ஆன்மீகமும் ஜோதிடமும் - 4 - கோயில்கள்
எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் மூலஸ்தானம் என்பது சிர(தலை)ப் பதும ஸ்தானம்.
அதற்கு அடுத்த இடமாகிய அந்தராளம் என்பது முகம்.
அதையடுத்து உள்ள அர்த்த மண்டபம் - கண்ட ஸ்தானம் (கழுத்து).
அதற்கு அடுத்த மகா மண்டபம் - மார்பும் தோளும் கூடிய ஸ்தானம்.
இவையெல்லாவற்றையும் சேர்த்து, பிராகாரம் எனப்படும்
பகுதி, துடைகளும் முழங்கால்களுமாகும். கோபுரம் என்பது பாதம்.
இவ்விதமாக, அடியார்களின் சரீரகாரமாக அமைக்கப்பட்டவையே ஆலயங்கள்.
பகவான் அந்தச் சரீரங்களில் வசிப்பது போலவே, ஆலயத்தில் சந்நிதி கொண்டு, ஆராதனைகளை அதாவது வழிபாடுகளை உவகையுடன் ஏற்று அருள்புரிகிறார்.
ஆலய நிர்மாணம், அடியார்களின் சயனத் திருக்கோலத்தைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது . கோயில்களில் உள்ள பகுதிகளை பாதம், முழந்தாள், தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கழுத்து, வாய், கண்கள், மூக்கு, காது, புருவ மையம் என , நம் மனத்தில் பதிய வைக்கிறார்.
அதிலும், த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தைச் சொல்லும்போது, த்வஜம் என்றால் தர்மம் என்று பொருள் சொல்கிறார்.
தேகத்தில் வீணா தண்டம்போல், மூலாதாரம் முதல் பிரம்மரந்திரம் வரைக்கும் மேல் நோக்கிச் செல்லுகின்ற பிரம்ம நாடியாக இதனைக் கூறுவார்கள், யோகீந்திரர்கள்.
உடம்பை த்வஜஸ்தம்பம்போல நேராக நிறுத்தி, இடகலை, பிங்கலை எனும் இரு நாடிகளின் வழியே போய்த் திரும்பும் பிராண வாயுவை நடு நாடியில் நிறுத்தி, சிறிதும் அசையாமல் தியானித்தால், பிராணவாயு நிற்கும்;
பிராணவாயு நின்றால், மனம் நிற்கும்;
மனம் நின்றால், ஐம்பொறிகளும் நிற்கும்;
அவை நின்றால், விஷய சுகங்களில் ஆவல் அடங்கும்;
அது அடங்கினால், உலகப் பரபரப்பு அடங்கும்;
அப்படி அடங்கினால், ஆத்ம சாஷாத்காரமும் அதற்கு மேல் பிரம்மானந்தமும் தோன்றும்.
இதை உணர்த்துவதற்காகவே கோயில்களில் மூலஸ்தானத்துக்கு நேராக, கொடிமரத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள் .
இறைவனுக்கு அர்ச்சிக்கும் மலர்களை, 'அஷ்ட புஷ்பங்கள்’ என விசேஷமாகச் சொல்வார்கள்.
புன்னை, எருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என எட்டு புஷ்பங்கள் மிகவும் விசேஷமானவை.
இவை எல்லாமே வெளி பூஜைக்குப் பயன்படுபவை.
ஞானிகள் உள்முகமாகச் செய்கிற, அவர்களிடமிருந்து கற்றறிந்து நாம் உள்முகமாகச் செய்ய வேண்டிய பூஜைக்கும் எட்டு விதமான பூக்கள் உண்டு.
அவை: கொல்லாமை, வாய்மை, ஐம்புலன் அடக்கல், பொறை, அருள், அறிவு, தவம், அன்பு எனும் அஷ்ட புஷ்பங்கள் ஆகும்.
நன்றி: சக்தி விகடன்.
நிறைய விடயங்கள் அறியத் தருகின்றீர்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 1
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!
ReplyDelete