151. ஆனால் கடுமையான உபத்திரங்கள் சில இருப்பதாக நோயாளி கூறுவாரேயானால் வைத்தியர் அவரைச் சோதிக்கவேண்டும். அவ்வாறு சோதித்தால் நோயாளி கூறியதைத் தவிர வேறு பல நோய்க் குறிகளும் இருப்பது தெரியவரும். எல்லா குறிகளையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால்தான், நோயின் முழு வடிவம் தெரியும்.
152. திடீர் வகை நோய் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாய் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் குறிகள் பலமாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. அதைப்போலவே போதிய அளவு எண்ணிக்கையுள்ள மருந்துகளின் வேலைகளைப்பற்றி நாம் தெரிந்துகொண்டிருந்தால் நோய்க்கு ஏற்றதான மருந்தைத் தவறின்றித் தேர்ந்தெடுக்க முடியும். பல்வேறு மருந்துகளின் குறிப் பட்டியல்களிலிருந்து இயற்கை நோயின் மொத்தக் குறிகளையும் பெரும்பாலும் ஒத்துள்ள செயற்கை நோயை தோற்றுவித்த மருந்து எது என்று தேர்ந்தெடுப்பது கஷ்டமாய் இருக்காது.
153. ஏற்ற ஹோமியோபதி மருந்தை தேடுகிற அதாவது நீக்கப்படவேண்டிய இயற்கை நோயுடன் ஒற்றுமையுள்ள செயற்கை நோயைத் தோற்றுவித்த மருந்ததை கண்டு பிடிப்பதற்காக, இயற்கை நோயின் மொத்தக் குறிகளுடன் நமக்குத் தெரிந்த மருந்துகளின் குறிப்பட்டியல்களை ஒப்பிட்டு பார்க்கும் இவ்வேலையில், மிகத் தெளிவாய், தனிப்பட்டதாய், அபூர்வமாகவும், வினோதமாகவும் உள்ளதாய் (விசேஷத் தன்மை) இருக்கும் நோய்க்குறிகள் முக்கியமானதாக கருதப்படுகின்றனங கருதப்படவும் வேண்டும் ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் குறிப்பட்டியலில் காணப்படும் விசேஷக்குறிகளுடன் நோயின் விசேஷக் குறிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அம்மருந்து அந்நோயை நீக்க மிகவும் ஏற்றதாகும். பசி இல்லாமை,தலைவலி,பலவீனம், நல்ல தூக்கம் இல்லாமை,இனம் கூறமுடியாத வேதனை, இவைபோன்ற பொதுவான திட்டமாய் கூறமுடியாத குறிகளை பற்றி நாம் கவனிக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பொதுவான நோய்க்குறிகள் எல்லா நோய்களிலும் எல்லா மருந்துகளிலும் கூட காணப்படுகின்றன.
154. மிகமிகத் தகுந்தது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் குறிப்பட்டியலில் நீக்கப்பட வேண்டிய நோயின் வினோதமான அபூர்வமான தனிப்பட்டதான (விசேஷக்) குறிகள் காணப்பட்டால் நோய்க் குறிகளுடன் அதிக அளவில் ஒற்றுமையுள்ளதாகவும் இருந்தால் அந்நோய்க்கு அம் மருந்தே ஹோமியோபதி முறைப்படி மிக மிக ஏற்றது. அம்மருந்தைக்கொடுக்க முதல் வேலையிலேயே அதிகமான உபத்திரவங்கள் எதுவும் ஏற்படாமல் நோய் (அதிக நாட்படாததாய் இருந்தால்) நீங்கும்.
155. அதிகமான உபத்திரவங்கள் எதுவும் இல்லாமல் என்று நான் எழுதியிறுப்பதன் காரணத்தை இதோ குறிப்பிடுகிறேன் மிக ஏற்றது என்று தேர்ந்தடுத்து கொடுக்கப்படும் மருந்தின் பல குறிகளில் நோய்க்குறிகளுடன் ஒற்றுமையுள்ள சில குறிகள் மட்டும் அதைவிட பலவீனமாயுள்ள நோய்க்குறிகளைப்போக்கடித்து உடலில் அந்நோய்குறிகள் குடிகொண்டிராத இடங்களை பிடித்துக்கொள்கின்றன. மருந்தின் மற்ற குறிகளுக்கும் நோய்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாதலால் அவைகளால் ஒரு பயனும் விளைவதில்லை. ஹோமியோபதி முறைப்படி மிகவும் குறைந்த அளவில் மருந்தை உபயோகிக்கப்படுவதால் மணிக்கு மணி குணமடைந்து வரும் நோயாளி நோயுடன் சம்பந்தமில்லாத மருந்துக்குறிகளினால் பாதிக்கப்படுவது கிடையாது.
156. எவ்வளவு நன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நோயாளிக்கு உணர்ச்சிகளை நுட்பமாய் உணரும் உடல்வாகு இருந்து மருந்தின் அளவும் போதிய அளவுக்கு நுண்ணியதாய் இல்லாமல் இருந்தால்?அம்மருந்து உடலில் தங்கி வேலை செய்யும் காலத்தில் சிறிதளவாவது வேதனையோ அல்லது புதியதான நோய்க்குறிகளோ தோன்றாமல் இருப்பதில்லை. எந்த ஹோமியோபதி மருந்தும் இதற்கு விலக்கில்லை. மருந்தும், நோயும் எல்லாக் குறிகளிலும் ஒற்றுமையாய் இருப்பது அரிதினும் அரிது. ஆயினும் (சாதாரணமான சந்தர்ப்பங்களில்) முக்கியத்துவம் அற்ற இவ்வித்தியாசங்கள் உயிர்ப்புச் சக்தியினால் புறக்கணிக்கப்படுகின்றன. அளவு மீறிய உணர்ச்சி உள்ளவர்களைத் தவிர மற்ற நோயாளிகளிடம் அவைகளின் விளைவைக் காண முடியாது மாறுபாடான குனங்களை உடைய கலவை மருந்துகளை உட்கொள்ளுவது தவறான பழக்க வழக்கங்கள், கோபம் வருத்தம் ஆகிய மன உணர்ச்சிகளுக்கு வசப்படுதல் ஆகியவை எதுவும் குறிக்கிடாவிட்டால் ஆரோக்கிய நிலைமை படிப்படியாய்த்திரும்பி முழு குணமும் ஏற்படுகிறது.
157. ஹோமியோபதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் மருந்து நோய்க்கு ஏற்றதாகவும் குறைந்த அளவிலும் இருப்பதால் ஒற்றுமையான குறிகளை உடைய நோயை மிருதுவாக நீக்கி அழித்தும் விடுகிறது. நோய்க்குறிகளுடன் ஒற்றுமையில்லாத அதன் மற்ற குறிகளை அதாவது புதிய கெடுதாலான கோளாறுகளைத் தோற்றிவிப்பதில்லை. இது உண்மையே ஆயினும் மருந்தை உட்கொண்டதிலிருந்து சுமார் ஒரு மணி அல்லது சில மணி நேரங்கள் வரை நோய்க்குறிகள் சிறிது அதிகரித்தே காணப்படுகின்றன. கொடுக்கப்படும் மருந்தின் அளவு மிக அதிகமாய் இருந்தால் இப்புதிய குறிகள் பல மணி நேரங்களுக்கு நீடித்திருக்கலாம். அவை இயற்கை நோய்க்குறிகளைப்போலவே தோன்றுவதால் நோயாளிக்கு தன்னுடைய நோய்தான் அதிகமாகியிருக்கிறதோ என்று நினைக்கும்படி இருக்கும். ஆனால் உண்மையில் அவை இயற்கை நோயைவிடச்சிறிது அதிக வலிமை வாய்ந்த மருந்தினால் ஏற்படும் நோய்க்குறிகளே.
158. ஹோமியோபதி முறைப்படி கொடுக்கப்டும் மருந்தினால் சில மணி நேரங்களில் நோய் அதிகமாவது நியாயமாக ஏற்படக்கூடியதேயாகும். (இவ்விதம் நோய் அதிகமானால் முதல் வேளை மருந்தினாலேயே நோய் முக்கால் பாகம் குறைந்து விட்டது என்று முன்கூட்டியே தீர்மானம் செய்துவிடலாம்). ஏனெனில் இயற்கை நோயை முறியடித்து அழிக்க வேண்டுமானால் மருந்து அவ்வியற்கை நோயைவிடப் பலம் வாய்ந்ததாகத்தான் இருக்கவேண்டும். பலமுள்ள நோய் பலவீனமான நோயை அழித்து விடுவதை இதற்கு உதாரணமாய்க் கூறலாம்.
159. கொடுக்கப்படும் ஹோமியோபதி மருந்தின் அளவு குறையக் குறைய மருந்து கொடுத்தப்பின் சிறிது நேரத்திற்கு காணப்படும் நோய் அதிகரிப்பின் காலமும் அளவும் குறைவாய் இருக்கும்.
160. ஆயினும் ஹோமியோபதி மருந்தின் அளவை நாம் எவ்வளவு தூரம் குறைத்தாலும் இயற்கை நோயை நீக்க முடியாத அளவுக்கு அதன் அளவை குறைக்க முடியாது அதாவது அளவை மிக மிகக் குறைந்தாலும் ஹோமியோபதி மருந்து இயற்கை நோயை நிச்சயமாய் அழித்துவிடும். இதனால்தான் ஏற்றதான ஹோமியோபதி மருந்தை உட்கொண்டவுடன் சிறிது நேரத்திற்கு நோய் அதிகமாய் காணப்படுகிறது.
161. மருந்து கொடுத்தபின் சில மணி நேரங்களுக்கு மட்டும் நோய் அதிகரித்துக் காணப்படுகிறது என்று நான் குறிப்பிடுவது அதிக நாட்படாத திடீர் வகை நோய்களில் மட்டும்தான். பலகாலமாய் நீடித்திருக்கும் நோயில் அதிகக் காலம் உடலில் தங்கி வேலை செய்யும் மருந்தை உபயோகிக்கும் போது அம்மருந்து பல நாட்கள் உடலினுள் தங்கியிருப்பதால் சில சமயங்களில் ஆறு, எட்டு அல்லது பத்து நாட்களுக்குக்கூட நோய் அதிகரித்துக் காணப்படலாம். அதாவது ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களுக்கு நோய் அதிகரிப்பதும் இடை நேரங்களில் குறைவதுமாக இருந்து முடிவில் முழு குணமும் தோன்றும்.
162. ஒவ்வொன்றுக்கும் உரியதான உண்மையான குணங்கள் என்னென்ன வென்று அறியப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை அதிகமாய் இல்லாபோது, சிகிச்சைக்கு வந்துள்ள நோயின் பல குறிகளில் ஒரு சில குறிகளே மிகச்சரியானது என்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்தில் காணப்படும். ஆயினும் அதைவிடத் தகுதி வாய்ந்த வேறு மருந்து இல்லாததால் அதை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
163. இவ்விதமான சமயத்தில் கொடுக்கபடும் மருந்தினால் நோய் முழுவதுமோ அல்லது தொந்தரவு இல்லாமலே குணமாகுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மையே. ஏனெனில் அம்மருந்தை கொடுத்தப்பின்னர் நோயில் அதற்கு முன் காணப்படாத முழுத் தகுதியும் பெற்றிராத மருந்தினால் உண்டாக்கப்பட்ட அதிகப்படியான குறிகள் தோன்றுகின்றன ஆயினும் நோயின் ஒரு பகுதி அதாவது மருந்தின் குறிகளோடு ஒற்றுமை பெற்று இருக்கும் நோய்க்குறிகள் குணமாவது இதனால் தடைபடுவதில்லை அதிகப்படியான குறிகள் தோன்றாமல் குணம் ஏற்படுவதில்லை என்பதுதான் விஷயம். இருந்த போதிலும் கொடுக்கப்படும் மருந்தின் அளவு கூடுமான வரை குறைவாக இருந்தால் அதிகப்படியான குறிகள் கடுமையாய் இருப்பதில்லை.
164. மிகவும் தகுதி வாய்ந்தது என்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்தின் செயற்கை நோய்க்குறிகளில் ஒரு சிலவே இயற்கை நோயுடன் ஒற்றுமையாய் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அச்சமயத்தில் அம்மருந்தினால் குணம் ஏற்படுமா என்று சந்தேகப்படவேண்டியதில்லை ஒற்றுமையாயுள்ள குறிகள் நோயின் அபூர்வமான தனிப்பட்ட விசேஷக் குறிகளைப்போல் இருப்பதே போதும். அவ்வாறு இருந்தால் வேறு எவ்விதக்கோளாறும் உண்டாகாமல் குணம் தோன்றும்.
165. மருந்துக் குறிகளை மேலே உள்ளபடி நோயின் விசேஷக்குறிகளுடன் ஒற்றுமையாய் இல்லாமல் அதன் பொதுவான சாதாரணக்குறிகளுடன் மட்டுமே (குமட்டல், பலவீனம், தலைவலி முதலியவைகளை உதாரணமாக கூறலாம்) ஒற்றுமையுள்ளதாக இருந்தால் அதைவிடத் தகுதி வாய்ந்த வேறு மருந்தும் தெரியாவிட்டால் நோய் விரைவில் குணமாகும் என்று வைத்தியர் நம்பமுடியாது.
166. ஆனால் இவ்விதமான ஒரு சந்தர்ப்பம் தோன்றுவது மிக அபூர்வம் ஏனெனில் ஏராளமான மருந்துகளின் உண்மை விவரங்கள் நமக்குத் தெரிந்திருக்கின்றன. ஏதோ ஒரு மருந்தினால் துன்பம் நேருமானால் அதைவிடத்தகுதி வாய்ந்த மற்றோர் மருந்தை கொடுக்கும்போது அத்துன்பம் மறைந்துவிடுகிறது.
167. முழுத் தகுதியும் இல்லாத ஒரு ஹோமியோபதி மருந்தை உபயோகிக்கும் காலத்தில் அதிகப்படியான குறிகள் தோன்றினால், நோய் திடீர் வகையைச் சேர்ந்ததாக இருந்தால், மருந்தின் சக்தி முழுவதும் செலவழியும் காலம் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. புதிதாதகத் தோன்றிய குறிகளுடன் நோயின் பழைய குறிகளில் மிச்சம் இருக்கும் குறிகளையும் ஒன்று சேர்த்து மாறுபட்ட நிலைமையை மீண்டும் ஆராயவேண்டும்.
168. அவ்வாறு ஆராய்ந்தால் அந்நிலைமைக்கு முற்றிலும் ஏற்றதான மற்றோர் மருந்தை கண்டுபிடித்துவிடலாம். அம்மருந்தைக்கொடுத்தால் ஒரு வேலையிலேயே நோய் முழுவதும் நீங்கும் அல்லது கணிசமான அளவு நோய் பணிந்து விடும். இரண்டாவதாதக கொடுக்கப்பட்ட மருந்தினாலும் விரும்பிய பலன் விளையாவிட்டால் மறுபடியும் நோயின் அப்போதையக் குறிகளை கவனித்து அதற்கு ஏற்றபடி மருந்தை தேடி கொடுக்கவேண்டும் நோய் முற்றிலும் நீங்கிப் பழைய ஆரோக்கிய நிலைமை திரும்பும் வரை இவ்விதம் நாம் அடிக்கடி நோயின் குறிகளைத் திரும்பத் திரும்ப ஆராய்ச்சி செய்து தேடி தேடி தகுதியான ஹோமியோபதி மருந்துகளை மீண்டும் கொடுத்துவரலாம்.
169,170. முதல் முறையாக ஒரு நோயை சோதனை செய்து ஏற்ற மருந்தை தேர்ந்தெடுக்கும் சமயத்தில் நோயின் மொத்தக்குறிகளை நீக்க அவ்வொரு மருந்து மட்டும் போதாது என்றும் போட்டியிடுவதைப்போல அந்நோய்க்கு இரண்டு மருந்துகள் தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றன என்றும் தோன்றினால் அவ்விரண்டில் ஏதோ ஒன்றைக் கொடுத்த பிறகு மற்றொரு மருந்தை அடுத்தபடியாக கொடுப்பது சரியான வழியல்ல. முதல் மருந்தினால் நோய்க்குறிகளில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும். ஆதலால் நோயாளியை மீண்டும் பரிட்சை செய்து மாறுபட்ட நிலைமைக்கு ஏற்றதான மருந்தை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். சிற்சில சமயங்களில் முதல் பரிட்சையில் இரண்டாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தும் தகுதியுள்ளதாக கூட ஆகலாம். ஆனால் எப்படியும் டோட்டல் போட்டுத்தான் பார்க்கணும்.
171. கெட்ட நடவடிக்கை காரணமாக இல்லாமல், சோரா விஷ நோய்க் கூறினால் ஏற்படும் நீடிக்கும் வகை நோய்களில்,நோயை குணம் செய்ய சோராவை அடக்கும் சக்தி வாய்ந்த பல மருந்துகளை ஒன்றன் பின்னொன்றாக கொடுக்க வேண்டி இருக்கிறது. மருந்தை மாற்றும்போது ஒவ்வொரு தடவையும் அதற்கு முன்னதாகக் கொடுக்கப்பட்ட மருந்தின் வேலை தீர்ந்த பிறகு மிச்சம் இருக்கும் குறிகளை ஆதாரமாய் கொண்டே ஏற்ற ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
172. நோயின் குறிகள் மிகச்சிலவாய் இருக்கும்போது அந்நோயை குணம் செய்வதில் கஷ்டம் தோன்றுகிறது. இக்கஷ்டமான நிலைமையை நாம் மிகக் கவனமாய் பார்க்கவேண்டும். அதை நீக்கினால் யாவற்றினும் சிறந்த நம் ஹோமியோபதிச்சிகிச்சையினால் அந்நோயைக் குணம் செய்துவிடலாம்.
173. இரண்டொரு குறிகள் மட்டுமே உள்ள நோய்களைக் குணம் செய்வது மிகக் கடினம். ஏனெனில் இவ்வொன்றிரண்டு குறிகள் நோயின் மற்ற எல்லா குறிகளையும் மறைத்துவிடுவின்றன. இத்தகைய நோய்களை அரைகுறை நோய்கள் என்றழைக்கலாம்.
174. இவ்வறைகுறை நோய்களின் முக்கியமான குறி ஒன்று உடலின் உட்புறக்கோளாறாகவோ (வருஷக் கணக்காய் இருந்து வரும் தலைவலி பலகாலமாய் நீடித்திருக்கும் வயிற்றுப்போக்கு பல்லாண்டுகளாய் தோன்றிக் கொண்டிருக்கும் இருதய வலி முதலிவைகளை உதாரணமாய் கூறலாம்) அல்லது உடலின் வெளிப்புறக் கோளாறுகளைச் சரும நோய்கள் என்று அழைக்கிறோம்.
175. முதல் வகையைச் சேர்ந்த (உடலின் உட்புற கோளாறு) அரைகுறை நோய்களில் நோயின் முழு வடிவம் வெளிப்படாமல் இருப்பதற்குப் பெரும்பாலும் வைத்தியரின் கவணக்குறைவே காரணமாக இருக்கிறது. வெளியே காணப்படும் குறிகளை அவர் முற்றிலும் கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார்.
வழக்கம்போல் பயனுள்ள விடயங்கள் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 1
மிகவும் நீண்ட பதிவுகள் என்பதனால் சிறிய எழுத்துக்களாய் மாற்றிவைத்துள்ளேன் நண்பரே! ஆர்கனான் பயனுள்ள பகுதி...ஹோமியோபதியின் சித்தாந்தத்தை தெளிவுபடுத்தும் பகுதி! இத்தொடரை முழுமையாய் படித்தவர்க்கு நோய்க்குறிகளும் மருந்துகளும் தொடர் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.... நன்றி நண்பரே!
Delete