Breaking News
Loading...
Tuesday, February 9, 2016

ஆர்கனான் - 8

Tuesday, February 09, 2016

89. நோயாளிக்கு நோயினால் ஏற்படும் உணர்ச்சிகளின் விவரங்களை அறிய அவர் கூறவதையே நாம் நம்பவேண்டி இருக்கிறது. ஆதலால் சுயமாகவும் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்ததின் மூலமும் தேவையான விவரங்களைத் தெரிவித்து நோயின் உருவை ஏறக்குறைய நல்ல முறையில் வெளியிட்ட பிறகு மேலும் சில விவரங்களை வேண்டுமென்று வைத்தியர் நினைத்தால் அவர் விசேஷமான கேள்விகளைத் தாராளமாய்க்கேட்கலாம்.

உதாரணமாக, எவ்வளவு தடவைகள் மலம்கழிகிறது மலத்தின் தன்மை என்ன? மலம் வெண்மை நிறமாய் இருந்திருந்தால் அது வெறும் சளிப்பொருளாய் இருந்ததா? அல்லது மலமாகவே இருந்ததா? மலம் கழிந்த போது வலி இருந்ததா? அல்லது இல்லையா? வலிகளின் தன்மை என்ன? எந்த இடத்தில் ஏற்பட்டன? நோயாளி வாந்தி செய்த பொருள் எது? வாயிலுள்ள கெட்ட சுவை? அழுகியது போல் இருக்கிறதா? புளிப்பாய் இருக்கிறதா? கசப்பாய் இருக்கிறதா? அல்லது வேறு எப்படி இருக்கிறது? கெட்ட சுவை எப்போது ஏற்படுகிறது? சாப்பிட்ட பிறகா? சாப்பிடும்போதா? சாப்பிடுவதற்கு முன்பா? பகலில் எந்த நேரத்தில் அது அதிகமாய் இருக்கிறது? வாயிலிருந்து மேல்நோக்கி ஏப்பம், நெஞ்சுகரிப்பு முதலியவை வந்தால் அவைகளின் சுவை என்ன? மூத்திரம் கழிக்கும் சமயத்திலே கலங்கி இருக்கிறதா அல்லது வெளியாகிச் சிறிது நேரம் சென்றபிறகு கலங்கலாய் மாறுகிறதா? வெளியேறும் சமயத்தில் அதன் நிறம் என்ன? மூத்திரத்தைப் பிடித்து வைத்திருந்தால் அடியில் தேங்கும் வண்டலின் நிறமென்ன? தூங்கும்போது நோயாளி எவ்விதம் நடந்து கொள்கிறார்? நோயின் துன்பத்தை தன்னால் பொறுக்க முடியவில்லையே என்ற பாவனையில் அழுகிறாரா பேசுகிறாரா? அல்லது வீறிட்டுக் கதறுகிறாரா, தூங்கும்போது திடுக்கிட்டு எழுந்து கொள்கிறாரா? அவர் குறட்டை விட்டால், காற்றை உள்ளிழுக்கும் நேரத்திலாவது வெளியே விடும் நேரத்திலாவது? மல்லாந்துதான் படுத்துக்கொள்கிறாரா? அல்லது வேறு எவ்விதம் படுத்துக்கொள்கிறார்? தன் உடல் முழுவதையும் நன்றாக மூடிப் போத்திக்கொள்கிறாரா? அல்லது மேலே துணிபடுவதை அவரால் பொறுக்கமுடியவில்லையா? தூக்கத்திலிருந்து சுலபமாக விழித்துக் கொள்கிறாரா அல்லது மிக ஆழ்ந்த தூக்கம் உண்டாகிறதா?ஓவ்வொரு நோய்க் குறியும் எவ்வளவு நேரத்துக்கொரு முறை தோன்றுகிறது.

ஒவ்வொரு குறியும் மறுபடி தோன்றுவதற்குக் காரணமாய் அமைவது எது? உட்கார்ந்து கொண்டிருப்பது, படுத்துக்கொண்டிருப்பது, நின்று கொண்டிருப்பது, நடமாடிக்கொண்டிருப்பது முதலிய செயல்களில் எதைச் செய்து கொண்டிருக்கும்போது அது தோன்றுகிறது. அது வழக்கமாய் எச்சமயத்தில் தோன்றுகிறது பட்டினி கிடக்கும் போதா? காலையிலா? மாலையிலா? உணவு உட்கொண்ட பிறகா? உடம்பில் குளிர் எப்பொழுது வர ஆரம்பித்தது லேசான சிலுசிலுவென்ற உணர்ச்சி மாத்திரம் இருந்ததா? அல்லது நல்ல குளிர் இருந்ததா? அப்படியானால் எந்தெந்த இடங்களில் குளிர் இருந்தது? குளிரும் உணர்ச்சி உள்ளூர இருந்தபோதிலும் தொட்டுப் பார்க்கும் போது உடம்பு சூடாய் இருந்ததா? உடலில் உதரல் இல்லாமல் வெறும் குளிர் உணர்ச்சி மட்டும் இருந்ததா? முகத்தில் சிவப்பு இல்லாமல் சூடான உணர்ச்சி மட்டும் இருந்ததா? தொடும்போது எந்தெந்த பகுதிகள் சூடாக இருந்தது தொடும் போது உடலில் சூடு எதுவும் தெரியாமல் உள்ளூரச் சுடும் உணர்ச்சி இருந்ததா? குளிர் எவ்வளவு நேரம் இருந்தது? சூடு எவ்வளவு நேரம் இருந்தது? தாகம் எப்பொழுது தோன்றியது-குளிர் இருந்த சமயத்திலா? அல்லது சூடு இருந்த சமயத்திலா? அல்லது அவைகளுக்கு முன்னதாகவா அல்லது பிறகா? தாகம் எவ்வளவு கடுமையாய் இருந்தது.

குடிப்பதற்கு எவ்வித பானம் வேண்டுமென்று நோயாளி கேட்டார்? வியர்வை எப்பொழுது ஏற்பட்டது-சூடு மறைந்தவுடனா அல்லது ஆரம்பத்திலா? அல்லது சூடு மறைந்து எவ்வளவு நேரம் கழித்து ஏற்பட்டது? தூங்கும் போதா அல்லது எவ்வளவு நேரம் கழித்து ஏற்பட்டதுடூ தூங்கும் போதா அல்லது விழித்துக் கொண்டிருக்கும் போதா? வியர்வையின் அளவு என்ன? வியர்வை சூடாய் இருந்ததா? அல்லது ஜில்லிப்பாய் இருந்ததா? எந்தப் பாகங்களில் வியர்வை ஏற்பட்டது? அதன் வாசனை என்ன? குளிரின் போது அல்லது குளிர் வருவதற்கு முன் நோயாளிக்கு ஏற்பட்ட துன்பங்கள் என்னென்ன சூடு ஏற்பட்ட போது இருந்த துன்பங்கள் என்னென்ன? அதற்கு பிறகு என்ன ஏற்பட்டது? வியர்வை நிலையிலும் அதற்குப் பிறகும் என்ன ஏற்பட்டது? முதலிய விவரங்களைக் கேட்டறிய வேண்டும்.

90. இவ்விதம் விவரங்களை எழுதி முடித்தவுடனே நோயாளியிடம் தானாகவே கவனித்து அறிந்தவைகளையும் * வைத்தியர் குறித்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கவனித்து அறியப்பட்ட விவரங்களில் எவை எவை நோய் வருவதற்கு முன்னதாக இருந்தன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

* உதாரணமாக நோயாளியைப் பார்க்கச் சென்றபோது அவர் எவ்விதம் நடந்துகொண்டார். கலகலவென்று? பேசாமல் ஏக்கம் பிடித்திருத்தல்?சண்டை பிடிக்கும் குணம்? மிக அவசரமாகப் பேசுதல்? வேலை செய்தல்? கண்ணீர் விட்டு அழுதல் ? கவலைப்படுதல்? நம்பிக்கை இழத்தல்? வருத்தமாய் இருத்தல்? நம்பிக்கையுடன் இருத்தல் ? அமைதியாய் இருத்தல் ஆகிய பல தன்மைகளில் நோயாளியிடம் காணப்பட்டது எது? மயக்கமாய் இருந்தாரா அல்லது சொல்வதைப் புரிந்துகொள்ளமுடியாத அளவு மந்தமாய் இருந்தாரா? பேசும் போது அவர் குரல் எப்படி இருந்தது? கட்டை குரலாய் இருந்ததா அல்லது கம்மிய குரலாய் இருந்ததா அல்லது புரிந்து கொள்ள முடியாத படி இருந்ததா? அவருடைய முகம்? கண்கள் சருமம் எப்படி இருந்தது? நிறம் எப்படி இருந்தது? அவருடைய முகத்தோற்றம்? கண்கள் ஆகியவை எந்த அளவுக்குக் கலையாக இருந்தன. அவருடைய நாக்கு? சுவாசம்? வாயின் நாற்றம்?செவிப்புலன் ஆகியவைகளின் நிலைமை எப்படி இருந்தது? கண்ணின் கருமணிகள் விரிந்திருந்தனவா? சுருங்கி இருந்தனவா? இருட்டிலும் வெளிச்சத்திலும் பார்வையின் மாற்றம் எவ்வளவு வேகமாகவும் எந்த அளவிலும் ஏற்பட்டது? நாடியின் தன்மை என்ன? அடி வயிறு எப்படி இருந்தது? தொட்டுப்பார்க்கும்போது அவர் உடலின் ஒவ்வொருபகுதியும் எப்படி எப்படி இருந்தது. அதாவது கசகசவென்று வியர்வையுடன் இருந்ததாடூ அல்லது சூடாய் இருந்ததா? எப்படிப் படுத்திருந்தார். 

அதாவது தலையைப் பின் பக்கம் வளைத்துக்கொண்டா? பாதி அல்லது முழுவதும் வாயைத் திறந்துகொண்டா? கைகளைத் தலைமேல் வைத்துக்கொண்டா? மல்லாந்து கொண்டா? அல்லது வேறு எப்படி? படுக்கையை விட்டுத் தானாகவே எழுந்திருக்க என்ன முயற்சி செய்தார். இன்னும் இவை போன்ற குறிப்பிடத் தகுந்த பல விவரங்களையும் வைத்தியர் கவனித்தறிய வேண்டும்.

91. இதற்கு முன் மருந்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தில், நோயாளியிடம் காணப்பட்ட குறிகள் நோயின் உண்மையான உருவத்தை காட்டுவதில்லை. மருந்து சாப்பிடுவதற்கு முன்னதாகவும் மருந்து சாப்பிடுவதை நிறுத்திச் சில நாட்கள் கழிந்த பிறகும் காணப்படும் நோய்க் குறிகளும் கோளாறுகளுமே நோயின் உண்மையான உருவத்தைத் தெரிந்து கொள்ள உதவி செய்கின்றன. ஆகவே அவைகளை வைத்தியர்கள் விசேஷமாக அறிந்துகொள்ளவேண்டும். நோய் நீடிக்கும் வகையைச் சேர்ந்ததாய் இருந்து அது வைத்தியரிடம் வரும் வரை நோயாளி ஏதோ ஒரு மருந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்றால், அந்த மருந்தை சாப்பிடுவதை நிறுத்திச் சில நாட்களான பிறகு வரும்படிச்சொல்லவேண்டும். அல்லது (நோயாளியைத் திருப்தி செய்வதற்காக) மருந்து சேராத ஒரு பொருளை (மாத்திரைகள் அல்லது தண்ணீர்) உட்கொள்ளும் படிக் கொடுத்து விட்டுச் சில நாட்கள் சென்றவுடன் நோய்க் குறிகளை விரிவாய்ச்சோதித்தறியவேண்டும் அப்பொழுதுதான் நோயின் இயற்கை வடிவைத் தெளிவாய் அறியமுடியும். 

92. ஆனால் நோய் மிக வேகமாக வளர்ச்சியடையும் குணமுள்ளதாய் இருக்கிறது. அதன் ஆபத்தான குறிகள் சிறிதளவும் தாமதத்துக்கும் இடம் தரவில்லை. மருந்து சாப்பிடுவதற்கு முன் இருந்த நோய்க்குறிகளைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவ்விதமான ஒரு நிலைமையில் நோயாளியிடம் தென்படும் நோய்க்குறிகளை (அவை மருந்துகளால் மாற்றப்பட்டிருந்தாலும்) உள்ளதை உள்ளபடி கவனிப்பதுடன் வைத்தியர் திருப்தியடைய வேண்டும். அப்பொழுதுதான் மருந்துகளாலும் முதலில் வந்த நோயினாலும் உண்டாக்கப்பட்டுள்ள கூட்டு நோயின் முழு உருவையும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம். உண்மையான நோயை விடத் தகுதியற்ற மருந்துகளால் விளையும் கேடுகள் ஆபத்தானவை. ஆகவே விரைவில் தகுந்த ஹோமியோபதி மருந்தைக் கொடுத்தும் சிகிச்சை செய்ய வேண்டும். விஷத்தன்மையுள்ள மருந்துகளால் நோயாளியின் உயிர் பறிக்கப்படுவதை முதலில் தடுக்கவேண்டும். 

93. நோய் தோன்றுவதற்குக் காரணமான விஷத்தை நோயாளியை அல்லது அவருடைய நண்பர்களைத் தனியே அழைத்துக் கேட்டால் அவர்கள் தாமாகவே சொல்லிவிடுவார்கள். அல்லது சாமார்த்தியமாகக் குறுக்குக் கேள்விகளைக் கேட்டும் அறியலாம்.

* உதாரணமாக விஷம் அருந்துதல் அல்லது தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் இயற்கைக்கு மாறான முறைகளில் சிற்றின்பம் பெறுதல் அளவு மீறி சிற்றின்பத்தில் ஈடுபடுதல். அளவுக்கு அதிகமான சாராயம், காப்பிப்பானம்,உணவு வகைகள் ஆகியவைகளை உட்கொள்ளுதல், துன்மார்க்க நோய்களைச் சம்பாதித்துக் கொண்டிருத்தல், நிறை வேறாத காதல், பொறாமை, குடும்பத்தொல்லைகள், கவலை, குடும்பத்தில் நேர்ந்த நஷ்டத்தினால், வருத்தம், கௌரவமாக நடத்தப்படாமை, மதிப்பை இழத்தல், வஞ்சம் தீர்க்க முடியாமல் போகுதல், பன விஷயத்தில் சங்கடமான நிலைமை மூட நம்பிக்கை காரணமாய் ஏற்படும் பயம், பசி, பிறப்பு உறுப்புகள் சரிவர அமைந்திராமை, ஏதோ ஓர் உறுப்பு பிதுங்கி இருத்தல், இடம் நழுவி இருத்தல் முதலிய பல அந்தரங்கமான விவரங்களை நோயாளியோ அல்லது அவருடைய நண்பர்களோ தாமாகச் சொல்லத் தயங்கும்போது வைத்தியர் சாமார்த்தியமாய்க் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.

94. நீடிக்கும் வகையைச் சேர்ந்த நோய்களைப்பற்றி ஆராயும்போது, நோயாளி செய்து வரும் தொழில், வாழும் விதம்,உண்ணும் உணவு குடும்பச் சூழ்நிலை முதலிய பல விஷயங்களையும் நன்றாகச் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் அவ்விஷயங்களில் எவை எவை நோயை உண்டாக்குகின்றன அல்லது நீடிக்கச் செய்கின்றன என்பதை நிர்ணயித்து அவைகளை விலக்கினால் விரைவில் குணம் காண வழி செய்யலாம் .

*பெண்களுக்கு ஏற்படும் நீடிக்கும் வகை நோய்களில் கருவுற்றிருத்தல், மலட்டுத்தன்மை, சிற்றின்ப ஆசை, பிள்ளைபேறு, கருச்சிதைவு, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல், மாதவிடாய் போக்கின் தன்மை, ஆகிய விவரங்களை முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் கடைசியாகக் கூறப்பட்ட விவரத்தைப் பற்றி இன்னும் விரிவாய்த் தெரிந்துகொள்ளத் தவறக் கூடாது. போக்கு உரிய காலத்துக்கு முன்னதாக அடிக்கடி ஏற்படுகிறதா? அல்லது தாமதமாய் ஏற்படுகிறதா? அதன் பொதுவான அளவு என்ன? எவ்வளவு கறுப்பு நிறமாய் இருக்கிறது. போக்கு தோன்றுவதற்கு முன்போ அல்லது நின்ற பிறகோ வெள்ளை நீர்க்கழிவு வெளியாகிறதா? போக்கு உள்ள போதோ, முன்னோ,பிறகோ ஏற்படக்கூடிய உடல் மனக் கோளாறுகள், உணர்ச்சிகள், வலி ஆகியவைகளின் விவரம் வெள்ளை நீர்க்கழிவு இருந்தால் அதன் தன்மை அது வெளியாகும் போது காணப்படும் உணர்ச்சிகள், கழிவு நீரின் அளவு, எவ்வித நிலைமைகளில், சமயங்களில் அது தோன்றுகிறது ஆகியவைகளையும் கேட்டறிய வேண்டும்.

95. நீடிக்கும் வகை நோய்களில் மேலே குறிப்பிட்ட நோய்க் குறிகளையும் மற்ற விவரங்கள் அனைத்தையும் மிகுந்த கவனமாய்க் கேட்டறியவேண்டும். அத்துடன் மிக அற்பமானவை என்று கருதக் கூடிய சில்லறைக் குறிகளைக்கூட விட்டுவிடக்கூடாது. இதற்குக் காரணம் இரு வகைப்படும்
முதலாவது:
நீடிக்கும் வகை நோய்களில் சில்லறைக் குறிகள் மிகுந்த விசேஷத்தன்மை பெற்றவைகைளாய் இருக்கின்றன. திடீர் வகை நோய்களில் அவ்விதம் இல்லை. ஆதலால் நீடிக்கும் வகை நோய்களைக் குணம் செய்ய வேண்டுமானால் விசேஷத் தன்மை பொருந்திய சில்லரைக் குறிகளைக் கவனிக்காமல் இருக்க முடியாது.
இரண்டாவது:
நோயினால் ஏற்படும் வேதனைகளை நீண்ட காலமாய் அனுபவித்துப்பழக்கப்பட்டு விட்டதால் சில்லறைக்குறிகளை நோயாளிகள் அவ்வளவாக கூறாமல் அலட்சியமும் செய்யலாம். தம் உடம்புடனேயே பிறந்தது என்றும் நினைக்கலாம். பதினைந்து அல்லது இருபது ஆண்டுகாலமாய் நோயின் வேதனைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட அவர்கள் அச் சில்லறைக் குறிகள் நோயினால் ஏற்பட்டவை, ஆரோக்கிய நிலைமைக்கு மாறுபட்டவை என்று நாம் கூறினால் எளிதில் நம்பமாட்டார்கள். ஆனால், சில்லறைக் குறிகள் விசேஷத்தன்மை வாய்ந்தவை ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுப்பதில் பல சமயங்களில் உதவியாய் இருப்பவை என்பதை வைத்தியர் மறக்கக் கூடாது.

96. நோயாளிகளின் குண விசேஷங்கள் பலவிதமாய் மாறுபட்டு இருக்கின்றன. உண்மையான காரணம் எதுவும் இல்லாமல் தமக்கு ஏதோ ஒரு நோய் வந்து விட்டதாக எண்ணி வீணாக கவலைப் படுகிறவர்கள், நோயின் வேதனைகளைத் தாங்க முடியாத உடல் அமைப்பு உள்ளவர்கள் ஆகியோர் வேதனையிலிருந்து விரைவில் விடுபட வேண்டும் என்ற துடிப்பினால் வேகமாக தம் நோய்க் குறிகளை மிகைப்படுத்திக் கூறுவார்கள்.

97. மற்றும் சிலர் சோம்பல் போலி வெட்கம் அடக்கமான சுபாவம் அல்லது மனோ பலவீனம் ஆகியவைகளால் தம் நோய்க்குறிகளில் பலவற்றைச் சொல்லாமல் இருந்துவிடுவார்கள் சொல்லப்படும் குறிகளும் தெளிவாய் இருக்காது. அக்குறிகளில் சில உபயோகமற்றவை என்று அவர்கள் கூறலாம்.

98. நோயாளியின் நண்பர்களும் அவரைக் கவனிப்போரும் சொல்லக்கூடிய நோய்க் குறிகளில் சில உண்மைக்கு மாறாகவும் தவறாகவும் இருப்பது இயல்பு ஆதலால் தன் நோயைப் பற்றி வைத்தியர் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் நோயாளி கூறும் விவரங்களையே நாம் பெரிதும் மதிக்க வேண்டும். அதே போல எல்லா நோய்களிலும் குறிப்பாக நீடிக்கும் வகை நோய்களில் அவைகளின் உண்மையான, முழு உருவங்கள் விசேஷக் குறிகள் ஆகியவைகளை விசாரிக்கும் பொழுது மனித சுபாவத்தை அறிந்து, பகுத்தறிவை உபயோகித்துப் பொறுமையைக் கடைப் பிடித்து நடக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. 

99. மொத்தத்தில் திடீர் வகை நோய்களையும் தோன்றிச் சில நாட்களே ஆன நோய்களையும் விசாரிப்பது வைத்தியருக்கு மிக மிகச் சுலபமாய் இருக்கிறது. ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நோய்க்குறிகளும் தோன்றிச்சில நாட்களே ஆவதால் அவை நோயாளி அவர் நண்பர்கள் ஆகியோர்களின் நினைவில் பசுமையாய் இருக்கின்றன. அது போன்ற சமயங்களிலும் நோயின் விவரங்கள் அனைத்தையும் வைத்தியர் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான் என்றாலும் அவர் விசாரனை செய்ய வேண்டியது மிகக் குறைவாய் இருக்கும், நோயாளியும் அவருடைய நண்பர்களும் தாமாகவே பெரும் பகுதியான விவரங்களைக் கூறிவிடுவார்கள்.

100. கொள்ளை நோயாகவோ அல்லது இங்கொன்றும் அங்கொன்றுமாகவோ தோன்றும் நோய்களின் மொத்தக் குறிகளைப் பற்றி விசாரணை செய்கையிலே, அவைகளைப் போன்ற ஒரு நோய், அதே பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ, உலகத்தில் எப்பொழுதாவது தோன்றியிருக்கிறதா இல்லையா என்று ஆராயவேண்டிய அவசியம் இல்லை. அவ்வகையான ஒரு நோயில் தென்படும் புதுமையாகவோ அல்லது வினோதமாகவோ அந்நோயைச் சோதிப்பதிலோ சிகிச்சை செய்வதிலோ மாறுதல் ஏற்பட முடியாது. ஏனெனில் உலகில் தோன்றும் ஒவ்வொரு நோயையும் புத்தம் புதியதாகவே மதித்து அதை முற்றிலும் விசாரித்தறிய வேண்டும். உண்மையைப் புறக்கணித்துக் கற்பனையை செய்வது எச்சமயத்திலும் கூடாது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளியின் நோய் முழுவதுமோ அல்லது அதன் ஒரு பகுதியோ தனக்கு தெரிந்ததுதான் என்று முன்கூட்டியே அபிப்பிராயம் கொள்ளாமல் இருக்க வேண்டும்

 எல்லாச்சமயங்களிலும் நோயின் எல்லா விவரங்களையும் கவனமாய்ச் சோதித்தறிய வேண்டும். உண்மையான குற்றமில்லாத முறையில் வைத்தியத் தொழில் புரிய ஆவல் உள்ளோரின் விருப்பம் நிறைவேற இதுவே வழி. ஊன்றிக் கவனித்தால் உலகில் கொள்ளை நோயாகத் தோன்றும் ஒவ்வொரு நோயும் பல விஷயஙகளில் அதற்கு முன்னதாகத் தோன்றிய எந்தப் கொள்ளை நோயுடனும் சிறிதளவு கூட ஒற்றுமையுள்ளதாக இல்லை. தொற்றும் குணமுள்ள ஒரு வகைப் பொருளால் (கிருமிகளால்) உற்பத்தி செய்யப்படும் பெரியம்மை, சின்னம்மை முதலிய பெருவாரி நோய்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer