Breaking News
Loading...
Saturday, February 6, 2016

ஆர்கனான் - 5

Saturday, February 06, 2016

கருமையம் என்ற ஒரு அமைப்பை கண்டுபிடித்து வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகிறார். ஒற்றுமை குணமுள்ள இயற்கை நோய்ப்பொருள் அதிகம் இல்லை, அது அதிக தொல்லையும் தந்திடும்.

49,50). ஒற்றுமைக் குணமுள்ள இயற்கை நோய்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனாலும், ஒற்றுமைக்குணத்தினால் ஹோமியோபதிச் சட்டப்படி நோய்கள் இயற்கையாய்க் குணமாகும் விஷயமாய் வைத்தியர்கள் அதிக கவனம் செலுத்தாததாலும் மேலே உள்ளதை விட அதிகமான உதாரணங்களை நாம் காணமுடியவில்லை. ஆயினும் என்ன! ஹோமியோபதிச் சட்டத்துக்கு இணங்க, நோய்களைக் குணம் செய்யும் வல்லமையுள்ள இயற்கை நோய்கள், பெரியம்மை, சின்னம்மை, சொறி, சிரங்கு ஆகிய இம்மூன்றே ஒன்றுதான்.

இந்நோய்ப் பொருள்களை, மருந்துகளாக உபயோகிக்க முடியாது. ஏனெனில் அவை உயிருக்கு அபாயத்தை விளைவிக்கக் கூடியவை. குணமாக்கப்பட வேண்டிய நோயைவிடப் பயங்கரமானவை. அப்பொருள்களை உபயோகித்தால் முதலிலிருந்த நோய் நீங்குமென்றாலும், அவைகளால் ஏற்படும் புதிய நோய்க்கு மறுபடி சிகிச்சை செய்ய நேரும். மேலும் அம்மூன்று நோய்களுடன் ஒற்றுமையுள்ள நோய்களும் அதிமாக இல்லை. மருந்துகளின் அளவை நாம் தேவைக்குத் தகுந்தபடி குறைக்கவும் அதிகமாக்கவும் செய்யலாம். நோய் பொருள்களின் அளவை அவ்வாறு செய்ய முடியாது. ஆகவே அபாயத்தை விளைவிக்கக்கூடிய நோய்ப் பொருள்களைக் கொண்டு சிகிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது. நீடித்த நோயொன்றைக் குணம் செய்வதற்காக, நோயாளிகளைப் பெரியம்மை போன்ற அபாயமான துன்பங்கள் நிறைந்த நோய்களுக்கு உட்படுத்துவது முறையல்ல. ஆயினும் இயற்கையில் நடைபெறும் இவ்விமூயத்தை, அதாவது ஒற்றுமைக்குணமுள்ள இரு இயற்கை நோய்கள் ஒருவர் உடலில் சந்திக்கும் போது, பழைய நோய் குணமாவதை நாம் காண்கிறோம்.

மறுக்க முடியாத இவ்வுதாரணங்கள் “ஒற்றுமையான குறிகளால் நோயை நீக்க முடியும்”. என்ற மாபெரும் உண்மையான மாற்று இல்லாத இயற்கை நோய் தீர்க்கும் சட்டத்தை உறுதி செய்கின்றன. ஒற்றுமையுள்ள செயற்கை நோய்ப்பொருள் உலகில் ஆயிரம் ஆயிரம் இருக்கிறது.

(51). உலகமெங்கும் பலவித செயற்கை நோய்களை உண்டாக்கவல்ல மருந்துப் பொருள்கள் ஆயிரமாயிரமாகப் பரவிக்கிடக்கின்றன. இயற்கையில் ஏற்படும் ஒவ்வொரு நோயையும் நீக்கும் வல்லமையுள்ளது. அதிக அளவில் உட்கொண்டால் ஒற்றுமைக் குறிகளையுடைய செயற்கை நோயை உண்டாக்கக்கூடிய மருந்துச்சரக்குகளின் துணை கொண்டு ஹோமியோபதி முறைப்படியும் மருந்தை செய்து அதனைக் கொண்டு சிகிச்சை செய்யலாம். நோய்குணமானவுடன் இம் மருந்துகளிலுள்ள சக்திஉயிர்ப்புச் சக்தியினால் அது அக்கணமே மறைந்து விடுகிறது. அதனால் மருந்தின் சக்தியை நீக்குவதற்காக இரண்டாவது சிகிச்சை செய்யவேண்டிய அவசியமில்லை. செயற்கை நோய்களை உண்டாக்கும் இப்பொருள்களின் சக்தியை (மருந்துகளின் அளவை) தன் விருப்பப்படி கூட்டவோ குறைக்கவோ வைத்தியரால் முடியும். நீக்கப்பட வேண்டிய ஒற்றுமைக் குணமுள்ள இயற்கை நோயைக் காட்டிலும் சற்றே கூடுதலான சக்தி (வீரியம்) இருக்கும் அளவுக்கு மருந்தின் சக்தியைக் கூட்டலாம்.

(உதாரணத்தோடு கூறும் இச் சிகிச்சைமுறையினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாமல் நாட்பட்ட தீராத நோய்களையும் தீர்க்கலாம். மிருதுவாகவும் அடக்கமாகவும் ஆனால் மிக விரைவில் நோய் நிரந்தரமாய் நீக்கப்படுகிறது. வேற்றுமையுள்ள இயற்கை நோயை போல் வேற்றுமையுள்ள மருந்துகள் யாவும் சற்றும் பயனில்லை. நிச்சயமாக அந்த மருந்துகள் எல்லாம் உபயோகமற்றவை மற்றும் மரணத்தில் தான் முடியும்.

(52). இது குன்றின் மேலிட்ட விளக்குப் போல் எளிதிலே புலனாகும். இவ்வுதாரணங்களைக் கண்ட பிறகு, நல்ல நோக்கம் உள்ள எந்த வைத்தியரும் தான், இதுவரை கையாண்டு வந்த, பழைய வைத்திய (அலோபதி) முறையைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார். ஏனெனில் அலோபதி மருந்துகளும் செயற்கை புண்களை உண்டாக்குவது போன்ற முறைகளும் நீக்கப்பட வேண்டிய இயற்கை நோயுடன் நேரிடையான தொடர்பு இல்லாமையே காரணம் ஆகும். அதனால் அவை நோய் இல்லாத உடல் பகுதிகளையே தாக்குகின்றன. இயற்கை நோயுடன் ஒற்றுமையற்ற செயற்கை நோயொன்று தோன்ற ஊக்கமளித்து நோயாளியின் உடல் வலிமையைச் சூறையாடுகின்றன. உடலிலுள்ள பழைய நோயுடன், அதனுடன் ஒற்றுமை இல்லாத புதிய நோய் ஒன்று சேரும் போது, நோயின் அளவு அதிகரிப்பதைத்தவிர வேறு நன்மை எதுவும் விளைவதில்லை. அதைப்போலவே மருத்துவர் மனதில் பட்ட மருந்துகளை ஏராளமான அளவில் கொடுத்து வந்தால் நோயாளியின் உடல் நாசப்படுத்தப்படுகிறது. வேற்றுமையுள்ள புதிய நோய் பழைய நோயை விட வலிமை குறைந்ததாய் இருந்தால், பழைய நோய் புதிய நோயை விரட்டி விடுவதைப் போல, கடுமையில்லாத அலோபதி மருந்துகளை எவ்வளவு நீண்ட காலம் கொடுத்து வந்தாலும், நோய் குணமாகாமல் அப்படியே இருந்து வருகிறது.

ஆயினும் நோயாளியின் உடல் வலிமை குறைந்து கொண்டே வருகிறது. வேற்றுமையுள்ள புதிய நோய் பழைய நோயை விடப் பலம் வாய்ந்ததாக இருந்தால், புதிய நோய் குணமாகும் வரை அல்லது அதன் ஆட்டபாட்டங்கள் குறையும் வரை பழைய நோய் உள்ளே பதுங்கி இருந்து பிறகு வெளியே வருகிறது. அதைப்போலவே கொடுமைக் குணம் நிறைந்த அலோபதி மருந்துகளைக் கொடுத்தால், நோய் சிறிது காலத்துக்கு அடங்கி இருந்து பிறகு முன்போலவே வெளியே வரும். சம பலமுள்ள இரு வேற்றுமை நோய்கள் ஒருவர் உடலில் பல காலமாய் நீடித்து இருந்தால், ஒவ்வொன்றும் தனக்கேற்ற உடலுறுப்புகளை மட்டும் தனித்தனியே பிடித்துக் கொண்டு கலப்புநோயாய்க் காட்சி அளிக்கின்றன. அதைப்போலவே இயற்கைநோயுடன் ஒற்றுமையற்ற அலோபதி மருந்துகளை ஏராளமான அளவிலும், நீண்ட காலமாகவும் கொடுத்து வந்தால், இயற்கை நோய் குணமாகாமல் இருப்பதுடன் புதிய செயற்கை நோய்களும் உண்டாகின்றன. அதனால் நோயைக் குணம் செய்யும் வேலை முன்னைவிடக் சிக்கலாகி கடுமையாகிறது.

(53). ஹோமியோபதி முறைப்படியே நோய்கள் நிச்சயமாகவும் மிருதுவாகவும் நீங்குவதை நாம் பார்க்கிறோம், அனுபவம், யூகம் ஆகியவைகளின் துணைக்கொண்டு, மறைமுகமாய் முன் பக்கங்களில் நாம் எடுத்துக் காட்டிய படி, நோய்களை நிச்சயமாகவும், விரைவிலும் நிரந்தரமாகவும் அழியக்கூடிய ஒரே வழி ஹோயோபதியே. ஏனெனில் இச்சிகிச்சை முறை அழிவற்றதும், குற்றமற்றதுமான இயற்கைச் சட்டத்தை ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. மூவகையான சிகிச்சை முறைகளில் முதன்மையானது ஹோமியோபதியே.

(54). நோய்களில் மருந்துகளை ஹோமியோபதி, அலோபதி, ஆண்ட்டிபதி என்று வழஙகப்படும் மூன்று வகையான வழிகளில் உபயோகிக்க இடம் இருக்கிறது. இம்மூன்றினுள் நோயாளிக்கு எவ்விதத்திலும் தீஙகு செய்யாமல், அவர் உடல் வலிமையைக் குறைக்காமல் நோயை மிருதுவாகவும் நிச்சயமாகவும் நிரந்தரமாகவும் குணம் செய்வதற்கு ஏற்ற ஒரே ஒரு வழி ஹோமியோபதிதான். அம்முறை ஒன்றே ஏற்றதும் நேர்மையானதுமாகும். மனிதனின் வல்லமையினால் அடையக் கூடியது ஆகும். ஆகவே அதை முதல் வழி என்று வைப்போம்.

(55). இரண்டாவது வழியாகிய அலோபதியில் உடலிலுள்ள நோயுடன் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத உடல் பகுதிகளையே தாக்கும் இயல்புள்ள மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்யப்படுகிறது. நோயற்ற அப் பகுதிகளின் வழியாய் நோயை இழுத்துவெளியேற்றி விடலாம் என்று அறியமையினால் தவறு செய்பவர்கள் அலோபதியர்கள். இம்முறை உபயோகமற்றது, கேடுகள் நிறைந்தது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஆதலால் அதை பற்றி மீண்டும் எழுத விரும்பவில்லை.

(56). மூன்றாவதும் கடைசியுமான வழி ஆண்டிபதி இம்முறையில் நோயினால் உண்டாகும் (கிருமிகளை கொல்லும் மருந்துகளை) வேதனைகளைச் சிறிது காலம் மறைத்து வைக்கும் குணமுள்ள மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்யப்படுகிறது. வேதனை மறைந்தவுடன் தன் நோய் குணமடைந்து விட்டதாக எண்ணி வைத்தியரின் மேல் நோயாளிக்கு நம்பிக்கை ஏற்படவே இம்முறை கையாளப்படுகிறது. மிக வேகமாய் வளரும் குணமில்லாத நோய்களில் இம்முறையினால் எள்ளளவும் பயன் இல்லை. மிக மிகக் கெடுதலானது. அலோபதியர்கள் நோய்களைச் சிகிச்சை செய்யப் பல்வேறு வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். அவைகளில் இயற்கை நோய்க் குறிகளுடன் ஓரளவு உறவு ஆண்டிபதி முறைக்கே இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது எத்தகைய உறவு தெரியுமா? உண்மைக்கு நேரெதிரானது. மொத்தக் குறிகளை மதியாமல் ஒற்றைக் குறியை அடக்குவதால் துன்பம்தான் ஏற்படும். (57இ 58, 59, 60, 61, 62)

(57). ஆண்ட்டிபதி முறையை அலோபதியர்களால் எப்படிக்கையாளப்படுகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு நோயிலும் பற்ப்பல நோய்க் குறிகள் இருக்கின்றன. அவைகளில் மற்ற எல்லாவற்றையும் அலட்சியம் செய்து விட்டு அதிக வேதனையை அளிக்கும் ஒரேயொரு குறியை மட்டும் இலக்காக வைத்து, அதற்கு நேர் எதிரான செயற்கை நோய்க்குறியை உண்டாக்கும் குணமுள்ள மருந்தைக்கொடுக்கின்றனர். இருபத்திரண்டு நூற்றாண்டுகளாக வாழையடி வாழையென வந்துவிட்ட இப்பழங்கால அலோபதி சிகிச்சையினால் வேதனைக்குறி விரைவினில் நீங்குமென்று அவர் எதிர்பார்க்கலாம். உடல் உணர்ச்சிகளைச் சீக்கிரமாய் மழுங்கச் செய்யும் சக்தி ஓபியத்துக்கு (தூக்க மருந்துக்கு) இருப்பதைக் கொண்டு அவர் எல்லா வித வலிகளுக்கும் அம்மருந்தை அதிக அளவுகளில் கொடுக்கிறார். குடலின் இயற்கையான முன்னோக்கித் தள்ளும் சக்தியை மிக விரைவிலே போக்கடித்து அதன் உணர்ச்சியை அடக்கும் குணம் அம்மருந்துக்கு இருப்பதுதான் காரணம். தூக்கமில்லாதவர்களுக்கும் ஓபியம் கொடுக்கப்படுகிறது.

ஏனெனில் அம்மருந்தைக் கொடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் நோயாளிக்கு மயக்கம் கலந்த தூக்கம் உண்டாகிறது. பல நாட்களாக மலச்சிக்கலினால் அவதியுறுவோருக்குப் பேதி மருந்துகளை உபயோகிக்கிறார்கள். நெருப்புச் சூடுபட்ட கையைக் குளிர்ந்த தண்ணீரில் வைக்கச்சொல்கிறார். தணணீரின் சூடு குறைவாய் இருப்பதால் கையை அதில் வைத்த உடனே மயாஜாலம் போல் எரிச்சல் நீங்குகிறது. உடலில் சிலு சிலுவென்ற குளிரும் உணர்ச்சியுள்ளவர்களைச் சூடான தண்ணீரில் குளிக்கச் செய்கிறார். அதனால் நோயாளிகளுக்கு உடனேயே உடலில் சூடு உண்டாகின்றது. நீண்ட நாட்களாய் உடல் பலவீனமாய் இருந்து வரும் நோயாளியை ஒயின் (ஒருவகைச் சாராயம்) கலந்த டானிக்குகள் உட்கொள்ளச் செய்கிறார். ஒயினைக் குடித்தவுடனே நோயாளிக்கு புத்துயிரும், புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றன. இன்னும் இவைகளைப் போன்ற இயற்கை நோய்க்குறிக்கு நேர் எதிரான செயற்கை நோய்க்குறியை உண்டாக்கும் மருந்துகளை உபயோகிக்கிறார். ஆனால் அவ்வாறு உபயோகிக்கக் கூடிய மருந்துகள் மிக சிலவே.

(58). நோயின் குறிகளில் ஒன்றை மட்டும், அதாவது ஒரு சிறு பகுதியை மட்டும், கவனிப்பதினால், நோயாளியின் விருப்பம் போல், முழு நோயும் நீங்குமென்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே இம்முறை மிக மிகத் தவறானது. (அலோபதி மருத்துவர்களில் (Specialist) உறுப்பு நிபுணர்கள் தான் இப்படி செய்கின்றனர்.) போனால் போகட்டுமென்று இத்தவறை பொருட்படுத்தாமல் விட்டு விடுவோம். ஆயினும் நாட்பட்ட அல்லது பிடிவாத குணமுள்ள நோய்களில், ஆண்டிபதி முறைப்படி மருந்தை உபயோகித்ததினால் சிறிது காலம் மறைந்து பிறகு முன்னிருந்ததை விடக் கடுமையாகி விடும்.
ஆண்ட்டிபதிச் சிகிச்சையினால், எல்லாச்சமயங்களிலும் விதிவிலக்கு என்ற சொல்லுக்கு இடமில்லாமலும், நோய்கள் யாவும் சிறிது காலம் மறைந்திருந்து பிறகு அதிகரிக்கவே செய்கின்றன. என்பதைக் கூர்ந்து கவனிப்போர் யாவரும் ஒப்புக்கொள்வர். தன் நோய் அதிகரித்து விடக் காரணம் என்னவென்று கேட்கும் நோயாளியிடம் அலோபதி வைத்தியர் சொல்லும் சமாதானம், “முன்பு இருந்த நோய் மிகவும் விஷத்தன்மை பொருந்தியது, இப்பொழுது தான் அது தன் சுய உருவத்தைக் காட்டுகிறது அல்லது இது முற்றிலும் புதிய தொருநோய்” என்று சொல்லி அலோபதி வைத்தியர்கள் ஏமாற்றுகின்றனர். காரணம் அவர்களுக்கு உயிரைப் பற்றித் தெரியாது. (59).

தற்கால சாந்தியை (Sudden Relief) அளிக்கும் விரோதமான மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்யும் சமயங்களில், பிடிவாத குணமுள்ள நோய்களின் முக்கிய குறிகள் திரும்பி வராமல் இருப்பது கிடையவே கிடையாது. அது மட்டுமல்ல சில மணி நேரம் கழித்து வெளிப்படையாகத் தெரியுமளவுக்கு நோய் அதிகரிக்கவும் செய்கிறது. நீண்ட காலமாய்ப் பகலில் தூக்கக் கலக்கமாய் இருந்து வந்த ஒருவருக்கு வைத்தியர் காப்பியை உபயோகித்தார். காப்பியின் முதல் வேலை சுறு சுறுப்பை உண்டாக்குவது அதன் முதல் வேலை முடிந்தவுடன் பகல் தூக்கம் முன்பிருந்ததைவிட அதிகமாகி விட்டது. இரவில் அடிக்கடி விழிப்பு ஏற்பட்டு நல்ல தூக்கம் இல்லாதிருந்த ஒருவருக்கு நோயின் மற்ற குறிகளைக் கவனிக்காமல், இரவு வேளையில் (8 மணிக்கே) தூக்க மருந்தை மருத்துவர் கொடுத்தார். அன்றிரவு மயக்கம் கலந்த தூக்கம் வந்தது.

ஆனால் அதற்கு மறுநாளிலிருந்து இரவு நேரங்களில் முன்பு வந்த அளவு கூடத் தூக்கம் வரவில்லை. அதனால்தான் தூக்க மாத்திரைகளை நாளுக்கு நாள் அதிகமாய் தரவேண்டியதாய் உள்ளது. நாட்பட்ட வயிற்றுப்போக்குக்கு நோயின் மற்றக்குறிகளைக் கவனிக்காமல் ஓபியத்தைக் கொடுத்தார். குடல்களை இறுக்குவது அம்மருந்தின் முதல் வேலைகளில் ஒன்று. அதனால் வயிற்றுப் போக்கு சிறிது நேரம் அடங்கியிருந்து பிறகு முன்னை விடஅதிகரித்தது. கடுமையாகவும் அடிக்கடி வந்து கொண்டும் இருக்கிற எல்லாவித வலிகளையும் ஓபியத்தின் (தூக்க மருந்து) துணைகொண்டு சில காலம் அடக்கி வைக்கலாம். ஆனால் அவை தவறாமல் பல சமயங்களில் முன்னை விடக்கடுமையாகவும் திரும்பி வரத்தான் செய்யும். அல்லது அவ்வலிகளை விட மோசமான புதியதொரு கோளாறு தோன்றுவதும் உண்டு. பல காலமாய் இரவு நேரங்களில் ஏற்படும் இருமலுக்கு ஓபியத்தைக் தவிர வேறு மருந்து கொடுக்க அலோபதி வைத்தியருக்குத் தெரியாது ஓபியத்தின் முதல் வேலை எல்லாவகை வேதனைகளையும் அடக்குவதேயாகும். ஆதலால் முதல் இரவில் இருமல் நின்று விட்டுப் பிறகு மறு நாளிலிருந்து இரவு நேரங்களில் முன்னை விடக் கடுமையாய் ஏற்படலாம்.

இச்சமயத்தில் ஓபியத்ததை மேன் மேலும் அதிக அளவுகளில் கொடுத்து இருமலை அடக்கி வந்தால், ஜூரம், இரவில் வியர்வை உண்டாகுதல் ஆகிய குறிகளும் சேர்ந்து கொள்ளும். மூத்திரப்பையின் பலவீனம் காரணமாக மூத்திரம் அடக்கப்பட்டிருந்தால் காந்தாரி, எனப்படும் மருந்தின் உதவி கொண்டு அக்கோளாறை நீக்க அலோபதி வைத்தியர் முற்படுகிறார்கள். அதனால் அடங்கிருந்த மூத்திரம் வெளியாகத்தான் செய்கிறது. ஆனால் பிறகு மூத்திரப்பையின் இயற்கையான சுருங்கும் சக்தி மேலும் குறைந்து பாரிசவாத நிலையை நெருங்குகிறது. பல நாட்களாய் நீடித்திருக்கும் மலச் சிக்கலை நீக்க குடல்களைத் தூண்டி அடிக்கடி மலத்தை வெளியேற்றும் சக்தியுள்ள பேதி மருந்துகளையும், மலம் இளக்கி உப்புகளையும் உபயோகிக்கிறார். அவைகளின் முதல் வேலை காரணமாக மலச்சிக்கல் அச்சமயம் நீங்குகின்றது. ஆயினும் இரண்டாம் வேலை ஆரம்பித்தவுடன் மலச்சிக்கல் முன்னை விடக் கடுமையாகிறது. பல காலமாய் உடல் பலவீனம் இருந்த ஒரு நோயாளிக்கு ஒயின் (Wine-B2) எனப்படும் பானத்தைக் கொடுக்கிறார்.

ஒயினின் முதல் வேலை சிறிது நேரம் உடலுக்கு ஊக்கம் தருவதாகும். ஆனால் அதன் இரண்டாம் வேலை ஆரம்பித்தவுடன் பலவீனம் மேலும் அதிகமாகிறது. நீண்டகாலமாய் ஜீரண சக்தியை இழந்து வயிற்றில் ஜில்லிப்பு உணர்ச்சி இருந்த ஒருவருக்கு கசப்புப் பொருள்களையும் சூட்டை உண்டாக்கும் (மிளகு போன்ற) காரப்பொருட்களையும், கொடுத்து வயிற்றைப் பலப்படுத்தவும் சூடு ஏற்படவும் செய்கிறார். அப்பொருள்களின் முதல் வேலை நடைபெறும் வரை விரும்பிய பலன் ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் வேலை துவங்கியவுடன் வயிற்றின் ஜீரணச்சக்தி குறைந்து விடுகிறது. உடலின் இயற்கையாய் இருக்க வேண்டிய சூட்டின் அளவு குறைந்து பல காலமாய் உடம்பில் ஜில்லிப்பு உணர்ச்சியுள்ளவருக்குச் சுடு தண்ணீரில் குளிக்கச் செய்தால் ஜில்லிப்பு உணர்ச்சி மறைந்துவிடுவது உண்மைதான்.

ஆனால் சிறிது நேரமானவுடன் நோயாளிக்கு முன்னை விடப் பலம் குறைந்து உடலில் அதிகமாக குளிரும் ஏற்படும். கடுமையாக நெருப்புச் சுட்டுவிட்ட உடல் பகுதிகளில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றிக்கொண்டால் எரிச்சல் அக்கனமே மறைந்துவிடுகிறது. ஆனால் சிறிது நேரம் சென்றவுடன் எரிச்சலும் வலியும் தாங்க முடியாத அளவு அதிகமாகி அதேபோல் வேக்காடும் கடுமையாய் ஏற்படும். ஜலதோஷத்தினால் பல நாட்களாக இருந்துவரும் மூக்கடைப்பைத் தும்மலை உண்டாக்கும் குணமுள்ள மருந்துகளைக் கொடுத்துச் சளியை உண்டாக்கி குணம் செய்து விடலாம் என்று அலோபதி வைத்தியர் என்கிறார். இவ்விதமான எதிர்க்குணமுள்ள மருந்துகளால் அவைகளின் இரண்டாம் வேலையில் நோய் அதிகரிப்பதை அவர் கவனிக்காமல் விட்டுவிடுகிறார். முதல் வேலையில் மூக்கடைப்பு நீங்கினாலும் இரண்டாம் வேலையில் அடைப்பு முன்னைவிட அதிகமாகவே செய்கிறது.

மின்சாரத்தின் முதல் வேலை தசைகளுக்கு ஊக்கம் அளிப்பதாகும். நீண்டகாலமாய்ப் பலவீனத்தாலும் பாரிசவாதத்தாலும் (பக்கவாதம்) தாக்கப்பட்டு கை கால் முடங்கி விட்டவர்களுக்கு மின்சாரச் சிகிச்சை செய்தவுடனே முடங்கியிருந்த கை கால்களை மடக்கவும் நீட்டவும் முடிகிறது. ஆனால் இரண்டாம் வேலையில் கை கால்கள் முன்னைவிட அதிகமாய் முடங்கிச் செயலற்றுப்போய் விடுகின்றன. அடிக்கடி தலையில் அதிகளவு இரத்தம் சேருவகை நீக்க அங்குள்ள அசுத்த இரத்தக்குழாயை ஊசியால் குத்தி இரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அங்கு சேரும் இரத்தத்தின் அளவு மேன்மேலும் அதிகமாகத்தான் செய்யும். பல வகையான பெருவாரிக் காய்ச்சலால் உடலிலும் மனதிலும் ஏற்படும் கடுமையான வேதனைகளை அடக்க வலேரியானா (Valerina) என்ற மருந்தை ஏராளமான அளவில் கொடுப்பது, என்பது ஒன்றைத்தவிர வேறு எதுவும் அலோபதி வைத்தியருக்குத் தெரியாது.

உடலுக்கு ஊக்கம் தரும் மிகச் சக்தி வாய்ந்த மருந்துகளில் வலேரியானாவும் ஒன்று. உடலுக்கு ஊக்கம் தருவது வலேரியானாவின் முதல் வேலைதான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதன் முதல் வேலை முடிந்து இரண்டாம் வேலை துவங்கியவுடன் உடல் மன வேதனைகள் முன்னை விட அதிகமாகி உடல் உறுப்புகளும் மூளையும் செயலற்றுப்போய் மரணமும் நேரலாம்.

59. வலேரியானா அந்நோய்களுடன் ஒற்றுமையுள்ளதல்ல. எதிராகவே வேலை செய்கிறது. ஏராளமான அளவில் கொடுத்ததின் விளைவாக வலேரியானாவிலுள்ள விசமே நோயாக மாறி மரணத்தை ஏற்படுத்துகிறது ஆகிய விசயங்களை அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை. நோய் காரணமாக உடல் இளைத்து மெலிந்துவிட்டவர்களுக்கு நாடித் துடிப்பின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும். டிஜிடாலிஸ் (பிர];]ர் மாத்திரை) என்னும் மருந்தைக் கொடுத்து முதல்வேளை மருந்திலேயே நாடித்துடிப்பின் வேகத்தைச் சிலமணி நேரங்களுக்குக் கட்டுப்படுத்தி வைக்கத் தன்னால் முடிந்ததைப்பற்றி அலோபதியர்கள் ஆனந்தமடைவார் (அம்மருந்தின் முதல் வேலை நாடித் துடிப்பின் வேகத்தைக்குறைப்பதாகும்). ஆனால் மிகச் சீக்கிரத்தில் நாடித் துடிப்பின் வேகம் பழையபடிஅதிகமாகும், அதனால் முதல் தடவையை விட இரண்டாவது தடவையில் மருந்தின் அளவை அதிகரிக்க நேரும்.

இவ்விதம் படிப்படியாக மருந்தின் அளவை அதிகரித்துக்கொண்டே போய் முடிவில் எவ்வளவு மருந்தைக் கொடுத்தாலும் பலன் ஏற்படாத நிலைமை தோன்றும். பிறகு மருந்தின் இரண்டாம் வேலை துவங்கும் அச்சமயத்தில் கணக்கிடவே முடியாமல் நாடி மிக வேகமாய்த்துடிக்கும்,தூக்கம்,பசி,உடல் வலிமை ஆகிய யாவும் பறந்தோடிப் போகும். தவறாமல் மிக விரைவில் மரணம் எற்படுவது நிச்சயமாகும். அல்லது நோயாளிக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. வேற்றுமை குணமுள்ள மருந்துகளால் நோய் அதிகரிக்கின்றன. அல்லது மிகக்கடுமையான புதிய நோய்கள் தோன்றுகின்றன என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம் ஆயினும் பொய்யான கோட்பாடுகளைக் கற்றுள்ள அலோபதி வைத்தியர்கள் இவ் உண்மையை உணரவில்லை.

60. வேற்றுமை குணமுள்ள மருந்துகளால் இத்தகைய கேடுகள் விளைவது இயற்கை. நோய் அதிகரிக்கும்போது மருந்தின் அளவை அதிகரிப்பதின் மூலம் நிலைமையைச்சமாளித்து வெற்றிபெறலாம் என்று அலோபதியர் நினைக்கிறார். அப்படி அதிகளவில் மருந்தை கொடுப்பதால் நோய் சிறிது நேரத்திற்கு அடக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் மருந்தின் அளவு அதிகமாக்கப்படுவதால் முடிவில் முதல் நோயைவிடப் பயங்கரமான புதியதொரு நோய் தோன்றும் அல்லது உயிருக்கே ஆபத்து வரலாம் மரணமும் நேரலாம்,ஆனால் ஒருக்காலும் நோய்கள் நீங்குவதில்லை.

61. வேற்றுமைக் குணமுள்ள மருந்துகளை உபயோகிப்பதால் உண்டாகும் வருந்தத்தக்க விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப்பார்க்கும் திறமை அலோபதியருக்கு இல்லை. அத்திறமை மட்டும் இருந்திருந்தால் கீழுள்ள மாபெரும் உண்மையைப் பல காலத்திற்கு முன்பாகவே அவர்கள் கண்டுபிடுத்திருப்பார்கள் அதாவது உண்மையான சிகிச்சை முறை அவர்கள் செய்து வரும் முறைக்கு நேர் எதிரானது என்பது. அது மட்டுமல்ல நோய்க் குறிகளுடன் வேற்றுமையுள்ள மருந்துகளை உபயோகிப்பதால் நோய் சிறிது நேரம் அடங்கியிருக்கும், மருந்தின் முதல்வேளை முடிந்தவுடனே நோய் அதிகரிக்கவே செய்யும்,ஆதலால் ஹோமியோபதி முறைப்படி, நோய்க்குறிகளுடன் ஒற்றுமையுள்ள மருந்துகள், மிகக் குறைவான அளவுகளில் கொடுக்கப்பட்டால், நோயை நிரந்தரமாகவும் முற்றிலும் நீக்கும் என்ற உண்மை அவர்களுக்குப் புலப்பட்டிருக்கும். வேற்றுமை மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்ததினால் நோய்கள் அதிகரிப்பதைக் காண்கின்றனர். நாட்பட்ட வியாதிகள் ஒன்றாவது அச்சிகிச்சையால் குணமடையவில்லை என்பதையும் அறிந்துள்ளனர். பழைய நோய்கள் ஒற்றுமைக் குணமுள்ள புதிய நோய்களால் குணமாக்கப்பட்ட இயற்கை நிகழ்ச்சியையும் பார்த்துள்ளனர். ஆயினும் அவர்கள் உண்மையை அறியத் தவறிவிட்டனர். 

62. ஒரு நோயில் அதிகமான துன்பத்தை தரும் ஒரே ஒரு குறியை மட்டும் அடக்கும் நோக்கத்துடன் மருந்தை உபயோகித்தால் தீமை விளைகிறது. அதற்கு மாறாக ஹோமியோபதி முறைப்படி மருந்தை உபயோகித்தால் நன்மை விளைகிறது. இதன் காரணங்களைப் பற்பல ஆராய்ச்சிகளின் மூலம் நான் கண்டு பிடித்துக் கீழே தருகிறேன். இவ்விமூயம் எல்லோருக்கும் எளிதில் விளங்கக் கூடியது. நோய் தீர்க்கும் பணிக்கு இன்றியமையாதது. ஆயினும் எனக்கு முன் ஒருவரும் இதைக் கவனிக்கவில்லை. உயிர்ப்புச் சக்தியைத் தாக்கிய பின் உடலின் நலனை உருக்குலைத்து நோய்க் குறிகளைத் தோற்றுவிக்கும் மருந்தின் வேலை முதலாம் வேலை. அம் முதல் வேலையை அழித்துவிட உயிர்ப்புச் சக்தி குதித்தெழுந்து தோற்றுவிக்கும் மாற்றுக் குறிகள் இரண்டாம் வேலை எனப்படும்.

63. ஒவ்வொரு மருந்தும் உடலிலுள்ள உயிர்ப்புச் சக்தியைக் கூடுதலாகவோ குறைவாகவோ தாக்கி, உடலின் ஆரோக்கிய நிலைமையில் சில நாட்களுக்கோ பல நாட்களுக்கோ மாறுதலை உண்டாக்குகிறது. இது முதல் வேலை( Primary Action) எனப்படும். மருந்து, உயிர்ப்புச் சக்தி ஆகிய இரண்டிலுமுள்ள இருவகைச் சக்திகளும் ஒன்று கலந்ததாலேயே இம் முதல் வேலை தோன்ற முக்கிய காரணம் மருந்தின் சக்தியேயாகும். இம்முதல் வேலையை உயிர்ப்புச் சக்தி எதிர்த்து போராடுகிறது. அவ்வாறு எதிர்க்கும் குணம் உயிர்ப்புச்சக்திக்கு இயற்கையாய் அமைந்துள்ள ஒரு சாதனம் இதைதான் இரண்டாம் வேலை (ளுநஉடினேயசல யஉவiடிn) என்று அழைக்கிறோம்.

64. நோயற்ற உடலில் செயற்கை நோயை உண்டாக்கும் விஷச் சக்தியின் (அதாவது மருந்தின்) முதல் வேலை நடைபெறும் போது ஆரம்பத்தில் உயிர்ப்புச் சக்தி அதற்குப் பணிந்து போவது போல (நோயைத் தடை இல்லாமல் உடலிலே எற்றுக் கொள்ளும் பாவனை) காணப்படுகிறது. இருந்தாலும் சிறிது நேரத்துக்கெல்லாம் உயிப்ப்புச் சக்தி நிமிர்ந்தெழுந்து தன்னைத் தாக்கியுள்ள செயற்கை நோய்ச்சக்தி (மருந்தை) யின் முதல் வேலைக்கு எதிரான வேலையைச் சற்று அதிகமான அளவிலும் செய்யத்துவங்குகிறது அல்லது மருந்தினால் ஏற்பட்ட மாறுதல்களை நீக்கக் கூடிய அதிகச் சக்தியை உண்டாக்கி பாதுகாக்கிறது.

1 comments:

  1. நிறைய விடயங்கள் தொடர்கிறேன் நண்பரே
    தமிழ் மணம் 1

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer