கலப்புப் பயிரில் கலக்கும் பெண் விவசாயி!
ஒரு ஏக்கரில், வாரம் 15 ஆயிரம் ரூபாய் லாபம்!
Thanks to
இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
பூக்கள், கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவை தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்கள் என்றாலும், அவற்றின் விலை நிலையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இவற்றின் விலை, திடீரென்று உச்சத்துக்கும் திடீரென்று அதலபாதாளத்துக்கும் சென்று விடும் என்பதால்... ஒரே வகையான கீரையையோ, காயையோ நடவு செய்பவர்கள்,
பல நேரங்களில் நஷ்டத்தைச் சந்திக்க வாய்ப்புண்டு. ஆனால், ஒரே நிலத்தில் பல பயிர்களை சாகுபடி செய்தால், ஒன்றுக்கு விலை குறைந்தாலும் அதை இன்னொன்றில் ஈடுகட்டி விட முடியும்!
அற்புதமான இந்த நுட்பத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட பலரும் கலப்புப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு, நஷ்டமில்லா விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, ‘பசுமை விகடன்’. அந்த வகையில், ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை முறையில் 5 வகை காய்கறிகளையும் 8 வகை கீரைகளையும் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திருநெல்வேலி, காமாட்சி நகரில் வசித்து வரும் ஸ்வீட்லின்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலூகா, அனவரதநல்லூரில் உள்ள ஸ்வீட்லினின் தோட்டத்துக்கு, மழை ஓய்ந்திருந்த ஒரு காலைப் பொழுதில் சென்றோம். வேலையாட்களோடு சேர்ந்து கத்திரிக்காய்களைப் பறித்துக் கொண்டிருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள, ஆர்வமுடன் பேச ஆரம்பித்தார்.
செங்கல் சூளையிலிருந்து விவசாயத்துக்கு!
“என் கணவர் சேகர், பூர்விக விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவங்க வீட்டுல நெல், கடலை, வாழை, மரவள்ளி, காய்கறிகள்னு பருவத்துக்கேத்த பயிர்களை சாகுபடி செய்வாங்க. ஆனா, முழுக்க முழுக்க ரசாயன உரமும், பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்தாங்க. சின்ன வயசுலயே வேலைக்குப்போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச என் கணவர், அதுல சம்பாதிச்ச பணத்தை வெச்சு... இங்க 10 ஏக்கர் நிலம் வாங்கி, செங்கல் சூளை ஆரம்பிச்சார். சூளைக்குள்ளயே, ஆடு, மாடு, கோழி, வெண்பன்றினு வளர்த்துக்கிட்டும் இருந்தார். எல்லாத்துலயுமே நல்ல வருமானம் கிடைச்சது.
அவருக்கு இயற்கை விவசாயத்துல ரொம்ப ஆர்வம். ‘ரசாயன விவசாயத்துல விளைஞ்சதைச் சாப்பிடுறதும், விஷத்தைச் சாப்பிடுறதும் ஒண்ணுதான். குறைந்தபட்சம் நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையாவது விஷமில்லாம உற்பத்தி பண்ணணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். ஆனா, அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போய் ரெண்டு வருஷத்துக்கு முன்ன இறந்துட்டார். அதனால ஆடு, கோழிகளையெல்லாம் விற்க வேண்டியதாயிடுச்சு. என் கணவரோட ஆசையை நிறைவேத்துறதுக்காக செங்கல் சூளை இருந்த இந்த இடத்துல இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவு செஞ்சேன்” என்ற ஸ்வீட்லின், சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.
வழிகாட்டிய விவசாயி!
“இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசை இருந்தாலும், எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. திருநெல்வேலியில இருக்கிற இயற்கை அங்காடிக்குப் போய் விசாரிச்சப்போ... அவங்களுக்கு காய் கொடுக்கிற ஒருத்தரோட அட்ரஸ் கொடுத்தாங்க. அவரைப் போய் சந்திச்சப்போ, நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துட்டு... ‘என்கிட்ட தெரிஞ்சுக்கிறதை விட ‘பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கிப் படிச்சீங்கன்னா நிறைய தெரிஞ்சுக்கலாம்னு சொல்லி, புத்தகத்தைக் கொடுத்தார். அப்போ இருந்து இப்போ வரைக்கும் தொடர்ந்து படிச்சுக்கிட்டிருக்கேன்.அதுல நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு 20 சென்ட்ல கத்திரி, தக்காளி, வெண்டை, கீரைகளை நடவு பண்ணி இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். அதுல விளைஞ்ச காய்கறிகளை சொந்தத் தேவைக்கு வெச்சுக்கிட்டு மீதியை சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கனு கொடுத்தேன். அவங்கல்லாம் தொடர்ந்து காய் கேட்க ஆரம்பிக்கவும், சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தினேன். எப்பவும் ஒரு ஏக்கர்ல மட்டும் பயிர் இருக்கும். இன்னொரு ஏக்கர் விதைப்புக்குத் தயாரா இருக்கும். ஒரு காய்கறிப் பயிர்ல பூ எடுக்கிற சமயத்துல, அந்தக் காயோட விதையை அடுத்த இடத்துல நடவு செஞ்சிடுவேன். இப்படி சுழற்சி முறையில பயிர் பண்றதால வருஷம் முழுக்க காய் கிடைச்சுக்கிட்டே இருக்குது. காய்கறி விவசாயத்தை ஆரம்பிச்சு 8 மாசத்துக்கு மேல ஆகிடுச்சு. இதுவரை தொடர்ந்து காய் கிடைச்சுக்கிட்டே இருக்கு.
இப்போ, 30 சென்ட்ல கத்திரி, 15 சென்ட்ல வெண்டை, 15 சென்ட்ல தக்காளி, 10 சென்ட்ல காராமணி, 10 சென்ட்ல சீனி அவரை, 20 சென்ட்ல கீரை வகைகள்னு (தண்டுக்கீரை, சிவப்புத் தண்டுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கன்னி, சிவப்பு பொன்னாங்கன்னி, புளிச்சக்கீரை) சாகுபடி செய்றேன். ஆடு, மாடு, பன்றிகள் வளர்த்தப்போ கிடைச்ச சாணம் 10 டிராக்டர் அளவுக்கு இருந்துச்சு. அதையெல்லாம் அடியுரமா போட்டு விவசாயம் செய்ததால நல்லா விளையுது” என்று சொன்ன ஸ்வீட்லின், வேலையாட்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு வந்தார்.
வீட்டிலேயே விற்பனை!

“காய்கறிகள், கீரை விற்பனைக்கு ரொம்ப மெனக்கெடுறதில்லை. திங்கள், புதன், வெள்ளி மூணு நாளும் எங்க வீட்டுல சாயங்காலம் 4 மணியில் இருந்து 8 மணி வரை விற்பனை செய்வேன். ஞாயிற்றுக்கிழமை காலையில 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரைக்கும் பாளையங்கோட்டை உழவர் சந்தை வாசல்ல வண்டியில வெச்சு விற்பனை செய்வேன். உழவர் சந்தைக்கு வெளியில இருக்கிறதால ஆரம்பத்துல வாங்கத் தயங்கினாங்க. அப்புறம் இயற்கை விவசாயத்துல விளைஞ்சதுனு தெரிய ஆரம்பிச்சதும் வாடிக்கையாளர்கள் அதிகமாயிட்டாங்க. நான் எந்த விஷயத்தையும் சொல்லி விளம்பரப்படுத்தலை. இயற்கை விவசாயத்துல விளைஞ்ச காய்களோட தரமும், சுவையும் தானாவே எனக்கு வாடிக்கையாளர்களைக் கூட்டிட்டு வந்துடுச்சு.
காத்திருக்கும் நேரத்தில் பசுமை விகடன்!
வீட்டுல நான் 4 மணிக்கு காய் விற்பனை ஆரம்பிச்சாலும்... 3 மணிக்கே காய் வாங்க ஆளுங்க வந்துடுவாங்க. அப்படி முன்னாடியே வந்து காத்துக்கிட்டிருக்கிறவங்க படிக்கிறதுக்காக காய் விற்கிற இடத்துல ‘பசுமை விகடன்’ புத்தகங்களைத் தொங்க விட்டிருப்பேன். அதை பள்ளிக் குழந்தைங்கள்ல்லாம் விரும்பிப் படிக்கிறப்போ ஆச்சர்யமா இருக்கும்” என்ற ஸ்வீட்லின், ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.
வாரத்தில் 4 நாட்கள் பறிப்பு!

“தினமும் காய்கறிகள் பறிக்கலாம்னாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் பறிக்கிறேன். கீரைகளோட வயது ஒரு மாசம்தான். காய்கறிகளோட வயது ஆறு மாசம். ஆனா, நான் சுழற்சி முறையில விதைக்கிறதால தொடர்ந்து காய்களும் கீரையும் கிடைச்சுக்கிட்டே இருக்கு. ஒரு வாரத்துக்கு (நான்கு நாட்கள் பறிப்பதன் மூலம்) 260 கிலோவில் இருந்து 300 கிலோ வரை கத்திரி; 160 கிலோவில் இருந்து 200 கிலோ வரை தக்காளி; 100 கிலோவில் இருந்து 130 கிலோ வரை வெண்டை; 72 கிலோவில் இருந்து 80 கிலோ வரை காராமணி; 72 கிலோவில் இருந்து 80 கிலோ வரை சீனி அவரை; 480 கட்டுகள் முதல் 500 கட்டுகள் வரை கீரைனு கிடைக்குது.
கத்திரி, சராசரியா ஒரு கிலோ 30 ரூபாய்; தக்காளி, சராசரியா ஒரு கிலோ 25 ரூபாய்; வெண்டை, சராசரியா ஒரு கிலோ 20 ரூபாய்; காராமணி, சராசரியா ஒரு கிலோ 18 ரூபாய்; சீனிஅவரை, சராசரியா ஒரு கிலோ 18 ரூபாய்; கீரை சராசரியா ஒரு கட்டு 10 ரூபாய்னு விற்பனை செய்றேன்.
அந்த வகையில குறைஞ்ச அளவே வெச்சுக்கிட்டாலும்... கத்திரி மூலமா ஒரு வாரத்துக்கு 7 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்குது. தக்காளி மூலமா ஒரு வாரத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. வெண்டை மூலமா ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. காராமணி 1,296 மூலமா ஒரு வாரத்துக்கு ரூபாய் வருமானம் கிடைக்குது. சீனி அவரை மூலமா ஒரு வாரத்துக்கு 1,296 ரூபாய் வருமானம் கிடைக்குது. கீரைகள் மூலமா மூலமா ஒரு வாரத்துக்கு 4 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்குது. மொத்தமா பார்த்தா வாரத்துக்கு 21 ஆயிரத்து 192 ரூபாய் கிடைக்கும். இதுல, இடுபொருட்கள், பறிப்புக்கூலி, பராமரிப்பு, போக்குவரத்துச் செலவுனு எல்லா செலவும்போக 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபமா கிடைக்குது” என்ற ஸ்வீட்லின்...

நிறைவாக,
“மொத்த இடத்துலயும் ஒரே பயிரைப் போட்டுட்டு விலையில்லை, வருமானம் இல்லைனு புலம்பாம, இப்படி கலந்து பயிர் பண்ணினா கண்டிப்பா நஷ்டம் வராது. அதுவுமில்லாம நம்மைச் சுத்தியே சந்தைப்படுத்தவும் வாய்ப்பு இருக்குங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டா கமிஷன் கடைக்கு அலைய வேண்டியதும் இல்லை. அடுத்ததா அதிக பரப்பில் பாகல், புடல், பீர்க்கன், சுரை, பூசணினு கொடி வகைப் பயிர்களை சாகுபடி செய்யலாம்னு இருக்கேன்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்.
தொடர்புக்கு,
ஸ்வீட்லின்,
செல்போன்: 73737-48188.
நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்களேன்!
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!