Breaking News
Loading...
Tuesday, December 29, 2015

கலி தோஷத்தினை .....

Tuesday, December 29, 2015
கலி தோஷத்தினை நீக்கும் ஸ்லோகம் :
ஓம் கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா:
நளஸ்யச ரிதுபர்ணஸ்ய ராஜரிஷி:
கீர்த்தனம் கலி நாசனம்
கார்கோடகன் (எனும் பாம்பு)
நளனைத் தீண்டியது தான்
அவனுக்கு கலி விலக உதவியது.
ரிதுபர்ணனிடம் இருந்து விருட்ச
(மரங்களைப் பற்றிய அரிய வகை)
கணிதம் கற்றதால் கலி விலகியது.
ஆகவே, கலி தோஷம் நீங்க -
கார்க்கோடகன், நளன், தமயந்தி, ரிதுபர்ணன்
ஆகிய நான்கு பேரையும் சொன்னாலே
கலி விலகும் என்கின்றது மேற்கண்ட ஸ்லோகம்.
-------------------------------------------
சுருக்கமாக நள சரித்திரம் :
--------------------------------------------
நிடதம் எனும் நாட்டினை அரசோச்சுபவன் நளன்,
ஒரு நாள் வனத்தினில் அழகிய அன்னத்தைக் (சவம்) கண்டு,
அதன் அழகில் மயங்கி அதைப் பிடிக்கின்றான்.
பயந்த அன்னம் என்னை விட்டுவிடு என்று பேசியது.
உடன் அதை விடுவிக்கின்றான். செய்நன்றி மறவாத அன்னம், அவனுக்கு நன்மையளிக்க வேண்டி,
தமயந்தி எனும் அரசகுமாரியின் அழகை விவரிக்கின்றது.
தமயந்தியின் அழகில் மயங்கிய நளன், தன் காதலின் தூதாக
அந்த அன்னத்தையே விடுக்கின்றான்.
அன்னம் தமயந்தியிடம் வந்து நளனின்
அழகு, வீரம் முதலியவற்றைச் சொல்கின்றது.
தமயந்தியும், தான் நேரில் பார்க்காவிட்டாலும்
அன்னத்தின் வாயிலாக அறிந்த நளன் மீது
மையல் கொள்கின்றாள்.
தமயந்தியின் தந்தை சுயம்வரம் அமைக்கின்றார்.
தேவர் முதலானவர்கள் சுயம்வரத்திற்கு வந்தாலும், அவர்களையெல்லாம் விடுத்து தன் காதல்
மன்னனாகியநளனுக்கே மாலை சூட்டுகின்றாள்.
காலம் கடக்கின்றது.
ஒரு சமயம், நளன் செய்தத் தவறினால்,
கலிபுருஷன் நளனைப் பிடிக்கின்றான்.
கலி புருஷன் (கலி பீடித்தல் - சனி பீடித்தமைக்கு சமம்) பீடித்ததால், சூதாட்டத்தில் நாட்டம் போன்ற கெட்ட நடவடிக்கைகளால் நளன் ஆட்படுகின்றான். புஷ்கரன் எனும் சூதில் வல்ல மன்னனுடன் சூதாட்டம் ஆடுகின்றான். நளன் புஷ்கரனிடம் தோற்று, ராஜ்யம் இழந்து, காட்டிற்குப் போகின்றான்.
உடன் தமயந்தியும் வருகின்றாள். தமயந்தி காட்டில் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி அவளைத் தனியே விட்டுச் செல்கின்றான். கணவனைக் காணாது கலங்கிய தமயந்தி தனது தந்தை வீடு செல்கின்றாள்.
கலி பீடித்தக் காரணத்தால், பல இன்னல்களை சந்திக்கின்றான் நளன். கார்க்கோடகன் எனும் பாம்பு இவனைத் தீண்டியதால், அவன் அழகுமிகு உருவம் மாறி அருவருக்கத்தக்க உருவம் (வாகுகன் என்ற பெயர்) கொண்டான். நடுவே, தமயந்தியின் தந்தை நளனை எங்கு தேடியும் கிடைக்காமையால், அவளின் நல்வாழ்வுக்காக, மறு சுயம்வரம் நடத்த நாள் குறிக்கின்றான். நளன் பல இடங்களுக்குச் சென்று பின், ரிதுபர்ணன் எனும் அரசனிடம் தேரோட்டியாக "வாகுகன்" என்ற பெயரில் சேர்கின்றான்.ரிதுபர்ணன் தமயந்தியின் மறு சுயம்வரத்திற்குச் செல்ல விழைகின்றான். அது சமயம் நளன் தேரோட்டியாக அமைகின்றான்.
நளனுக்கு அச்வ (குதிரை) சாஸ்திரம் நன்கு தெரியும். ஆகையால் குதிரைகளின் காதில் மந்திரம் ஓதினான். தன் மனைவியின் சுயம்வரத்திற்காக மற்றொருவனை தேரில் ஏற்றி மாமன்னனாகிய நளன், ரதத்தைச் செலுத்துகின்றான். வாயு வேகத்தில் தேர் பறக்கின்றது. ரிதுபர்ணன் இதுவரை காணாத வேகத்தைக் காண்கின்றான்.
அரசனின் உத்தரீயம் எனும் மேல் துண்டு ரதத்தின் வேகத்தால்
பறந்து விழுகின்றது.ரிதுபர்ணன் ரதசாரதியாகிய நளனாகிய வாகுகனைக் கூப்பிட்டு, "துண்டு விழுந்துவிட்டது, எடுக்க வேண்டும்" என்று கூறுகின்றான். இதைக் கூறி முடிக்கும் முன்பே ரதம், விந்தை மிகு வேகத்தால், பல காதம் (பல கிலோமீட்டர்கள்) கடந்துவிட்டது.
ஆச்சர்யம் அடைந்த அரசன் தன் தேரோட்டி சாதாரணன் அல்ல, அவனிடம் வித்தை இருக்கின்றது எண்ணி, வாகுகனைப் பணிந்து வணங்கி, தேரினை வேகமாக செலுத்த உதவும் அஸ்வ சாஸ்திரத்தைப் போதிக்கக் கேட்கின்றான். அதற்குப் பதிலாக தான் வல்லமை பெற்ற விருக்ஷ (மரம்) சாஸ்திரம் என்ற கணித சாஸ்திரத்தை நளனுக்கு அறிவிக்கின்றான்.
விருக்ஷ சாஸ்திரம் என்பது ஒரு மரத்தைப் பார்த்த உடனேயே
அதில் எத்தனை இலைகள், கிளைகள், காய்கள், கனிகள், பூக்கள் என்பனவற்றை உடனடியாக அறியும் ஒரு அற்புதக் கணிதக் கலை.
(முந்தைய பதிவில், தற்காலத்தில் மரத்தின் வயது காண உதவும் கணித கலையையும், பலாப்பழத்தைப் பிளக்காமலேயே அதில்
உள்ள சுளைகள் எண்ணும் விந்தையான கணிதத்தையும் காணுங்கள்)
கலி புருஷன் பீடித்தமையால் அனேக துன்பங்கள்
அனுபவித்து வந்தான் நளன். கலி புருஷன் நீங்குவதற்கு
ஒரே வழி கணித கலையை அறிவது தான்.
கணிதத்தை அறிந்தால் உடனே கலி விலகும்
என்பது கலி புருஷனின் லக்ஷணம்.
நளன் ரிதுபர்ணனிடமிருந்து கணித கலையை
அறிந்த உடனேயே கலி அவனை விட்டு நீங்குகின்றது.
வாகுகன் என்ற அருவருக்கத்தக்க நிலையில் இருந்தவன்
அழகுமிக்க நளன் ஆக மாறுகின்றான்.
நளனைக் கண்டு அதிர்ந்த ரிதுபர்ணன்,
அவனை தமயந்தி அரசவை கொண்டு சேர்க்கின்றான்.
பல சம்பவங்களுக்குப் பிறகு நளனும் தமயந்தியும்
இணைந்து நீண்ட காலம் வாழ்கின்றார்கள்.
இந்தக் காவியத்தைக் கேட்டாலே
கலி தோஷம் நீங்கும் என்கிறார்
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர்.
என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய்! மெய், என்று - நன்காலி
மட்டிறைக்கும் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி. (401)
(கலி புருஷன், நளனைப் பார்த்துச் சொன்னது யாதெனில்,
என் காலத்து (கலியுகத்தில்) உன் சரித்திரத்தை எவர் ஒருவர் கேட்கின்றாரோ அவரை அடைந்து துன்பம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்.)
{கலி தோஷத்தினை நீக்கும் ஸ்லோகம் :
ஓம் கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா:
நளஸ்யச ரிதுபர்ணஸ்ய ராஜரிஷி:
கீர்த்தனம் கலி நாசனம்
கார்கோடகன் (எனும் பாம்பு) நளனைத் தீண்டியது தான் அவனுக்கு கலி விலக உதவியது. ரிதுபர்ணனிடம் இருந்து விருட்ச (மரங்களைப் பற்றிய அரிய வகை) கணிதம் கற்றதால் கலி விலகியது.ஆகவே, கலி தோஷம் நீங்க - கார்க்கோடகன், நளன், தமயந்தி, ரிதுபர்ணன் ஆகிய நான்கு பேரையும் சொன்னாலே கலி விலகும் என்கின்றது மேற்கண்ட ஸ்லோகம்.}
கணிதம் கற்றால் காலத்தை வெல்லலாம் என்பதற்கு
ஒரு சிறு எடுத்துக் காட்டுதான் இந்தக் காவியம்.
தற்காலத்தில் மைக்ரோசா•ப்ட் பில்கேட்ஸ், விப்ரோ (மைண்ட் ட்ரீ) ஆசிப் ப்ரேம்ஜி, இன்•போசிஸ் நாராயண மூர்த்தி போன்றோர்கள் பெரும் செல்வம் கொண்டமைக்கு ஒரு பெரும் காரணம், கணிதம் அறிந்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கணிணியே காலத்தை வெல்லும் காரணியாக (கால கணிதத்தையும்) அறிந்து
அதில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்கள்.
கணிதம் கற்போம் ! கலி விலகட்டும் !!

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer