Breaking News
Loading...
Friday, February 12, 2016

ஆர்கனான் - 12

Friday, February 12, 2016




176,177. ஆயினும் எவ்வளவு கவணமாக பரிட்சை செய்தாலும் ஒன்றிரண்டு கடுமையான கொடுமையான நோய்க் குறிகளைத் தவிர வேறு எவ்விதமான குறிகளும் புலப்படாத சில நோய்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதைப்போன்ற நோய்களில் வெற்றிகாண்பதற்கு உள்ள வழி யாதெனில் புலப்படும் ஒரு சில குறிகளையே ஆதாரமாய் கொண்டு அவைகளுக்கு மிகமிக ஏற்றதென்று நமக்கு தோன்றும் மருந்தைக் கொடுப்பதுதான். 

178. காணப்படும் இரண்டொரு நோய்க்குறிகள் தெளிவானதாய் தனிப்பட்டதாய், அபூர்வமாய், வினோதமாய், இருந்தால் ஹோமியோபதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் மருந்து சிற்சில சமயங்களில் நோயை முற்றிலும் அழிக்கக் கூடியதாக இருப்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் தகுதியான மருந்தைத் தேர்ந்தெடுக்கப் போதிய அளவு குறிகள் இல்லாமல் இருந்தால் பல சமயங்களில் நோய் சிறிதளவே குணமடைகிறது. 

179,180,181. இத்தகைய ஒரு நோய்க்குக் கூடுமான அளவுக்கு நல்ல முறையில் மருந்து தேர்ந்தெடுக்ப்பட்டிருக்கிறது. ஆயினும் மேலே குறிப்பிட்டபடி அது முற்றிலும் ஹோமியோபதியை அனுசரித்ததாக இல்லை. இக்காரணத்தால் அதனுடன் ஓரளவுக்கே ஒற்றுமையுள்ள நோய்க்குக் கொடுக்கப்படும்போது நோயுடன் ஒற்றுமையற்ற தன் மற்ற குறிகளைத் தோற்றுவிக்கிறது. இப்புதிய குறிகள் நோயின் குறிகளுடன் கலந்துவிடுகின்றன. இக்கலப்புக்குறிகளை மருந்தின் குறிகளாகக் கருதக்கூடாது. அதற்கு முன் அவ்விதமான நோய்க்குறிகள் நோயாளிக்கு எச்சமயத்திலும் ஏற்படவில்லையே என்பதற்காக அவைகளை நோயுடன் சமபந்தமற்றதாக எண்ணக்கூடாது நோயின் குறிகளாகவே மதிக்கவேண்டும். அவ்வாறு மதித்துச் சிகிச்சையைத் தொடர்ந்து நடத்த வேண்டும். 

182. ஒரு சில நோய்க்குறிகளே இருந்ததினால் முற்றிலும் ஏற்றதான மருந்தைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போய்விட்ட இச்சமயத்திலும் அரைகுறையாய் தேர்ந்தெடுக்கப்படும் மருந்து நோயின் முழுக்குறிகளை வெளியே கொண்டுவந்து முற்றிலும் ஏற்றதான மற்றொரு ஹோமியோபதி மருந்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது. 

183,184. முதலில் கொடுக்கப்பட்ட மருந்தினால் ஓரளவு அனுகூலம் (நோயின் மாற்றம்) தோன்றியபிறகு ஒரு சில தொல்லைகள் குணமாகாமல் இருந்தால் (புதியதாக தோன்றியுள்ள குறிகள் ஆபத்தானவையாக இல்லாதபோது) நோயாளியை மீண்டும் ஒரு முறை சோதனை செய்து அச்சமயத்தில் காணப்படும் மாறுபட்ட குறிகளுக்கு ஏற்றதான வேறு ஹோமியோபதி மருந்தொன்றை தேர்ந்தெடுத்துக்கொடுக்கப்பட வேண்டும். முதல் மருந்து கொடுக்கபட்டபோது காணப்பட்டதைவிட இப்போது குறிகள் தெளிவாகவும் அதே எண்ணிக்கையிலும் இருக்கும் இவ்விதம் கொடுக்கப்படும் மருந்தினால் நன்மை விளைவது நின்றவுடன் அச்சமயத்தில் நோய்க்குறிகளை மறுபடி ஆராய்ந்து அதற்கேற்றபடி மற்றோர் மருந்தைத்தேர்ந்தெடுத்துக் கொடுக்கவேண்டும். நோய் முற்றிலும் நீங்கும் வரை இவ்விதம் தொடர்ந்து செய்து வரவேண்டும். 

185. அரைகுறை நோய்களில் முதன்மை வகிப்பது உடலின் மேற்பகுதியான சருமத்தில் உண்டாகும் கோளாறுகளேயாகும். சரும நோய் உடம்பின் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டுமே நோய் இருப்பதாகவும் மற்ற பகுதிகள் ஆரோக்கியமாய் இருப்பதாகவும் இதுவரை வைத்தியர்கள் கருதி வந்துள்ளனர் இக்கருத்து மிகத் தவறானது மிகமிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கிய சிகிச்சைக்கு இந்த சரும நோயே வழிகாட்டியுள்ளது. 

186. அடிதடிபட்டோ, கீழே விழுந்தோ கத்தி முதலிய ஆயுதங்களாலோ உடலின் வெளிப்புறத்தே நேரும் சேதங்களால் தோன்றும் சருமக்கோளாறுகளை வெளிப்புற நோய் என்று சொல்லலாம் ஆயினும் வெளிக்காரணணு;களால் சருமத்தில் ஏற்படும் சேதம் அதிகமாய் இருந்தால் உடம்பு முழுவதும் அக்கோளாரில் பங்கு கொள்கிறது. சுரம் முதலிய அறிகுறிகள் தோன்றுகின்றன. இச்சமயத்தில் அக்கோளாறுக்கு அறுவை சிகிச்சை தேவை என்றாலும் அது ஓரளவிற்குத்தான் அதாவது உயிர்ப்புச்சக்தியின் மூலம் ஏற்படவேண்டிய நன்மைக்குக் குறுக்காக நிற்கும் தன்மைகளை நீக்குவதற்கே அறுவை சிகிச்சை அனுசரிக்கப்படவேண்டும்.

நழுவிப்போன எலும்பின் மூட்டுகளைப் பொருத்திவைத்தல், பிளந்துபோன சருமத்தின் இருஉதடுகளும் ஒட்டிக்கொள்ளும்படித் துணியினால் கட்டி விடுதல், உடலின் உட்புறத்தே ஊடுருவிச் சென்று விட்ட வேற்றுப்பொருள்களை வெளியே எடுத்துவிடுதல், உடலின் சந்து பொந்துகளில் நீர்,பொருள் தேங்கித் துன்பத்தை உண்டாக்கும்போது அங்கே பொத்துவிட்டு நீரைவடியச் செய்தல், முறிந்துபோன எலும்பைச் சேர்த்துப் பொருத்தி வைத்துக்கட்டுதல் முதலியவைகளை உதாரணமாய் கூறலாம். விபத்துக்களால் உடல் முழுவதும் தாக்கப்படாமல் இருப்பது மிக அபூர்வம்தான் கடுமையான அடிதடிகளால் கடுமையான சுரம் தோன்றும்போது அச்சுரத்தையும் மற்றுமுள்ள எல்லா உடல் வேதனைகளையும் உள்ளுக்கு மருந்து கொடுத்தே நீக்கவேண்டும். நெருப்புச் சுடுதல் கொதிக்கும் தண்ணீர் முதலிவை பட்டு வெந்துபோகுதல், ஆகிய காரணங்களால் உண்டாகும் வலியை ஹோமியோபதி முறைப்படியே அடக்கவேண்டும். இது போன்ற சமயங்களில் ஹோமியோபதி வைத்தியரும் ஹோமியோபதி மருந்துகளும் நிச்சயமாகத் தேவை. 

187. எவ்விதமான விபத்தும் காரணமாய் இல்லாமல் அல்லது மிக அல்பமான ஏதோ ஒரு காரணத்தினால் உடலின் வெளிப்புறத்தே தோன்றும் சருமக் கோளாறுகளுக்கு ஆதாரம் முற்றிலும் வேறாக இருக்கிறது. உடலின் உட்புறத்தே உள்ள ஏதோ ஒரு கோளாறே அவைகளுக்கு ஆதாரமாய் இருக்கிறது. ஆகவே அச்சரும நோய்களை வெளிப்புற நோய்கள் என்று மதிப்பதும் மேற்பூச்சு மருந்துகளே போதுமென்று முடிவு செய்து அவ்வாறே சிகிச்சை செய்வதும் ஆயிரமாயிரமாண்டுகளாக அலோபதி முறையில் உள்ள மிகுந்த கேட்டை விளைவிக்கும் சிகிச்சை முறைகளில் ஒன்று. 

188. இத்தகைய சரும நோய்கள் உடலின் வெளிப்புறத்தின் மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டன. ஆகவே அவை வெளிப்புறக் கோளாறுகள் என்று அழைக்கப்பட்டன உடலின் மேல் சரும நோய் உள்ள ஒரு இடத்தைத் தவிர மற்ற எந்த இடத்திலும் நோய் இல்லையென்றும் சரும நோயுள்ள இடத்துக்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையென்றும் (அலோபதியர்கள் ) நினைப்பதாக தெரிகிறது. 

189. உடலின் உட்புறத்தே உள்ள ஏதோ ஒரு காரணம், உடலின் ஒத்துழைப்பு ஆகியவை இல்லாமல் எவ்விதமான சருமக் கோளாறும் தோன்றவோ நீடித்திருக்கவோ வளரவோ முடியாது ஆகவே உடலும் நோயுற்றே இருக்கவேண்டும் என்பது சிறிதளவு சிந்தித்தாலே விளங்கும். உயிர்ப்புச்சக்தி, உடலின் மற்ற பகுதிகள் ஆகியவைகளின் ஒத்துழைப்பும் அனுமதியும் இல்லாமல் சருமக்கோளாறு தோன்றியிருக்க முடியாது. உடல் உறுப்புகளின் பல்வேறு உணர்ச்சிகளும் வேலைகளும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. ஆதலால் முழு உடலிலும் கோளாறு இருப்பதாலேயே சருமக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. உடலின் உட்புறத்தை எவ்வித நோயும் தோன்ற முடியாது. 

190. சாதாரணமான விபத்துக்களால் அல்லது ஒருவிதக் காரணமும் இல்லாமல்,உடலின் வெளிப்புறத்தே தோன்றும் ஒரு நோய்க்கு உண்மையான சிகிச்சை செய்வது எப்படி? உள்ளுக்கு மருந்துகளை கொடுத்து நோய் முழுவதையும் அழிக்கவேண்டும் அப்போதுதான் சிகிச்சை, நிச்சியமான உண்மையான பயனைத்தரும். 

191. மேலுள்ள விமூயம் முற்றிலும் உண்மை என்பது நமது அனுபவத்தில் சந்தேகத்துக்கு இடம் இல்லாத முறையில் நிருபிக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த ஒவ்வொரு மருந்தும் அதை உட்கொண்ட உடனேயே நோயாளியின் ஆரோக்கிய நிலையில் முக்கியமான மாறுதல்களை எல்லா சமயங்களிலும் ஏற்படுத்துகிறது. முக்கியமாக,வெளிப்புறத்தே நோய் உள்ள பகுதியிலும் மாறுதலை உண்டாக்குகிறது உடலின் வெளிப்புறத்தில் முக்கியமற்ற இடத்திலே நோய் இருந்தாலும்கூட இம்மாற்றம் தவறாமல் ஏற்படுகிறது. அம்மாற்றத்தின் விளைவாக வெளிப்புறத்தே இருந்த நோய் மறைந்து விட்டால் உடல் முழுவதுமே ஆரோக்கிய நிலைமையைத் திரும்பப் பெறுகிறது. மேல் பூச்சு மருந்து எதுவும் தேவையில்லை.

ஆனால் கொடுக்கப்படும் மருந்து நோயின் மொத்தக்குறிகளை ஆதாரமாய் வைத்து ஹோமியோபதி முறைக்கிணங்க முற்றிலும் தகுதியுடையதாக இருக்கவேண்டும். 

192. நோயை ஆராய்ச்சி செய்யும் காலத்தில் வெளிப்புறத்தே தென்படும் நோயின் உண்மையான தன்மையை கவனிப்பதுடன் நோயாளியின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள எல்லா மாறுதல்களையும் வேதனைகளையும், குறிகளையும்,மருந்து கொடுப்பதற்கு முன்னதாக காணப்பட்ட குறிகளையும் சேர்த்து கவனித்தால் ஏற்றமருந்தை தேர்ந்தெடுக்கும் வேலை வெற்றிகரமாய் முடிகிறது. இவ்வழியினால் நமக்குக்கிடைத்த நோயின் மொத்தக் குறிகளுடன் பெரும்பாலும் ஒற்றுமையுள்ள செயற்கை நோய் ஒன்றைத் தோற்றுவித்த மருந்து எது என்று ஹோமியோபதி முறைக்கிணங்கத் தேர்ந்தெடுத்துக்கொடுப்பது சாத்தியமாகும். 

193. மேலுள்ளபடி தேர்ந்தெடுத்துக்கொடுக்கப்பட்ட மருந்தை உட்கொண்டவுடன் (நோய் சமீபத்தில் தோன்றியதாயின் முதல் வேளை மருந்திலேயே) சருமக் கோளாறும் உடலில் பொதுவாய்க்காணப்பட்ட நோய்க் குறிகளும் ஒரே சமயத்தில் குணமடைகின்றன. சரும நோய் உடலின் புறத்தே இருந்த ஒரு நோயினால்தான் தோன்றியது, என்பதும் அதை தனிப்பட்ட ஒரு நோயாக கருதமுடியாது என்பதும் நோயின் பல குறிகளில் அது மிகத்தெளிவாய் தெரியும் ஒரு குறியே என்பதும் இப்போது புலனாகும். 

194. சரும நோய் சமீபத்தில் தோன்றியதாய் இருந்தாலும் சரி அல்லது பல காலமாய் நீடித்திருந்து வருவதானாலும் சரி, நோய் உள்ள இடத்தின் மேலே எதையும் தடவவோ, தேய்க்கவோ வேண்டியதில்லை அதனால் பயனும் இல்லை நோய்க்கு ஏற்றதாய், உள்ளுக்குச் சாப்பிட்டால் அதை நீக்க வல்லமை உள்ளதாய் இருக்கும் மருந்தைக்கூட மேலே தடவ வேண்டியதில்லை. மருந்தை உள்ளுக்குச் சாப்பிடும்போது கொஹ்சம் மேலேயும் தடவினால் என்ன என்று கேட்கலாம். ஆனால் அவ்விதம் தடவுவதில் எவ்வித நலனும் இல்லை ஏனென்றால் பலமான வெளிப்புற விபத்துகள் எதுவும் காரணமாய் இல்லாமல், மறைமுகமான முறையில் அல்லது உடலின் உட்புற நோயினால் தோன்றும் திடீர்வகை சரும நோய்கள்

(உதாரணம் அக்கி, ஒரு சில உறுப்புகளில் மட்டும் வேக்காடு ஆகியவை) நோயாளியின் உடலிலே உள்ளும், புறமும் தென்படும் குறிகளுக்குத் தக்கபடி ஹோமியோபதி கோட்பாடுகளுக்கு இணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை உள்ளுக்குக் கொடுத்தால் மிக நிச்சயமாய் குணமடைந்துவிடுகின்றன. பெரும்பாலான சமயங்களில் இம்மருந்துகளைத் தவிர வேறு துணை சிகிச்சை எதுவும் தேவைபடுவதில்லை. ஆனால் சிற்சில சமயங்களில் அந்நோய்கள் அம்மருந்துகளால் முற்றிலும் நீக்கப்படாமல் சரும நோய் அப்படியே இருந்துவருமானால் சோரா எனப்படும். விஷ நோய்க்கூறுதான் அந்நிலைமைக்கு காரணமாய் இருக்கும். இதுவரை உடலின் உட்புறத்தில் உறங்கிக்கிடந்த இவ்விஷ நோய்க்கூறு (சோரா) இப்பொழுது விழித்தெழுந்து தன்னை சரி செய்து கொள்ளவே இவ்வாறு வெளிக்காட்டியுள்ளது என்பதை உணர வேண்டும். 

195. இதுபோல் நிகழ்வது அபூர்வம் என்று சொல்ல முடியாது. அவ்வாறு நிகழ்ந்தால் நோயை முற்றிலும் குணம் செய்ய அதன் கடுமை தணிந்தவுடன் (நீடித்திருக்கும் நோய்களை சிகிச்சை செய்யும் விஷயமாக நான் எழுதியுள்ள புத்தகத்தில் உள்ளபடி) நோயாளியிடம் அச்சமயத்திலும் அதற்கு முன்னதாகவும் காணப்பட்ட நோய்க் குறிகளை ஆதாரமாய் வைத்து ஏற்றதான சோரா விஷத்தை அடக்கக் கூடிய மருந்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்கவேண்டும். நாட்பட்ட சரும நோய்களில் அவை கெட்ட நடத்தையினால் ஏற்படாதவைகளாய் இருந்தால் சோரா விஷ நோய்க்கூறை அடக்கும் மருந்தொன்றே போதும். 

196. ஹோமியோபதி கோட்பாடுகளுக்கிணங்க நோயின் மொத்த குறிகளுக்கு ஏற்றதான மருந்தை உள்ளுக்குச் சாப்பிடுவதுடன் நோயுள்ள இடத்தின் மேலே தடவியும் வந்தால் நோய் அதிக விரைவில் நீங்கி குணம் ஏற்படும் என்று தோன்றுவது இயல்பு. 

197. ஆனால் சோரா விஷ நோய்க்கூறினால் உண்டாக்கப்படும் சரும நோய்களில் மட்டுமின்றி, சிபிலிஸ், சைகோஸிஸ், ஆகிய மற்ற இரு விஷநோய்க்கூறகளால் தோன்றும் சரும நோய்களிலும் இவ்விதம் சிகிச்சையை (மருந்தை நோயுள்ள இடத்தின் மேலே தடவுவது) கையாளக்கூடாது. ஏனென்றால் உடலின் வெளிப்புறக்கோளாறு ஒன்றே (சரும நோய்) ஒரு நோயின் முக்கியமான குறியாக இருக்க, உட்கொள்ளப்படும் மருந்தை அதே சமயத்தில் மேலே தடவவும் உபயோகித்தால் மிகப்பெரியதோர் இடையூறு தோன்றுகிறது. அதாவது அம்மருந்தை சருமக் கோளாறுள்ள இடத்தின் மேலே தடவுவதால் நோயின் முக்கியமான குறி (சருமக் கோளாறு) உள்ளிருக்கும் நோய் குணமாவதற்கு முன்பாகவே குணமாகிவிடுகிறது. இதனால் நோய் முழுவதும் நீங்கிவிட்டது என்று நினைத்து ஏமாந்து போவதற்கு இடமேற்படுகிறது. எப்படி இருந்தாலும் சருமக்கோளாறு மிக முன்னதாக மறைந்துவிடும்போது உட்கொள்ளப்படும் மருந்தினால் உள்ளிருக்கும், நோயும் நீங்கிவிட்டதா இல்லையா என முடிவு செய்வது கஷ்டமாகிவிடும். சில சமயங்களில் முடிவு செய்வது முடியாமல் போய்விடும். 

198. இக் காரணத்தினாலேயே விஷ நோய்க்கூறுகளால் தோன்றும் நீடித்த வகை நோய்களின் சருமக் கோளாறுகளில் உள்ளுக்குச் சாப்பிட்டால் நோயை முற்றிலும் நீக்க வல்லமையுள்ள மருந்தை (உள்ளுக்குச் சாப்பிடாமல்) மேற்புறத்தில் மட்டும் தடவுவது கூடாது. ஏனென்றால் அந்நீடிக்கும் வகை நோயின் வெளிப்புறக்கோளாறு மட்டுமே மறைந்து அரைகுறையான குணமே ஏற்படுகிறது. நோயற்ற நிலைமை முற்றிலும் தோன்றுவதற்கு அவசியமான உட்புறச்சிச்சை விமூயம் குளறுபடியாகிவிடுகிறது. முக்கியமான குறி (சருமக்கோளாறு ) மறைந்து போய் விட்டது அதிக தெளிவு இல்லாத மற்ற குறிகளே இருக்கின்றன. நோயின் உருவைத்தெளிவாகவும் உண்மையாகவும் வெளியிட அவை மட்டும் போதாது. 

199. நோய்க்கு ஏற்ற ஹோமியோபதி மருந்து கண்டறிவதற்கு முன்னர் கார மருந்துகளாலோ, கந்தகத்தினாலோ சருமக்கோளாறு கிழித்து அழிக்கப்பட்டுவிட்டால் அந்நோயைக் குணம் செய்வது மிக மிகக் கஷ்டமாகிவிடுகிறது. ( உதாரணம் அதிகமான பேதி மருந்துகளை சாப்பிட்டு, விஷ நச்சு மருந்துகளை சாப்பிட்டும் சரும நோய்களுக்கு பலவகையான கந்தகத்தில் செய்யப்பட்ட களிம்புகளை பூசி மறைக்கப்பட்டிருந்தாலோ, அப்பன்டிசிடிஸ், சைனஸ், டான்சில், கருப்பை கட்டி, மூலம் போன்ற முக்கிய உறுப்புகளை அறுத்து எடுத்தவர்களுக்கு இது போல குறிக்கு தக்க மருந்து கொடுத்தாலும் கூட குணமாவது கஷடம். ஏன் என்றால் சரியான குறிகள் காட்டாது. குறிகள் தப்பு தப்பாக காட்டும். நாம் குறிக்கு தானே மருந்து எடுப்போம். குறியும் தப்பு, தப்பாக போய் மருந்தும் தப்பாக தானே போகும் என்று நூலாசிரியர் கூறுகிறார்.) நோயின் உண்மையான தன்மையை நமக்கு அறிவித்து ஏற்ற மருந்தை தெளிவு படுத்த உதவும் நோயின் வெளிப்புறக்குறி (சருமக்கோளாறு) முற்றிலும் அழிந்து விடுவதாலும் மற்ற குறிகள் அவ்வளவு தெளிவாய் இல்லாததாலுமே இக்கஷடம் ஏற்படுகிறது. 

200. சருமக் கோளாறு அழியாமல் இருந்தால் நோயை முற்றிலும் நீக்கத்தக்க ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுத்துச் சிகிச்சை செய்யும் விஷயத்தில் நமக்கு துணைபுரியும் ஏற்ற மருந்தை தேர்ந்தெடுத்து அதை உள்ளுக்குச் சாப்பிடக்கொடுத்துவரும் காலத்தில் சருமக்கோளாறு மறையாமல் இருக்கும் வரை நோய் முழுவதும் நீங்கவில்லை என்றும் மறைந்து விட்டால் நோய் முழுதும் குணமாகிவிட்டது என்றும் நாம் நிச்சயமாய் அறிந்து கொள்ளலாம்.

1 comments:

  1. தங்களது பதிவுகள் வியப்பாக இரு்க்கின்றது நிறைய விடயங்கள்...
    தமிழ் மணம் 1

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer