Breaking News
Loading...
Sunday, January 3, 2016

பொடி வகைகள்.!!!

Sunday, January 03, 2016
பொடி வகைகள்.!!!
நமது தினசரி சமையலில் பல வகைப் பொடிகளை உபயோகிக்கிறோம். சாம்பார் பொடி, ரசப்பொடி, குழம்புப்பொடி, கூட்டுப்பொடி, மசாலா பொடி தவிர South Indian Fast Food என்று சொல்லத்தகுந்த சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் படியான பொடி வகைகளையும் நம் அன்றாட சமையலில் flavouring க்காக பயன் படுத்தக்கூடிய பொடி வகைகளையும் இங்கே பார்ப்போம்.
மேலே சொன்னவைகள் தவிர மருத்துவ குணம் கொண்ட சில பொடி வகைகளையும் சமையலில் அவற்றை உபயோகிக்கும் முறையையும் பார்க்கலாம். எல்லா பொடிகளின் உபயோகத்தையும் அந்தந்த பொடிகளின் கீழேயே சுருக்கமாகக் கொடுக்கப் பார்க்கிறேன்.
இங்கே தரப் படும் recipes எல்லாம் நாமே வீட்டில் செய்யக்கூடியவைகள். கூடுமானவரை நான் எங்கள் வீட்டில் செய்யும் முறைகளையும் படித்த கேள்விப்பட்ட பொடி வகைகளையும் சொல்கிறேன். தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் சாம்பார் பொடியில் ஆரம்பிக்கலாம்.
“சாம்பார் பொடியா? நான் ********** brand சாம்பார் பொடியைத் தவிர வேறு எதையும் உபயோகிப்பதில்லை... அதில அப்படியே என் பாட்டி கை மணம்” என்பவர்கள் கொஞ்சம் நேரம் கழித்து வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இது நானே சொந்தக்காலில் நிற்கணும் என்பவர்களுக்கு மட்டுமே...
சாம்பார் பொடி:
முதல் முறை :
மிளகாய் – ¼ kg (250gm)
தனியா(கொத்தமல்லி விதை) - ¼ kg ( 250gms)
உளுத்தம்பருப்பு – 50 gms
கடலைப்பருப்பு – 200 gms
துவரம்பருப்பு – 200 gms
மிளகு –50 gms
மஞ்சள் – 50 gms
வெந்தயம் – 25gms
மேலே சொன்ன பொருட்களை அந்த அளவுப்படி வாங்கி வெயிலில் ரெண்டு நாட்கள் வைத்து விரளி மஞ்சளை மட்டும் அம்மியில் ஒன்றிரண்டாக நசுக்கி மிஷினில் தந்து அரைத்து வைக்கவும்.
மிளகாய், தனியா எல்லாம் ஓரளவு கடையில் வாங்கும் பாக்கெட்டில் அளவு பார்த்து வாங்கிவிடலாம். ஆனால் இந்த பருப்புகள் 50 gm, 200 gm என்றெல்லாம் இருக்கே எப்படி அதை எடுப்பது என்று கவலையா? அரை கிலோ பாக்கெட் வாங்கி அதை ஐந்து பங்காகப் பிரித்து நூறு gm எந்த கப்பில் வருகிறதோ அதை பேஸ் ஆக வைத்து அளந்துகொள்ளுங்கள். (கடையில் மட்டும் சரியான அளவில்தான் பாக் செய்கிறார்கள் என்று என்ன நிச்சயம்?) இல்லாவிட்டால் ஒரு kitchen scale வாங்கி வைப்பது ரொம்ப உத்தமம். மிளகாய் மட்டும் அவரவர் வீட்டு கார ஸ்டாண்டர்ட் பொறுத்து மாற்றிக்கொள்ளலாம். இப்படி பிரெஷாக அரைத்து வைத்தால் நாம் செய்யும் சாம்பார் மணக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக பல குடும்பங்கள் ரெண்டு அல்லது மூன்று பேரைக் கொண்ட சிறிய குடும்பமாகவே உள்ளதால் மேலே சொன்ன அளவுப்படி அரைப்பது நிறைய நாள் வரும். அப்படி இருந்தால் அளவை அப்படியே halfen (பாதியாக்கி) செய்து அரைக்கவும். அல்லது அரைத்து ரெண்டு மூன்று குடும்பங்கள் ஷேர் செய்து கொள்ளலாம். எதுவும் சரிப்படாது என்றால் கீழே உள்ள conversion டேபிள் பார்த்து உங்கள் தேவைக்கேற்ப அளவை proportionate ஆக எடுத்து வீட்டிலேயே கூட மிக்சியில் அரைத்துவிடலாம்.
1 leveled teaspoon = 5 gms
1 heaped teaspoon = 7 gms
1 leveled tablespoon = 10 gms
1 heaped tablespoon = 15gms
4 tablespoon = ¼ cup
8 tbsp = ½ cup
16 tbsp = one cup
12 tbsp = ¾ cup
மேலே சொன்னது பொதுவான அளவு. நாம் அளக்கும் பொருளுக்கு ஏற்ப எடை மாறும். உதாரணமாக ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு 10 gm என்றால் ஒரூ டேபிள்ஸ்பூன் உப்பு 15 gm வந்துவிடும். அதனால் தோராயமாக அளப்பதில் தவறில்லை.
ரெண்டாவது முறை:
மேலே சொன்ன முறையைத் தவிர இன்னொரு முறையும் உண்டு. அது:
தனியா – 4 cups;
மிளகாய் – 1 cup
கடலைப்பருப்பு –1 cup
துவரம்பருப்பு – ½ cup
மிளகு –1/4 cup
வெந்தயம் – ¼ cup
விரளி மஞ்சள் – as needed or 100 gms
முதலில் சொன்ன வகையில் உளுத்தம்பருப்பு உண்டு. அடுத்ததில் இல்லை. உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் சாம்பார் கொஞ்சம் கெட்டியாக வரும். மேலே சொன்னமாதிரி எல்லாவற்றையும் வெயிலில் ரெண்டு நாள் காய வைத்து அரைக்கவும். இப்படி செய்வது shelf life ஐ அதிகரிப்பதோடு, பூச்சி வராமல் காக்கும்.
மூன்றாவது முறை:
இது மெனு ராணி செல்லம் என்ற புகழ் பெற்ற சமையல் கலை வல்லுநர் சொல்லியிருக்கும் அளவு. இதுவும் கண்டிப்பாக நன்றாக வரக்கூடிய அளவு. எடுப்பதும் சுலபம்.
தனியா – 6 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
வெந்தயம் – ஒரு பிடி
விரளி மஞ்சள் – ரெண்டே ரெண்டு
மிளகு – கால் கப்
சீரகம் – அரை கப்
மேலே சொன்னவைகளை வெயிலில் உலர்த்தியோ, அல்லது வறட்டு வாணலியில் தனித்தனியாக கை பொறுக்கும் சூட்டில் வறுத்தோ அரைக்கலாம். விரும்பினால் வீட்டில் காய்ந்த கறிவேப்பிலை இருந்தால் ஒரு பிடி சேர்த்து அரைத்து வைக்கலாம். இது பொடிக்கு ஒரு மணத்தைக் கொடுக்கும்.
எங்கள் வீட்டில் செய்யும் முறையையும் இங்கே சொல்லுகிறேன்.
குழம்பு பொடி:
அரை கிலோ தனியா என்றால் அரை கிலோ வர மிளகாய் எடுக்கணும்.
இந்தளவுக்கு ஒன்றரை கப் துவரம்பருப்பு, ஒரு கப் கடலைப்பருப்பு, ஒரு கப் மிளகு, அரை கப் வெந்தயம், ஒரு பிடி சீரகம், நூறு கிராம் மஞ்சள் எடுத்து வெயிலில் உலர்த்தி அரைக்கவும்.
வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக பிரெஷ் ஆக அரைக்க விரும்பினால் ஒரு குழிக்கரண்டியை வைத்து எல்லா சாமான்களையும் அளந்து கொள்ளலாம். அப்படி எடுப்பதாக இருந்தால்
ரெண்டரை கரண்டி தனியா,
ஒன்றரை கரண்டி துவரம்பருப்பு
ஒரு கரண்டி கடலைப்பருப்பு
ஒரு கரண்டி மிளகு
அரை கரண்டி வெந்தயம்,
ஒரு ஸ்பூன் சீரகம்
காரத்துக்குத் தேவையான மிளகாய் எடுத்து வாணலியில் தனித்தனியாக லேசாக வறுத்து அல்லது வெயிலில் வைத்து எடுத்து மிக்சியில் பொடிக்கவும். தேவையான மஞ்சள் தூள் கலந்து வைக்கவும். இந்த முறையில் எடுப்பது சுலபமாய் இருக்கும்.
இந்தப் பொடியை உபயோகித்து பருப்பு போட்ட சாம்பாரும் செய்யலாம், புளிக்குழம்பும் செய்யலாம்.
மேலே சொன்னவைகள் சாதாரண குழம்பு பொடி வகைகள். குழம்பு செய்யும்போது பிரெஷ் ஆக வறுத்து அரைத்து செய்யும் பொடிகள் சில உண்டு. அந்தப் பொடிகளையும் அதை வைத்து செய்யும் குழம்பு வகைகளையும் பார்க்கலாம்.
மணத்தக்காளி வத்தல் குழம்பு பொடி:
வற்றல்களிலேயே சிறந்த வாசனை உள்ளது மணத்தக்காளி வற்றல் என்று சொல்லலாம். இது வாய்ப்புண் வயிற்றுப்புண்ணை ஆற்ற வல்லது. இந்த வற்றல் வறுத்துப் போட்டு மேலே சொன்ன ஏதாவது ஒரு குழம்பு பொடியை use பண்ணி குழம்பு செய்தால் அது பரவாயில்லை ஓகே தான் என்ற பாராட்டை வாங்கும். ஆனால் இந்த முறையில் குழம்பு பொடி அரைத்து வற்றல் குழம்பு செய்தாலோ நீங்கள் பாராட்டு மழையில் நனைவது நிச்சயம்.
அப்படியென்ன ஸ்பெஷல் இதில் என்றால் அரைக்கும் பொடியில் வற்றலையும் வறுத்து அரைத்து சேர்ப்பதுதான் இதன் speciality.
கடலைப்பருப்பு – 25 gm
துவரம்பருப்பு – 50 gm
முழு உளுத்தம்பருப்பு – 50 gm
தனியா – 15 gm
மேலே சொன்ன இந்த நான்கையும் வறட்டு வாணலியில் தனித்தனியாக நாள் பொன்னிறத்தில் வறுத்து வைக்கவும். இவைகள் ஆறுவதற்குள் அடுப்பை அனைத்து விட்டு வாணலி சூடாக இருக்கும்போதே அதில் மிளகு, சீரகம், வெந்தயம் மூன்றும் தலா ரெண்டு டீஸ்பூன் போட்டு காரத்துக்கு வேண்டிய மிளகாய் வற்றலையும் போட்டு பிரட்டவும். (இப்படி செய்வது spices அதிகம் வறுபடாமல், அதே சமயம் நன்கு பொடியாக உதவும்.)
இப்படி பிரட்டியதை வறுத்த பருப்புடன் சேர்த்து ஆற வைக்கவும். இனி அடுப்பை மூட்டி வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் 50 gm மணத்தக்காளி வற்றலை போட்டு வற்றல் பொன்னிறத்தில் பொரியும்படி காந்தாமல் வறுக்கவும். நல்ல மணத்துடன் வறுபட்ட வற்றலை பருப்புடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். மணத்தக்காளி வற்றல் குழம்பு பொடி ரெடி.
குறிப்பு: இது மணத்தக்காளி வற்றல் குழம்புக்கு மட்டுமே உபயோகிக்கவும். சுண்டக்காய் அல்லது வேறு வற்றலுக்கு எடுபடாது.
மணத்தக்காளி வற்றலை வாங்கும்போது உப்பு சேர்க்காத வற்றலாய் பார்த்து வாங்குவது நலம்.
குழம்பு செய்யும் விதம்:
புளியை கரைத்துக்கொண்டு, உப்பு சேர்த்து இந்த குழம்பு பொடியை தாராளமாக போடவும். பருப்பெல்லாம் அரைக்கும்போதே சேர்த்துவிட்டதால் மீண்டும் தாளிப்பு தேவையில்லை. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், ஒரு வற்றல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கரைத்த புளியையும் சேர்த்து கொதித்து சுண்டியதும் இறக்கவும். மேலே மீண்டும் ஒரு ஸ்பூன் மணத்தக்காளி வற்றலை எண்ணையில் பொறித்துப் போட குழம்பு வாசனை ஊரைத் தூக்கும். குழம்பு சீக்கிரத்தில் ரெடி ஆகும் என்பதும் இதன் advantage.
சுண்டைக்காய் வற்றலை உபயோகித்து செய்ய வேண்டும் என்றால் முதலில் சொன்ன பொடிவகைகளில் ஒன்றை use பண்ணலாம்.
வெந்தயக் குழம்பு பொடி:
வற்றல் போடாமல் வேறு காய்கள் போட்டு செய்யும் குழம்புக்கு வெந்தயக் குழம்பு என்று பெயர். இதற்கு சாம்பார் போல பருப்பெல்லாம் வேண்டாம். காய்கள் வெந்துவிட்டால் போதும், குழம்பு ரெடி. பொடி செய்யும் விதத்தைப் பார்க்கலாம்.
கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தனியா 4 டேபிள்ஸ்பூன்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் 5 (அல்லது காரத்துக்கு வேண்டியது)
வெந்தயம் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு பிடி
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
எல்லாவற்றையும் நல்லெண்ணெய் விட்டு தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்துக்கொண்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பிலை மைக்ரோவேவ் இருந்தால் அதில் காய வைத்து போட பொடியின் நிறம் மஞ்சளும் பச்சையுமாக வரும்.
(மேலே சொன்ன அளவில் செய்து வைத்துக்கொண்டால் நாலு பேர் உள்ள குடும்பமானால் ரெண்டு வாரத்துக்கு தாராளமாக வரும்)
வெந்தயக்குழம்பு செய்யும் விதம்:
பூசணிக்காய், சௌசௌ, போன்ற காய்களானால் குழம்பில் போட்டால் வெந்துவிடும். கத்தரிக்காய் வெண்டக்காய் முருங்கைக்காய் போன்றவற்றை எண்ணையில் வதக்கி சேர்க்கணும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு என்றால் குக்கரில் வேக வைத்து சேர்க்கணும். காய்கள் இல்லாமல் ஊறவைத்து வேகவைத்த கருப்பு கொத்துக்கடலை அல்லது நிலக்கடலை சேர்த்து குழம்பு செய்தாலும் இந்த பொடி போடலாம்.
நல்லெண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, தாளித்து (வதக்க வேண்டிய காய்களை போடுவதானால் இப்போது போட்டு வதக்கவும்) புளிக்கரைசலை விட்டு (வெந்த காய்கள் என்றால் இங்கே சேர்க்கவும்) பொடியும் சற்றே அதிகமாக போட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து நன்றாக சுண்டும் வரை வைத்து (அல்லது ஒரு ஸ்பூன் cornflour கரைத்து விடலாம்) இறக்கவும். மேலே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் பச்சையாக சேர்ப்பது மணத்தைக் கூட்டும்.
டிப்ஸ் : இந்தப் பொடியை போட்டு குழம்புதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த கீரையை பருப்புடன் மசித்தாலும் இந்த பொடி போட்டால் அதன் சுவை விதயாசமாக இருக்கும். தேங்காய் பால் அல்லது தேங்காய் சேர்ப்பது அவசியம்.
இட்லி தோசையுடன் சாப்பிடும் சாம்பார் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளும் தால் செய்ய உதவும் சாம்பார் பொடி ஒன்று உண்டு.
சாம்பார் பொடி:
கடலைபருப்பு 2 கப்
துவரம்பருப்பு 1 கப்
உளுதம்பருப்பு 1 கப்
தனியா 3 கப்
மிளகாய் அவரவர் காரத்துக்கு ஏற்ப ( கடலைப்பருப்பு எடுக்கும் அளவு மிளகாயும் எடுக்கலாம்)
விரளி மஞ்சள் 10
எல்லாவற்றையும் வெயிலில் காய வைத்து அரைக்கவும். வீட்டிலேயே செய்வதானால் ஒரு கப் என்பதை ஒரு ஸ்பூன், ரெண்டு கப் என்பதை ரெண்டு ஸ்பூன் என்ற அளவில் கொள்ளவும்.
குறிப்பு: சாம்பார் செய்து முடித்ததும் கொஞ்சம் மசாலா தூள் சேர்க்கலாம். தால் என்றால் இந்த பொடியே போதும்.
அடுத்து ரசப்பொடிசெய்வதை பார்க்கலாம்.
முதல் வகை:
தனியா – ¼ kg
மிளகாய் – ¼ kg
உளுத்தம்பருப்பு – 25 gm
கடலைப்பருப்பு – 200 gm
துவரம்பருப்பு – 50 gm
மிளகு – 50 gm
சீரகம் – 50 gm
மஞ்சள் – 50 gm
இவற்றை வெயிலில் வைத்து அல்லது வாணலியில் தனித்தனியாக வறுத்து அரைக்கவும்.
மெனு ராணி செல்லத்தின் ரசப்பொடி அளவு :
தனியா – 6 கப்
துவரம்பருப்பு – 1 கப்
மிளகு – அரை கப்
சீரகம் - அரை கப்
மிளகாய் - அரை கிலோ
வெயிலில் வைத்து அல்லது வெறும் சட்டியில் வாசனை வர வறுத்து அரைக்கவும்.
அவர்கள் சொன்ன ரசத்துக்கு மேல் பொடி:
தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் எடுத்து வெறும் வாணலியில் வாசனை வர வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டால் ரசம் நுரைத்து இறக்கும்போது மேலே ஒரூ ஸ்பூன் இந்தப் பொடியை தூவ ரசம் மணக்கும்.
(மேல் பொடி என்பது நாம் செய்யும் ரசத்தில் உபயோகிக்கும் பொடி கொஞ்ச நாள் ஆனால் அத்தனை மணத்துடன் இருக்காது. அப்போது இப்படி மேல் பொடியை மட்டும் அப்பப்போ செய்து சேர்த்தால் புது ரசப்பொடியில் செய்தது போலவே இருக்கும்)
எங்கள் வீட்டில் செய்யும் ரசப்பொடி இது. மிக்சியிலேயே அப்பப்போ பிரெஷ் ஆக அரைக்கலாம்.
தனியா – 3 கப்
துவரம்பருப்பு – 1 கப்
மிளகு – முக்கால் கப்
சீரகம் – அரை கப்
மிளகாய் – காரத்துக்கு வேண்டிய அளவு
எல்லாவற்றையும் லேசாக சுட வைத்து அரைக்கவேண்டும். அரைப்பதை கொஞ்சம் கொரகொரவென்று அரைக்கணும். இங்கும் கப்புக்கு பதில் கரண்டியில் எடுத்தால் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை பிரெஷ் பொடி கிடைக்கும்.
இன்னொரு முறையிலும் ரசப்பொடி வீட்டில் அரைப்பதுண்டு. அது:
மிளகு ஒரு கப்
துவரம்பருப்பு ரெண்டு கப்
தனியா மூணு கப்
ஒரு டீஸ்பூன் வெந்தயம்
ரெண்டு டீஸ்பூன் கடுகு
தேவையான விரளி மஞ்சள்
காரத்துக்கு வேண்டிய அளவு மிளகாய்
எல்லாவற்றையும் வெயிலில் வைத்து மிஷினில் தந்து ரவை போல அரைக்க வேண்டும்.
(டிப்ஸ்: குழம்பு பொடி நைசாக இருந்தால் தான் குழம்பு திக்காக இருக்கும். ரசப்பொடி கொரகொரப்பாக இருந்தால்தான் தெளிவாக இருக்கும். அரைக்கும்போது கடுகு கொஞ்சம் சேர்த்தால் ரசம் தெளிவாக வரும். )
இது இன்னொரு வகை:
வழக்கமான ரசத்தை விட சுவையாக இருக்கும்படி செய்யவேண்டுமானால் அதற்கும் ஒரு பொடி உள்ளது. அது:
கடலைப்பருப்பு – 50 gm
துவரம்பருப்பு – 300 gm
தனியா – 350 gm
மிளகு – 50 gm
சீரகம் – 50 gm
மஞ்சள் தூள் தேவையான அளவு.
இந்த பொடியை உபயோகித்து ரசம் செய்யும் விதம்:
புளித்தண்ணீர் கொதித்ததும் பருப்பு வெந்த நீரை மட்டும் சேர்த்து தேவையான பொடியையும் போட்டு நுரைக்க விட்டு இறக்கி கடுகு தாளிக்க வேண்டும். பொடியில் துவரம்பருப்பு அளவு அதிகம் உள்ளதால் பருப்பு போட வேண்டிய அவசியம் இல்லை.
இனி நான் சொல்லப்போகும் ரசம் எல்லாம் அடிக்கடி செய்யாதது. இந்தப் பொடிகளை வீட்டிலேயே செய்துவிடலாம். அதிக பட்சம் ஒரு வாரம் வரை ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒரு வாரத்துக்கு தேவையான பொடியை செய்து வைத்துக்கொண்டால் தினம் ஒரு ரசம் செய்து சமாளிக்கலாம்.
பொறித்த ரசம்:
ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு
ரெண்டு ஸ்பூன் துவரம்பருப்பு
ஒரு ஸ்பூன் மிளகு
ஒரு மிளகாய்
பெருங்காயம்
மேலே சொன்ன எல்லாவற்றையும் நெய்யில் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். (உளுந்து சேர்ப்பது ஒரு வாசனை மற்றும் அடர்த்திக்கு, விரும்பாவிட்டால் விட்டுவிடலாம்)
பொறித்த ரசம் செய்யும் விதம்:
இது செய்ய புளி தேவையில்லை. பருப்புத் தெளிவு நீர் போதும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பொடியும் போட்டு கொதித்ததும் விளாவி நுரைக்க விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளித்து ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும். தக்காளி சேர்ப்பதானால் முதலிலேயே தக்காளி நறுக்கிப் போடலாம்.
இது நோயாளிகள், விரதம் முடித்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், பிரசவித்தவர்கள் என்று எல்லோரும் சாப்பிடக்கூடியது. பொடி தேவைப்படும்போது செய்து கொள்ளலாம். ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
மைசூர் ரசம்:
இதுவும் ஒரு இன்ஸ்டன்ட் பொடி தான். செய்து வைத்துக்கொண்டால் ஒரு வாரத்துக்குள் use பண்ணிடவேண்டும்.
ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான மிளகாய், ஒரு துண்டு கொப்பரை இதுதான் வேண்டிய சாமான்கள்.
நெய்யில் சீரகம் தவிர எல்லாவற்றையும் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே சீரகத்தை வறுத்து எடுக்கவும். பொடியாக்கி வைத்தால் மைசூர் ரசம் செய்யலாம். இது நாலு adults க்கான அளவு.
மைசூர் ரசம் செய்யும் விதம்:
புளியைக் கரைத்துக்கொண்டு உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து கொதித்ததும் இந்த பொடியையும் வெந்த துவரம்பருப்பையும் சேர்த்து நுரைத்ததும் இறக்கி கடுகு தாளிக்கவும். தக்காளி சேர்ப்பது அவரவர் விருப்பம்.
கொப்பரை இல்லாவிட்டால் முற்றிய தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன் வறுத்து சேர்க்கலாம்.
மிளகு சீரகப்பொடி :
இதென்ன அதிசயம்? ரெண்டுமே ரெடிமேட்ஆக கடையில் கிடைக்கிறதே என்கிறீர்களா? வீட்டில் செய்து வைத்துக்கொண்டால் அதை வைத்து நிறைய சமாளிக்கலாமே?
மிளகு சீரகம் தலா ரெண்டு ஸ்பூன் எடுத்து நைசாக அரைக்கவும். அவ்வளவுதான், ரொம்ப சிம்பிள்.
ரசம் செய்யும் விதம்:
புளியை (கரைக்கக் கூட வேண்டாம், அப்படியே உருட்டி போடவும்) நீரில் இட்டு நன்றாக கொதிக்க விடவும். கொதிக்கும்போது உப்பு, பெருங்காயம் மிளகு சீரகப்பொடி ( நாம் செய்த அளவில் பாதி போதும் நாலு பேர் சாப்பிட) போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். ஒரு பத்து நிமிடம் மூடி வைத்துவிட்டு கரண்டி அல்லது மத்து கொண்டு புளியை அப்படியே மசித்து மொத்தமாக வடிகட்டவும். வடிகட்டியதை மீண்டும் கொதிக்கவிட்டு, கொதித்ததும் விளாவி நுரைத்ததும் இறக்கி நெய்யில் கடுகு, ரெண்டு மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சோம்பேறி ரசம் இது என்றாலும் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வரும்.
மோர் ரசப்பொடி:
ஒரு வாணலியில் எண்ணெய் நெய் எதுவுமின்றி, ஒரு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் வெந்தயம், ஒரு வர மிளகாய், ஒரு துண்டு பெருங்காயம் நல்ல கிறிஸ்ப்பாக வறுத்து பொடித்து வையுங்கள்.
சில சமயம் நமக்கு சமைக்க நேரம் இருக்காது, நிறைய விருந்து சாப்பிட்டு வயிறு சரியில்லாமல் இருக்கும், அப்படிப்பட்ட சமயங்களில் இந்த ரசம் கை கொடுக்கும். ஒரு கப் நீரில் உப்பு, மஞ்சள் தூள், போட்டு இந்த பொடியையும் போட்டு நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி வைத்து ஒரு கப் திக்கான மோரை கலக்கவும். மறுபடி அடுப்பில் ஏற்ற வேண்டாம். ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை நெய்யில் தாளித்து கொட்டவும்.
எனக்குத் தெரிந்த ரசப் பொடிகளைச் சொல்லிவிட்டேன். எந்த பொடியாயிருந்தாலும் அது வீட்டில் செய்ததோ, கடையில் வாங்கியதோ நாம் செய்யும் விதத்தில் தான் உள்ளது. அதனால் step by step எப்படி செய்தால் ரசம் ரஸமாய் இருக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கே பகர்கிறேன்.
குழம்பு என்றால் கடினமான வினாத்தாள் கிடைக்கப்பெற்ற மாணவன் மனது போல குழம்பி இருக்கணும். ரசம் என்றால் வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு விடை தெரிந்து அதை எழுதிவிட்டும் வந்த மாணவன் மனதைப் போல தெளிவா இருக்கணும்.
முதலில் புளியைக் கரைத்து புளி வாசனை போக கொதிக்க விடனும்.
புளி கொதித்த பின் ரசப்பொடி சேர்த்து அந்த வாசனையும் போகும்வரை கொதிக்கனும்.
அடுத்து உப்பு, பெருங்காயம் சேர்க்கணும். அதுவும் கொதித்த பின்னரே தக்காளி சேர்ப்பதாய் இருந்தால் சேர்க்கணும். தக்காளியுடனேயே மேல்பொடியாக வெறும் தனியாத்தூள், மிளகு சீரகத்தூள் என்று எதுவும் செர்க்கனுமாம்.
எல்லாம் சேர்த்த பின் அதை விளாவி அடுப்பை சிம்மில் வைக்கணும். விளாவிய பின் ரசம் கொதிக்ககூடாது. (அப்படி கொதித்தால் அது ரசமாகாது, ரசாபாசம் ஆகிடும்.) நுரைத்தால் போதும், இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், போட்டு வெடித்தபின் கறிவேப்பிலை போட்டு ரசத்தில் சேர்க்கனும்.
தாளிப்பு என்பதும் ஒரு கலை. எல்லாம் அழகாக பண்ணிவிட்டு கடைசியில் திருஷ்டிக்கு பொட்டு பெரிதாக வைத்தமாதிரி காந்தவிட்டுவிட்டு, “இதுதான் தாளிப்பு” என்றால் விளையாட்டில் படுதோல்விதான். அதனால், எப்படி தாளிக்கணும் என்பதற்கு ஒரு டிப்.
சீரகம் வெந்தயம் போன்றவை சீக்கிரமே வறுபட்டு கருகிவிடும். அதனால் கடுகும் சீரகமும் தாளிக்க வேண்டும் என்றால் முதலில் கடுகு வெடிக்க விடனும். உடனே சீரகம் சேர்த்து கூடவே கருவேப்பிலை சேர்த்துவிடலாம். எல்லாத்தையும் ஒண்ணா போட்டுவிட்டால் சிலது காந்தியிருக்கும், சிலது வெடித்தே இருக்காது.

2 comments:

  1. பிரமாண்டமான தகவல்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ள தகவல் அளிக்கவேண்டும் என்பதனால் நீண்ட பதிவாகிவிட்டது. நன்றி தோழரே!

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer