கண்ணொளி வழங்கும் வெள்ளைப் பொன்னாங்கண்ணி Alternanthera sessilis (White )
தமிழகத்தில் பரவலாக காணப்படும் மூலிகை பொன்னாங்கண்ணி. இதில் மஞ்சள் பூ கொண்ட பொன்னாங்கண்ணி மஞ்சள் பொன்னாங்கண்ணி எனவும் வெள்ளைப் பூ கொண்ட பொன்னாங்கண்ணி வெள்ளைப் பொன்னாங்கண்ணி எனவும் அறியப்படுகிறது. மஞ்சள் பொன்னாங்கண்ணி சந்தையில் விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளைப் பொன்னாங்கண்ணி அவ்வாறு சந்தையில் விற்கப்படுவதில்லை. இந்த வெள்ளைப் பொன்னாங்கண்ணி பொதுவாக மழைகாலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களிலும் பாறைச்சல்லிகள் கொட்டிக்கிடக்கும் இரயில் தண்டவாளப் புறங்களிலும் மிகுதியாக வளர்ந்து காணப்படுகிறது. ஆனால் மக்களால் அவ்வளவாக விரும்பி உண்ணப்படுவதில்லை.
இக்கீரை குளிர்ச்சித் தன்மைகொண்டது அதனால் கண்ணிற்கு அதிக குளிர்ச்சி ஊட்ட வல்லது. சிலவகை கண் குருட்டையும் இக்கீரை நீக்கவல்லது. இந்தக் கீரையின் இலைகளைப் பறித்து பூக்களை நீக்கி இயல்பாக மற்ற கீரைகளைப் போல் சமைத்து உண்ணலாம்.
நான் திராடகம் எனப்படும் கண்ணாடியில் உருவத்தை உற்றுப்பார்க்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். வள்ளாரும் இதைச் செய்துள்ளார். இப்பயிற்சியினால் திடீர் என்று ஒரு நாள் என் கண்ணில் ஒளி வாங்கும் தன்மை குன்றிவிட்டது. அதனால் எழுத்துகள், இலைகள் தனித் தனியே காணமுடியாமல் கொத்துக் கொத்தாகவே காட்சியளித்தன. அதனால் கண்ணாடியை உற்றுப் பார்க்கும் பயிற்சியை விட்டொழித்தேன். ஆனாலும் கண்பார்வை மங்கலாகத் தான் தெரிந்தது. இதாவது, இரட்டைக்காட்சியாகவே தெரிந்தது. பரம்பரை சித்தமருத்துவரிடம் கண்ணாடி பார்த்ததால் என் பார்வை பாதிப்படைந்ததைத் தெரிவித்தேன் அலைபேசியில். அதற்கு அவர் ஏன் கண்ணாடியை உற்று பார்த்தீர்கள். அவ்வாறு செய்வதனால் கண்ணில் காற்றின் நிலை மாறிவிடும் அதனால் காட்சியில் மெல்லிய கரும்படலம் தோன்றும் பார்வை மங்கும் என்றார். வாருங்கள் நான் சொட்டு மருந்து தருகிறேன். பார்வை சரியாகும் என்றார். ஆனால் நான் அந்த மருத்துவரை சந்தித்து சொட்டு மருந்து வாங்கவில்லை.
சென்னையில் பெய்த அடைமழையால் வேறு எந்த கீரையும் கிட்டாது போகவே இந்தக் வெள்ளைப் பொன்னாங்கண்ணிக் கீரையை ஒரு கட்டு உரூவா 15/- என சந்தையில் விற்றனர். வெள்ளத்தில் சாக்கடை கலந்ததால் கீரையில் அப்படியே சாக்கடை நாற்றம் படிந்திருந்தது. நான் வாங்காமல் வந்துவிட்டேன். ஆனால் 10 நாள் கழித்து எமது மனையிலேயே இக்கீரை வளர்ந்து இருந்தது. அதைப் பறித்து இருநாள்கள் சமைத்து காலையும் நண்பகலும் உண்டேன். என்ன வியப்பு என் கண்ணின் ஒளி வாங்கும் திறன் கூடியது கருமப்படலம் மறைந்து காட்சிகள் நன்றாகத் தெரிந்தன. மீண்டும் மூன்றாவது முறையாக இக்கீரையை நேற்றும் சமைத்து உண்டேன். காட்சி முன்போலவே தெளிவாக அருமையாகத் தெரியத்தொடங்கியது. மங்கல் பார்வை உள்ளவராயின் நீங்களும் இக்கீரையை உண்டு பயனடையலாமே.

ஆக்கம்:
|
அனுபவப் பகிர்வு மிகவும் பயன் தருவதாக அமைந்து விட்டது
ReplyDelete