65. மேற்கண்ட விஷயமாக எல்லோருக்கும் தெரிந்த சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொதிக்கும் தண்ணீரில் ஒரு கையை வைத்திருந்தால் அது மற்ற கையை விடச்சூடாகிறது. (முதல் வேலை) ஆனால் தண்ணீரிலிருந்து எடுத்து நன்றாகத் துடைத்துவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் மற்ற கையை விடச் சில்லென்று குளிர்ந்துவிடுகிறது. (இரண்டாம் வேலை) கடுமையான உடல் உழைப்பினால் முதலில் உடம்பில் சூடு உண்டாகிறது (முதல் வேலை) பிறகு சில்லிப்பும்,நடுக்கலும் தோன்றுகின்றன (இரண்டாம் வேலை) மிகவும் சில்லிப்பாக இருக்கும் குளிர்ந்த தண்ணீரில் நெடு நேரம் கையை வேத்திருந்தால் அது முதலில் மற்ற கையை விட வெளுத்தும் சில்லென்றும் இருக்கும் (முதல் வேலை) தண்ணீரிலிருந்து எடுத்துத் துடைத்த பிறகு சூடு உண்டாக்க கை சிவந்து வேக்காடும் ஏற்படலாம் (இரண்டாம் வேலை).
முதல் நாள் அதிகச் சாராயம் குடித்து உடம்பில் சூடு உண்டானவர்களுக்கு (முதல் வேலை) மறு நாள் மூச்சுக் காற்றுகூடச் சில்லென்று ஆகும் (இரண்டாம் வேலை). தண்ணீர் கலப்பு அதிகமாய் இல்லாமல் கெட்டியாகவுள்ள காப்பி கஷாயத்தைக் குடித்தால் முதலில் மன உற்சாகமும் (முதல் வேலை) பிறகு வெகு நேரத்திற்கு சோம்பேறித்தனமும் (இரண்டாம் வேலை) ஏற்படுகின்றன. அபினியை உட்கொண்டால் முதலில் மயக்கமும் (முதல் வேலை) பிறகு அதிகத் தூக்கமின்மையும் (இரண்டாம் வேலை) ஏற்படுகின்றன. அபினியினால் முதலில் மலச்சிக்கலும் (முதல் வேலை) பிறகு வயிற்றுப் போக்கும் (இது இரண்டாம் வேலை) உண்டாகும். குடலில் அருவருப்பை உண்டுபண்ணி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் (முதல் வேலை) மருந்தை உபயோகித்த பிறகு பல நாட்களுக்கு மலச்சிக்கல் தோன்றுகிறது (இது இரண்டாம் வேலை) இதே போல் அதிக அளவிலே உட்கொள்ளப்பட்டதால் ஆரோக்கிய உடலிலே மருந்துகளால் ஏற்படுத்தப்படும் மாறுதல்கள் (முதல் வேலை) நேர் எதிரான ஒரு மாறுதலை (இரண்டாம் வேலை) யும் உண்டாக்க நம் உயிர்ப்புச் சக்திக்கு சக்தி இருக்கிறது என்பது நமக்கு தெளிவாக இப்போது விளங்கும்.
66. ஹோமியோபதி வைத்திய முறைப்படி நுண்ணிய அளவிலே மருந்தை உட்கொள்ளும் போது மேலே கூறிய முதல் வேலை (Agg) ஏற்படத்தான் செய்கிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அது மிகவும் கொஞ்சமாய் ஏற்படுவதால் கூர்ந்து கவனித்தால்தான் கண்டு பிடிக்க முடியும் . இது போலவே உயிர்ப்புச் சக்தியின் இரண்டாம் வேலை(Amel) யும் குறைவாய் இருப்பதால் எளிதில் அறிய முடியாது.
67. ஹோமியோபதி வைத்திய முறைப்படி சிகிச்சை செய்வதால் ஏற்படும் நன்மைகளை மேலே காட்டிய மறுக்க முடியாத உண்மைகள் நமக்கு எடுத்துக் காட்டுவதுடன் மற்ற முறைகளின் படிச் செய்யப்படும் சிகிச்சைகள் பயன் அற்றவை என்பதையும் வெளிப்படுத்துகின்றன அல்லவா!
68. ஹோமியோபதி வைத்திய முறைப்படி இயற்கை நோய்களை நீக்க அவைகளை ஒத்த குறிகளை உண்டாக்கும் வல்லமையுள்ள மருந்துகள் மிகக் குறைந்த அளவில் கொடுக்கப்படுகின்றன. இதனால் இயற்கை நோய் நீங்கி மருந்தின் செயற்கை நோய்ச் சக்தி உடலில் தங்குவது உண்மையேயாயினும் அச்சக்தி மிகவும் குறைவானதால் தானாகவே உடலைவிட்டுப்போய் விடுகிறது. பூமியின் சுழல் வேகத்தின் காரணமாக அம்மருந்து (மிச்சம் மீதி இல்லாமல்) வெளியேறிவிடுகிறது.
69. ஆண்டிபதி (ஆன்டிபயாடிக்) சிகிச்சை முறையில் மேலுள்ளதற்கு நேர் எதிரான செயல் நடைபெறுகிறது. நோய்க் குறியை எதிர்ப்பதற்காக வைத்தியர் உபயோகிக்கும் மருந்தின் குறி (உதாரணமாக ஓபியத்தின் முதல் வேலையில் தோன்றும் உணர்ச்சியிழத்தல் மயக்கம் ஆகிய குறிகளைக் கொண்டு கடுமையான வலியை எதிர்ப்பது) ஓபியத்தை பச்சையாக கொடுக்கும் போது நோய்க் குறிக்கு பொருத்தமானது அல்ல. இரண்டுக்கும் தெளிவான தொடர்பு இருக்கிறது. ஆனால் அத்தொடர்பு நியாயமாய் இருக்க வேண்டியதற்கு எதிரானது எதிர் குணமுள்ள மருந்துக்குறியை உபயோகித்து நோய்க் குறியை நீக்கலாமென்று கருதப்படுகிறது. ஆனால் அது சாத்தியமானதல்ல. இயற்கை நோய்க்குறிகளை ஒத்த செயற்கை நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமை பொருந்தியது என்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஹோமியோபதி மருந்து, உடலில் எந்தெந்தப் பகுதிகளைத் தொடுகிறதோ, அந்தந்தப் பகுதிகளையே ஆண்டிபதி முறைப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மருந்தும் தொடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அது (ஆண்டிபதி மருந்து) நோய்க் குறிக்கு எதிராக வேலை செய்து அந்த (நோய்க்குறியை) சிறிது நேரம் மறைத்து வைக்கிறது. மருந்தின் முதல் வேலை நடைபெறும் காலத்தில் நோய்க் குறியும் மருந்தின் குறியும் ஒன்றையொன்று அடக்கிவிட்டது போல் தோன்றுவதால் உயிர்ப்புச்சக்தி விடுதலை பெற்று விட்டது போல் காணப்படுகிறது. ஓபியத்திலுள்ள (மாய) மயக்கச்சக்தி நோயில் ஏற்படும் வலியை அடக்குவதை இதற்கு உதாரணமாய்க் கூறலாம். முதல் சில நிமிஷங்களுக்கு உயிர்ப்புச் சக்தி ஆரோக்கிய நிலைக்குத் திரும்பி வந்துவிட்டது போல தோன்றும்.
ஓபியத்தின் மயக்கச் சக்தியையோ, நோயினால் எற்படும் வலியையோ, அது உணருவதில்லை. ஆனால் எதிர்க்குணமுள்ள மருந்துக்கு ஹோமியோபதி மருந்தைப் போல இயற்கை நோயை விரட்டி விட்டு உயிர்ப்புச் சக்தியைத் தாக்கும் குணம் அதற்கு இல்லை. முதலில் நோய்க் குறியை அடக்குவது போல் வேலை செய்து முடிவில் அதை நீக்க முடியாமல் ஆண்டிபதி மருந்து உடலைவிட்டு வெளியேற்றப்படுகிறது. நீக்கவேண்டிய நோய் நீக்கும் மருந்தை மொத்தக் குறிகளினால் நிச்சயமாய் அது காட்டும். மற்ற ஆன்டிபதியர்களின் விளக்கம் கனவேயாகும். வேற்றுமையான அலோபதி மருந்தை அளவில் அதிகம் கொடுத்தாலும் வேற்றுமையான நோயைப் போல முன்னுள்ள நோயை நீக்காது.
மொத்தக் குறிகளை மதியாமல் ஒற்றைக்குறியை நீக்க வேண்டும் என்று வேற்றுமைக்குணமுள்ள மருந்திட்டால் சற்றே மறைந்து திரும்பிடும். (சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, அல்சர் போன்றவைகளுக்கு அதை மட்டும் பார்த்து மருந்து தருவதை தான் ஒற்றை குறி என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அதாவது சர்க்கரை வியாதிகாரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பலவிதமான குறிகள் இருக்கும். ஒவ்வொருரையும் அவர்களுடைய எல்லா குறிகளையும் கேட்டு தொகுத்து, மொத்த குறிகளுக்கு தக்கதொரு மருந்து தர வேண்டும் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.) மொத்தக் குறிகளை மதிப்பிட்டு ஒற்றுமைக் குறியுள்ள மருந்திட்டால் சற்றும் மிச்சம் இல்லாமல் நோய் முற்றிலும் நீங்கும்.
70. நோய்களிலே வைத்தியர் கண்டுபிடிக்கக் கூடிய உண்மையானதும் நீக்கப்பட வேண்டியதுமான ஒவ்வொரு நோய்களும். நோயாளி படும் துன்பங்கள், அவனுடைய ஆரோக்கிய நிலைமையில் ஏற்படும் தெளிவான மாறுதல்கள் ஆகிய இரண்டிலும் (சுருக்கமாக நோயின் மொத்த குறிகளில்) தான் அடங்கியிருக்கிறது. இம்மொத்தக்குறிகளின் மூலமே ஒவ்வொரு நோயும் தன்னை நீக்கக் கூடிய மருந்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆதலால் நோயின் காரணம் என்று கற்பனை செய்யப்படும் மற்ற எல்லா விஷயங்களும் முற்றிலும் பயனற்றதுதான். ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களையே நாம் நோய் என்று பெயரிட்டு அழைக்கிறோம் அம் மாற்றங்கள் மறைந்து ஆரோக்கிய நிலைமை மீண்டும் தோன்ற வேண்டுமானால், மருந்துகளின் துணைகொண்டு, உடல் நிலைமையில் மற்றொரு மாறுதலை ஏற்படுத்த வேண்டும்.
நமக்குள்ள ஒரே வழி அதுதான். மனிதனின் ஆரோக்கிய நிலைமையை மாற்றக் கூடிய அதாவது அவன் உடலில் நோய்க் குறிகளைத் தோற்றுவிக்கும் வல்லமை மருந்துகளுக்கு இருப்பதினால்தான் அவை நோய் தீர்க்கும் சக்தியைப் பெற்றிருக்கவேண்டும். மருந்துகளை நோயற்ற உடலில் கொடுத்துச் சோதனை செய்து இவ்விஷயத்தை நாம் மிகத் தெளிவாகவும் தூய்மையான முறையிலும் தெரிந்து கொள்ளலாம். நோயற்ற ஒருவர் உடலில் நீக்கப்படவேண்டிய (இயற்கை) நோயின் குறிகளுக்கு மாறான (செயற்கை) நோய்க் குறிகளை உண்டாக்கும் வல்லமையுள்ள (அலோபதி முறை) மருந்துகளால், அவ்வியற்கை நோயைக் குணம் செய்ய முடியாது. இரண்டாவதாகத் தரப்படும் ஹோமியோபதி மருந்து எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும் முதலாவதாகத் தோன்றிய நோயுடன் (குறிகளில்) ஒற்றுமையுள்ளதாக இல்லா விட்டால், அதனால் முதல் நோயை நீக்கவோ அழிக்கவோ குணம் செய்யவோ ஹோமியோபதி மருந்தினால் முடியாது என்பதை இயற்கையில் நாம் காண்கிறோம்.
நீக்கப்படவேண்டிய நோயின் குறிகளில் ஏதோ ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அக்குறிக்கு நேர் எதிரானதொரு செயற்கை நோய்க் குறியை நோயற்ற உடலிலே தோற்றுவிக்கும் மருந்துகளை அலோபதி முறைப்படி உபயோகித்து, நீடித்துள்ள நோயை எக்காலத்திலும் குணம் செய்ய முடியவே முடியாது. நோய் சிறிது காலம் தான் அடங்கி இருக்கும். பிறகு தவறாமல் கடுமையான அளவில் திரும்பிவரவே செய்யும் நீடித்துள்ள கடுமையான நோய்களிலே, தற்காலத்தில் தற்சாந்தியை அளிக்கும் விதத்தில் செய்யப்படும் சிகிச்சைகளால் எந்த பயனும் விளையாது. அலோபதி ஆண்டிபதி ஆகிய இருமுறைகளாலும் விரும்பிய பயன் விளையாது என்பதைப்பர்த்தோம். இப்பொழுது மூன்றாவதும் கடைசியுமான ஹோமியோபதி முறைதான் இருக்கிறது.
இம்முறையில் இயற்கை நோயில் காணப்படும் மொத்தக்குறிகளை அனுசரித்து மருந்து கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்ப்படும் மருந்து நோயற்ற உடலிலே இயற்கை நோயின் மொத்தக் குறிகளுடன் பெரும்பாலும் ஒற்றுமையுள்ள செயற்கை நோய்க் குறிகளை உண்டாக்கும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அம்மருந்தைத் தகுந்த அளவில் கொடுப்பதே மிகச் சிறந்த வழி உயிப்ப்புச் சக்தியை நோய்கள் மறைமுகமான முறையில்தான் தாக்குகின்றன. அதனால் நோய்ப் பொருள் மருந்தினால் வீழ்த்தப்பட்டு எளிதிலும் முற்றிலும் நிரந்தரமாகவும் நீக்கப்படுகிறது. முதலில் தோன்றிய ஒரு நோயுடன் ஒற்றுமையான குறிகளை உடைய மற்றொரு நோய் இரண்டாவதாகத் தோன்றியவுடன் முதல் நோய் விரைவிலும் நிரந்தரமாகவும் நீக்கப்படுவது இயற்கையாகக் காணப்படுகிறது. இவ்வியற்கை நிகழ்ச்சிகளைவிடச்சிறந்த உதாரணம் நமக்கு தேவை இல்லை.
71. மனித சமூகத்தைப் பீடிக்கும் நோய்கள் ஒவ்வொன்றும் ஒரு சில குறிகளின் சேர்க்கைதான் என்பதும் மருந்துப் பொருள்களால் நோய்களை அழிக்கவும் நோயற்ற நிலைமையை மீட்கவும் முடியும் என்பதும், இனி சந்தேகத்துக்கு இடமில்லாத விஷயங்கள் ஆகும். ஆனால் மருந்துகளுக்குச் செயற்கை நோய்க் குறிகளை ஏற்படுத்தும் வல்லமை இருக்க வேண்டும். ஆதலால் தான் நோய் தீர்க்கும் வேலை சம்மந்தமான கீழுள்ள மூன்று தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவையாவன:
1. நோயை நீக்குவதற்காக என்னென்ன விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வைத்தியர் தீர்மானிப்பது எப்படி? (சுலோகம் 72-104)
2. இயற்கை நோய்களை நீக்க ஏற்றதான பொருள்கள், மருந்துகளிலுள்ள நோயுண்டாக்கும் சக்தி, ஆகியவைகளைப் பற்றிய அறிவைப் பெறுவது எவ்விதம்? (சுலோகம் 105-145)
? 3. செயற்கை நோய்களை உண்டாக்கும் இப்பொருள்களை (மருந்துகள்) இயற்கை நோயை நீக்கவதற்காக கொடுப்பதற்கு மிகச் சிறந்த வழி எது? (சுலோகம் 146-245) இனி இம் மூன்று வினாக்களுக்கும் விடைகளை காண்போம்.
முதல் வினாவுக்கு விடை:
72. மனிதனுக்கு ஏற்படக் கூடிய நோய்களைத் திடீர்வகை, நீடிக்கும் வகை என இரு வகைகளாய் பிரிக்கலாம். திடீர் வகையைச் சேர்ந்த நோய்களில் உயிர்ப்புச் சக்தி மிகக்கடுமையாகத் தாக்கப்படுவதால் நோய்க் குறிகள் மிக வேகமாய்த் தோன்றி ஒரு சில நாட்களில் மறைந்து விடுகின்றன. நீடிக்கும் வகையைச்சேர்ந்த நோய்களின் ஆரம்பம் லேசாகவும் பல சமயங்களில் சிறிது கூட வெளியில் தெரியாமலும் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உயிர்ப்புச் சக்தியைச் மறைமுகமான முறையில் தாக்கி,அதன் ஆரோக்கிய நிலைமையில் படிப்படியாய் மாறுதல்கள் தோன்றும்படிச் செய்கிறது. அதனால் உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள உயிர்ப்புச் சக்தி நோயின் ஆரம்பம் அது முன்னேறும் காலம் ஆகிய இரு சமயங்களிலும் நோயை ஒழுங்காகவோ, தகுந்த அளவிலோ எதிர்க்காமல் இருந்துவிடுகிறது. ஆகவே நோயைப் போக்கச் சக்தியற்று, மேலும் மேலும் நோயின் பிடியில் சிக்கி, முடிவிலே உடல் அழிந்து விடுகிறது. நீடிக்கும் வகை நோய்கள் மூவகையான விஷநோய் கூறுகலாலேயே உண்டாக்கப்படுகின்றன.
73. திடீர் வகை நோய்கள் பல வகைப்படும். ஒரு வகையில் அளவு மீறிய உணவை உட்கொள்ளுதல் போதிய அளவு உணவு உட்கொள்ளாமை, கடுமையான உடல் வேதனைகள், குளிரில் அடிபடுதல், அதிகச் சூடுள்ள இடங்களில் அல்லது வெய்யிலில் வேலை செய்தல் அளவு மீறிய கள்குடித்தல், சிற்றின்பத்தில் ஈடுபாடு, கடுமையான உடல் உழைப்பு, வருத்தம், கவலை, பயம், கோபம் முதலிய மன உணர்ச்சிகளின் அதிகரிப்பு முதலியன நோயைத்தூண்டும் பல காரணங்களால் திடீர் வகை நோய்கள் அக்காரணங்களுக்கு இலக்கானவர்களுக்கு மட்டும் தோன்றும். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நோயைத் தூண்டிய காரணம் மேலுள்ளவைகளில் ஏதோ ஒன்றாகத் தெரிந்தாலும் உண்மையில் உடலின் உடபுறத்தே உறங்கிக்கிடக்கும் சோரா எனப்படும் விஷ நோய்க்கூறு விழித்துக்கொண்டதுதான் மூல காரணமாகும். திடீர் வகை நோய் மிகக் கடுமையானதாய் இல்லாவிட்டால் அல்லது விரைவிலே அடக்கப்பட்டாலோ அல்லது தானாகவே கூட சோரா விஷ நோய்க்கூறு பழையபடி உறங்க ஆரம்பித்துவிடும்.
மற்றொரு வகையில் வெப்ப தட்ப நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்கள், உடலுக்குத் தீங்கிழைக்கும் கிருமிகள் ஆகியவைகளால் அங்கும், இங்குமாகப் பல இடங்களிலுள்ள பல மனிதர்கள் ஒரே சமயத்தில் நோய்களால் தாக்கபடுதல். அந்த நோய்களை ஏற்றுக்கொள்ளும் உடல்வாகு உள்ளவர்கள் மிகச்சிலராகவே இருப்பார்கள். ஒரே சமயத்தில் பலரைத் தாக்கி எல்லோரிடமும் ஒரே விதமான நோய்க் குறிகளை உண்டாக்கும் குணமுள்ள கொள்ளை நோய்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவைகளே. இக் கொள்ளை நோய்கள் மக்கள் நெருக்கமாய் வாழும் பகுதிகளிலே தோன்றினால் அநேகமாகத் தொற்றும் குணமுள்ளவைகளாக ஆகின்றன. பிறகு சுரங்கள் (காய்ச்சல்) தோன்றுகின்றன. ஒவ்வொரு சுரமும் தனிப்பட்ட குணமுள்ளதாக இருப்பதால் அச்சுரத்தால் தாக்கப்படும் எல்லோருக்கும் ஒரே விதமான நோய்க்குறிகள் உண்டாகின்றன.
அச்சுரத்துக்கு மருந்து கொடுத்துச் சிகிச்சை செய்யாமல் அதன் போக்கிலேயே செல்லும்படி விட்டுவிட்டாலும்கூட விரைவில் அது தானாகவே மறைந்துபோகும். அல்லது நோயாளியை கொன்றுவிடும் யுத்தங்களாலும், வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற இயற்கையின் பயங்கர செயல்களாலும் ஏற்படும் குழப்பங்கள் பல சமயங்களில் கொல்லை நோய்களுக்கு காரணங்களாகின்றன. சில சமயங்களில் அவை திடீர் வகையைச் சேர்ந்த விஷங்களால் தோன்றுவது உண்டு. பெரியம்மை, சின்னம்மை, கக்குவான், இருமல், தாடையம்மை, காலரா, கடற்கரைப் பிரதேசங்களில் உண்டாகும் மஞ்சள் சுரம் முதலிய நோய்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. முதலில் கூறப்பட்ட நான்கு நோய்கள் ஒருவருக்கு அவர் வாழ் நாளில் ஒரு தடவைக்கு மேல் ஏற்படுவதில்லை. மற்ற இரண்டும் எத்தனை தடவைகள் வேண்டுமாயினும் ஏற்படும் ஆனால் ஒவ்வொரு தடவையிலும் நோய்க்குறிகள் ஒன்று போலவே இருக்கும்.
74. இயற்கையில் உண்டாகும் நீடிக்கும் வகை நோய்களுடன் அலோபதிச் சிகிச்கையினால் செயற்கையாகத் தோன்றும் நீடிக்கும் வகை நோய்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டியிருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பல மருந்துகளை ஏராளமான அளவில் கொடுப்பது மேல் பூச்சுகளிம்புகளைத் தடவுதல் பேதியுண்டாக்கும் மருந்துகளை உபயோகித்தல், அசுத்த இரத்தக் குழாயைக் கிழித்து இரத்தத்தை வெளியே எடுத்தல், அட்டைப் புழுக்களை உடலின் மீது விட்டு நீரை உறிஞ்சச் செய்தல், செயற்கைப் புண்களைச் சருமத்தின் மேல் உண்டாக்குதல் முதலிய முரட்டுத்தனமான சிகிச்சை முறைகளால் சில சமயங்களில் உயிர்ப்புச் சக்தியின் வலிமை அடியோடு அழிந்து மரணமும் நேரலாம். மரணம் நேராவிட்டாலும் கூட, நோயின் கொடிய தாக்குதல்களிலிருந்து உயிரைக் காப்பற்றுவதற்காக உடலில் மற்றொரு மாறுதலை ஏற்படுத்தும் பொறுப்பு உயிர்ப்புச் சக்தியின் மேல் விழுகிறது. அப்பொறுப்பை நியைவேற்ற அது தன்னுடைய தன்மையை படிப்படியாக மாற்றிக் கொள்கிறது. எவ்விதம் மாற்றிக் கொள்ளும் என்பது நோயின் தன்மையைப் பொறுத்தது.
அதாவது உடலின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள வேதனையையும் உணர்ச்சியையும் அழித்து விடலாம் அல்லது கடுமையாய் அதிகரிக்கச் செய்யலாம். ஓர் உறுப்பைத் தளரச் செய்யலாம் மற்றோர் உறுப்பைச் சுருங்க வைக்கலாம் அல்லது உடலின் ஏதோ ஒரு பகுதியினை முற்றிலும் அழிக்கவும் செய்யலாம். உடலின் உட்புறத்திலோ, அல்லது வெளிப்புறத்திலோ உள்ள ஏதோ ஓர் உறுப்பை அதன் வேலையைச் செய்ய விடாமல் தடுக்கலாம் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அழிவை ஏற்படுத்தும் குணமுள்ள நோய்களின் தாக்குதல்களால் உடல் முழுவதும் ஒரே சமயத்தில் அழிந்து விடாதபடி ஏதோ சில உறுப்புகளை மட்டும் அவ்வப்போது நோய்களுக்கு இரையாக்கி உயிரைக் காப்பாற்றுகிறது உயிப்ப்புச்சக்தி.
75. நீடிக்கும் வகை நோய்களிலே, பயனற்ற அலோபதிச் சிகிச்சையினால் ஏற்படும் நோய்கள் மிகவும் கொடியவை அனேகமாக நீக்க முடியாதவை. ஓர் அளவுக்கு மேல் முற்றி விட்டால் அந்நோய்களை நீக்கக்கூடிய மருந்துகளைக் கண்டு பிடிப்பது முடியாது என்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!