இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மனிதனின் உள்ளும் புறமும் உள்ள உறுப்புகள் வாழ்வதற்கும்,
கர்மங்களை நிகழ்த்தவும் உதவுகின்றன.
இவற்றினால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்று பட்டியல் இட்டு, எவற்றால் அதிக நன்மைகள் அடைந்தோம், எவற்றால் அதிக துன்பம் அடைந்தோம் என்று கணக்கிட்டு பாருங்கள்!
உங்கள் மனம் என்ன நினைக்கின்றது என்று பாருங்கள்!
சிந்தனைகள் பெருகட்டும்! வாழ்வு அர்த்தமுள்ளதாக மாற்றிட முனைய
ஓங்காரப் பிரணவ நாதனாம் கண நாதனைத் தொழுது, அருள் பெற்றிட முனைவோம் இன்னாளில்!

போகத்தாலும், அறிவாலும், கர்மத்தாலும், கல்வியாலும், நாம் அடைந்த இன்ப துன்பங்களையும் பட்டியலிடுங்கள்!
என்ன சாதித்திருக்கின்றோம் என்பதனையும், இவற்றால் இனி என்ன சாதிக்கப் போகின்றோமென்பதனையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
உங்களின் சாதனையின் வெற்றியில் உங்களுக்குத் தோள் கொடுத்த நற்பண்புகள் எவையெவை ?
உங்களின் தோல்வியில் முக்கிய பங்காற்றிய உங்களின் அணுகுமுறை, உங்களின் செயல்பாடுகள், போன்ற அனைத்தையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
சிந்தனை செய் மனமே!
உங்களின் வாழ்வு மாற்றிட, உங்களின் தோல்வியில் கற்ற பாடங்களை, வெற்றியாக்கிட, என்னென்ன செய்திட வேண்டுமென்பதனையும், சிந்தித்துப் பட்டியலிடுங்கள்!
வரும் ஆண்டில்,,
சதுர்த்தியில் சிறப்பாய் கொண்டாடிடும் நன்னாளில் பட்டியலிட்டு செயல்பாட்டில் கொண்டு வந்த விடயங்களின் வெற்றிப் பட்டியலையும், தோல்விப் பட்டியலையும்
ஒப்பிட்டுப் பாருங்கள்! ஒவ்வொரு மாற்றத்தையும் உள்ளும் புறமும் நிகழ்த்தத் தயாராகுங்கள்! வானம் வசப்படும்! உண்மையில் வசப்பட்டது போலத்தான் உணருவோம்!
- ௦ - - -
ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்!
நிர்மோஹத்வே நிஸ்ரலத்வம்
நிஸ்சலத்வே ஜீவன் முக்தி!
நல்லோர் உறவால் பற்றின்மை உண்டாகும். இதனால் மதிமயக்கம் தீரும்! மதி மயக்கம் நீங்கினால், நிரந்தர உண்மைகள் விளங்கும்! நிரந்தர உண்மைகள் விளங்கினால் அதுவே ஜீவன் முக்தி!

“ பார்த்து நடந்தால் பாதை தெரியும்!
பாதை தெரிந்தால் பயணம் தொடரும்!
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்!
கதவு திறந்தால் காட்சி தெரியும்!
காட்சி தெரிந்தால் கவலை தீரும்!
கவலை தீர்ந்தால் வாழலாம்”
நல்லாரைக் காண்பதும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே! நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று!
இன்பத்தில் இன்பமும், துன்பத்தில் துன்பமும் உங்களுள் அணுகாதிருக்க, இத்தகையோரின் உறவு, உங்களுக்கு உதவும்!
இத்தகைய மன நிலை உங்களுக்குள் இயற்கையாக ஊற்றெடுக்க வேண்டுமானால், உங்களின் உள்ளத்தே நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டும்!
இதற்கான முயற்சிகள் நாம் மேற்கொள்ளாதவரை மாற்றங்கள் இக வாழ்விலும் , புற வாழ்விலும் வாரா என்பதனை மனதினில் கொண்டு, நம் வாழ்வு நம் கையில் ;
இன்பத்தால் முகம் மலர்வதும், புகழ்ச்சியால் மலர்வதும், பாராட்டுதலால் மலர்வதும் , துன்பத்தால் வாடுவதும், பழி சொல்லினால் வருத்தமுறுவதும், பயந்து நடுங்குவதும், சோர்வும், எரிச்சலும், கோபமும் கொண்ட உள்ளமும் மாறிட,
எல்லாம் வல்ல கண நாதனை மன முருகி வழிபடுங்கள்!
வாழ்வின் அர்த்தத்தினை உணர்ந்து வாழ்வோம்!
பிறர் மகிழ்ந்து வாழ நமது செயல்கள் சிறக்கட்டும்!
நானிலத்தில் உள்ளோர் நலம் பல பெற நம்மால் முடிந்ததை செய்வோம்!
அன்பு பாராட்டுவோம்!
இறைவன் அருளால் நாம் மனிதனாக நடந்து கொள்வோமே!

----------------------------
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றுஅறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித்
தற்பரம் மேவுவார் சாதகர் ஆமே!
ஆன்மாக்களைப் பற்றி, அவற்றோடு பொருந்தியுள்ள ஆணவம், கன்மம், மாயை, மாமேயம், திரோதாயி ( முரண்படுதல், ஒத்துப்போகாத நிலை, மாறுபாடு, செயலற்ற நிலை ) இத்தகைய அழுக்குகளை அடைவதற்குக் காரணமான பந்த பாசங்களால் வரும் குற்றங்களை சிவதுரியம், சீவ துரியம், பரதுரியம் என்னும் மூன்றால் அடக்கி, அழித்து மேலான பரம்பொருளை சிந்தையாலும் பொருந்தி இருப்பவர்களே நல்வழிகாட்டிகள் ஆவார்கள்,
எனும் மூலரின் வழிகாட்டுதலுக்கேற்ப, நல்லோரை அடையாளம் காட்டிடவும் இந்த நன்னாளில் வேண்டுவோம்!
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுஊட்டித்
தானத்துள் இட்டு தனைஊட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே!
--------------------------------
அத்தன் அருளின் விளையாட்டு இடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனை
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கருமத்தில் இடும் தன்மையே!
பரம்பொருளானவன் ஐந்தொழிலை, இந்த சீவன் பற்றியிருக்கும் உடலில் தன் விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றான்! அறிவையும் அறியாமையையும் அறவே நீக்கி, மனதினைப் பற்றியுள்ள மன அழுக்குகளை நீக்கிப் புனிதமடையச் செய்து, ஐங்கருமத்தினை நிகழ்த்தும் சிவத்துடன் இந்த சீவன் சேர்ந்திட நல் வழி காட்டிடவும் இந்த நன்னாளில் கண நாதனிடம் வேண்டுவோம்!
நான்குவகை கணங்களுக்கும் அதிபதியானவன்!
ஐந்துகரத்தினன்;
ஐந்தொழிலினையும் புரிபவன்!
ஐவகைக் குற்றங்களையும் களைபவன்!
அறிவற்ற செயலினால் உண்டாகும் துன்பத்தினையும், அறிவுடன் செய்யும் செயலால் உண்டான இன்பத்தினையும் சம நிலைப்படுத்தி
உய்யும் வழிகாட்டிட, அவ்வைக்கு அளித்த பேறு
நமக்கும் கிடைத்திட மனமுருகிப் பிரார்த்திப்போம்!

பஞ்ச பூத மந்திரம்
ஆஷம் ஸாரம் வித்த மகிழம்
வாச்மயம் யத் விபூதி
யத் இப்பூ பங்காத் தங்காத்
குஷிமா தனுஷ கின்கரோ தனுஷ
திங்கறோ மேரு தந்தவா:-
யஸ்யாம் நித்யம் நயன சதகை
ரேகலஷ்யோ மகேந்திர
பதனே தாஷாம் பரினதீர சவுபாவ
லேசைச்த் வதீயை !
நமது உடலுக்கு பஞ்ச பூதங்களும் நன்முறையில் நன்மை செய்ய, உதவும் மந்திரம்.
தினம் 48 நாட்கள் - ஒரு முறை உச்சாடனம் செய்ய வேண்டும்.
ஒழுங்கு முறை கடை பிடிக்க வேண்டும்.
நேரத்தில் உணவு உன்ன வேண்டும்.
குறித்த காலத்தில், உறக்கம் கொள்ள வேண்டும்.
தினம் தியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பேச்சில், உஷனமான வார்த்தைகள் பிரயோகம் செய்தல் கூடாது. கோபம் அறவே நீக்க வேண்டும்.
சிறு குழந்தை முதல் அனைவரிடமும், அன்புடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
திட்டமிட்ட வாழ்க்கை முறை மேற்கொள்ள வேண்டும்.
சாத்வீகம் கடைபிடிக்கவேண்டும். தீய வார்த்தைகள், வஞ்சனை செய்தல், மனதில் வைத்து பிறருக்கு வஞ்சகம் செய்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசம் செய்தல், மது, மாது, சூது போன்றவைகளை விளக்குதல் வேண்டும்.
எளிய, உடலுக்கு ஏற்புடைய உணவினை ஆகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை இறை வணக்கம் செய்ய வேண்டும்.
உடல் தூய்மை, மனத் தூய்மை, புறத் தூய்மை இருக்க வேண்டும்.
இறை வணக்கம் செய்யும் இடம், மனதிற்கு அமைதி கொடுக்கும் அளவிற்கு அமைதியாக இருக்க வேண்டும்., ஊது பத்திகள், சாம்பிராணி பத்திகள், நெய் விளக்கு எரிய வேண்டும் .
மனதிற்கு ரம்மியமான சூழலில், இறை வணக்கம் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்.
எதிலும் நிதான போக்கினை கைகொள்ள வேண்டும்.
இவையெல்லாம் கடை பிடிக்கும் போது தான், இம் மந்திர உச்சாடனம் மிகுந்த பலன் அளிக்கும்.
இதனை உணர முடியும். வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அன்பே கடவுள். உள்ளத்தின் கதவுகள் கண்கள். கண்களில் அன்பு வெளிப்படும் போது அனைத்திலும் பரிபூரணமான வெற்றி கிடைக்கும்.ஆதரவு கிட்டும். உதவிகள் கைகூடி, வெற்றி கிட்டும்.
மனதினில் நிம்மதி கிட்டும்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
நன்றி அய்யா!
Delete