத்திய முறைகளில் நவீனத்துவத்தால் ஒடுக்கப்பட்ட ஹோமியோபதி நோயாளிக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. 

ஆனால் அது வரையறைக்குட்பட்ட சிகிச்சை முறை மட்டுமே. 

நோயுறுபவரும் நோயறிபவரே என்ற கொள்கை முழுவதுமாகச் சித்த மருத்துவ முறையின் எல்லாப் பரிமாணங்களிலும் அமைந்திருக்கிறது. 

அரிய மருத்துவத் தகவல்களும் மூலிகையறிவும் சிகிச்சை முறைகளும் சாமானிய மக்களிடையே பரவிக் கிடந்தது 

இக்கொள்கையின் சமூக வடிவைக் காட்டுகிறது.

 பிள்ளைப் பிராய நோய்களைக் கண்டிக்க நாற்பது மூலிகைகள் கொண்ட மருந்தைச் சாமானியமாக வலைய சமூகத்துப் பெண்கள் பிள்ளைகளுக்கு மாதா மாதம் செய்துதருவதும் 

ஜுரத்திற்கு மூலிகைகளாலான சன்னி பொட்டலம் கட்டுவதும் இன்றும் நடக்கிறது. 

இது போன்ற நூற்றுக்கணக்கான மருத்துவ முறைகள் பொதுமக்களிடையே விரவிக்கிடக்கின்றன. 

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற கருத்துப்படி கால தேச மாறுபாட்டிற்கு ஏற்றபடி உணவுப் பழக்க வழக்கங்களை மக்கள் வகுத்துவைத்திருந்தனர். 

சித்தர்கள் நாட்டார் வழக்குகளில் மருத்துவக் கருத்துகளைப் சொல்லிவைத்து,
ஊர்களைச் சுற்றி வந்து பரப்பியதும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மருத்துவ நூல்கள் ஆரம்பப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டதும் ஆரோக்கியம் மக்களது மருத்துவ அறிவை வளர்ப்பதால்தான் விளையும் என்ற சித்தாந்தம் பரவியிருந்தமைக்குச் சாட்சியங்களாகும்.

அலோபதி போன்ற நிபுணர் அதிகாரத்திலியங்கும் முறையில் வரப்போகும் ஆபத்தைப் பற்றிப் பயமுறுத்தி எல்லோரையும் மாத்திரைகளுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் உடன்படவைப்பது மருத்துவ முறையின் தன்மையென்றாலும்,

 இதில் தொழில்நுட்பக்கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் பெரும் பங்குண்டு. 

நிபுணர் சார்ந்த மருத்துவ முறைகள் இலாப நோக்கைப் பிரதானமாகக் கொண்டவை. 

முதலாளித்துவ அமைப்பில் இப்படித்தான் இருக்கும் என்றும் 

கம்யூனிச அமைப்பில் அலோபதி மருத்துவம் இப்படி இராது என்றும் சோசலிச ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ஏராளமான பண முதலீடு தேவைப்படும் தொழில்நுட்பங்களை விடுத்து, 

தேவைக்கேற்ற கருவிகளைத் தேர்ந்து நோயாளியை மையமாகக் கொண்ட மருத்துவம் சோசலிசத்தில் வளர்க்கப்படும் என்று சிலர் கூறுகின்றார்.

 அலோபதி மருத்துவம் முதலாளித்துவத்தோடு பிணைந்து உருவானது, 

உள் உறுப்புகளில் நோயைக் காணும் இம்முறை மருந்து மற்றும் தொழில்நுட்பக் கம்பெனிகளின் முதலீடின்றி இயங்க முடியாது என்று வேறு அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். 

இந் நிலையில் உடல்கூறு பற்றிய மாற்று அறிவியல்கள் உள்ளனவா என்று உலகில் பல நிறுவனங்கள் தேடிவருகின்றன.

பழைமை நவீனம் என்று பாகுபடுத்தி, வாழும் திறன்களைக் கடந்த காலமாக்குவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. 

சித்த மருத்துவத்தில் குறைபாடுகள் உண்டு. 

ஆனால் இன்றைய சமுதாயத்தில் இக்கேடுகளைக் களைந்து மருத்துவ அறிவை மீட்க முடியும். 

ஒருதலைப்பட்சமான அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கத்தைக் குறைத்துப் பிற அறிவியல் முறைகளையும் சமமாகப் பாவிக்கும் பன்மையான கண்ணோட்டம் இன்று தேவை.

பரிசோதனைக்கூடங்களில் லட்சக்கணக்கான விலங்குகளைச் சித்திரவதை செய்து, அவற்றைத் தீயில் வறுத்தும் உறையவைத்தும் வியாதிகளை அவற்றுக்கு உண்டாக்கியும் மின்சாரம் பாய்ச்சியும் இன்றைய மருத்துவம் உயிர்கள் பற்றிய அறிவை வளர்க்கிறது. 

பின்னர் அது கைதிகள், பைத்தியங்கள், ஏழைகள், பழங்குடியினர், மூன்றாம் உலக நோயாளிகள்மீது பரிசோதிக்கப்படுகிறது. அறிதலில் இது ஒரு வகை.

இயற்கை நிலையில் விலங்குகளைக் கவனித்து ஹடயோக முறைகளை வகுத்த யோகசூத்திரமும் தம்மையே பரிசோதனைக்கூடமாக மாற்றி அறிதலை வளர்க்கும் மெய் ஞான தத்துவத்திலிருந்து வந்த சித்த மருத்துவமும் உடற்கூறு பற்றிய அறிவியல்கள்தாம். உடம்பு, உயிர், மனம் இவற்றுக்கும், தத்துவம், மருத்துவம் சமுதாயம் இவற்றுக்கும் உள்ள உறவை வேறுவிதமாகவும் புரிந்துகொள்ள வாய்ப்புகள் மூன்றாம் உலகில்தான் நிறைய உள்ளன.

நிபுணர் சார்ந்த நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்டமான மாற்றங்களை விளைவிக்கக் கூடியவை. 

ஆனால் இந்தப் பிரம்மாண்டத்தில் நிபுணரல்லாத சாமானியர்கள் நிலைமை பலவீனமானதாகும். 

அணுமின் உலை, வேதியல் உரம் மற்றும் புது வேதியியல் மருந்துகள் போன்றவற்றில் மூழ்கியுள்ள அறிவியல் நிபுணர்கள் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரங்களைப் பாதிக்கக்கூடிய தமது பரிசோதனைகள் பற்றிச் சமுதாயத்திற்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை என்று எண்ணுமளவுக்கு இவர்கள் ஆதிக்கம் வளர்ந்துவிட்டது. 

நிபுணர்களின் ஆதிக்கத்தை ஜனநாயகக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வர மக்கள் மன்றங்கள், தன்னார்வக் குழுக்கள் தேவைப்படுகின்றன.

 பல சமயம் இவை வெல்ல முடிவதில்லை. 

மக்கள்சார்ந்த அறிவியல் இருக்க முடியுமா? 

நுட்பமுள்ள நிபுணத்துவம் மக்கள் அனுபவத்தை ஒட்டி எழ முடியுமா? 

பிரம்மாண்டத் திட்டங்கள், கருவிகள் இல்லாத அறிவியல் எப்படி இருக்கும் என்ற தேடலின் ஒரு பகுதிதான் இந்தக் கட்டுரை.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer